இந்த வாய்ப்பை மிஸ் பண்ணிடாதீங்க..!! சென்னை பல்கலைக் கழகத்தில் இலவசக்கல்வி!

சென்னை பல்கலைக் கழகத்தில்
சென்னை பல்கலைக் கழகத்தில்
முனைவர் என். பத்ரி

சுமார் நாற்பது எட்டு ஆண்டுகள் கல்விப் பணியாற்றியுள்ள டாக்டர்.என்.பத்ரி (1956) தனது பி.எச்.டி. படிப்பை கல்வியியல் மற்றும் ஆங்கிலத்தில் முடித்தவர். NCERT விருதையும் பெற்றவர்.அகில இந்திய வானொலியின் கல்வி ஒலிபரப்புக்கான ஆலோசனைக் குழுவில் உறுப்பினராக பணியாற்றியுள்ளார். பல்வேறு பல்கலைக்கழகங்களின் தொலைதூரக்கல்வியின் படிப்புகளுக்கு கருத்தாளாராக பணியாற்றியுள்ளார். பல முன்னோடி தமிழ் இதழ்களில் இவருடைய கட்டுரைகளும் சிறுகதைகளும் பிரசுரிக்கப்பட்டு வருகின்றன. தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் பங்கு கொண்டு தற்கால இளஞர்களுக்கு வழிகாட்டி வருகிறார்.

Updated on

தமிழகத்தில் பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள், ஆதரவற்றவர்கள், முதல் தலைமுறையினர், மூன்றாம் பாலினத்தவர் ஆகியோர் இலவச கல்வி திட்டத்தில் இளங்கலை படிப்பில் சேர்ந்து பயன்பெறலாம்.இந்தத் திட்டம் 2011 ஆம் ஆண்டு முதல் தமிழக அரசால் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. சென்னை பல்கலைக்கழகம் இந்த வருட கல்லூரி படிப்புகான சேர்க்கைக்கான அறிவிப்பு ஒன்றை சமீபத்தில் அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக சென்னை பல்கலைக்கழக பதிவாளர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:ஏழை மாணவர்கள் இளங்கலை படிப்புகளில் சேர்ந்து பயன்பெறும் வகையில், சென்னை பல்கலைக்கழகத்தில் கடந்த 2010-11 கல்வி ஆண்டு முதல் இலவச கல்வி திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின்கீழ், வரும் (2026-27) கல்வி ஆண்டில் சென்னை பல்கலைக்கழகத்தின் இணைப்பு அங்கீகாரம் பெற்ற அரசு உதவி பெறும் கல்லூரிகள், தனியார் சுயநிதி கல்லூரிகளில் இளங்கலை படிப்புகளில் சேர பிளஸ் 2 முடித்த ஏழை மாணவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இந்தச் சலுகையைப் பெற மாணவர்கள் 2025-26 கல்வி ஆண்டில் பிளஸ் 2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். குடும்ப ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்துக்குள் இருக்க வேண்டும். பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்கள், ஆதரவற்ற மாணவர்கள், குடும்பத்தில் பட்டப்படிப்பு படிக்கும் முதல் தலைமுறை மாணவர்கள், மூன்றாம் பாலினத்தவர்கள் தகுந்த ஆவணங்களுடன் பல்கலைக்கழக இணையதளத்தில் தங்கள் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும்.முதலில் விண்ணப்பிக்கும் தகுதி படைத்த விண்ணப்பதார்களுக்கு கல்லூரி சேர்க்கையில் முன்னுரிமை அளிக்கப்படும்.

இலவச கல்வி திட்டம் மற்றும் பதிவேற்றம் செய்ய வேண்டிய சான்றிதழ்கள் பற்றிய விவரம் சென்னை பல்கலைக்கழக இணையதளத்தில் (www.unom.ac.in) வெளியிடப்பட்டுள்ளது. பிளஸ் 2 தேர்வு முடிவு வெளியான தேதியில் இருந்து 15 நாட்களுக்குள் பல்கலைக்கழகத்தின் இணையதளத்தில் விண்ணப்பம், சான்றிதழ்களை பதிவேற்றம் செய்ய வேண்டும். அனைத்து சான்றிதழ்களுடன் பதிவேற்றம் செய்யப்பட்ட விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்கப்படும் என்றும்அதில் கூறப்பட்டுள்ளது.

தகுதியுள்ள மாணவர்கள் தங்கள் இருப்பிடத்திற்கு அருகில் உள்ள கல்லூரி ஒன்றை இப்போதே தேர்ந்தெடுத்துக் கொள்ளுவது நல்லது.தாங்கள் படிக்க விரும்பும் பாடப்பிரிவு பற்றியும் கல்வி ஆலோசகர்களிடம் கேட்டு தெரிந்து கொள்ளுவதும்,எதிர்காலத்தில் வேலை வாய்ப்புகளை கொண்டுவரும் படிப்புகளை தேர்ந்தெடுப்பதுவும் மிகவும் முக்கியம். இவற்றிற்கான ஆயத்தப்பணிகளிலும், வருவாய்த்துறையில் குடும்ப வருமான சான்றிதழையும் பிற தேவையான ஆவணங்களையும் இப்போதே மாணவர்கள் பெற்று வைத்துக் கொள்ளுவது நல்லது.அப்போதுதான் பள்ளி மேல்நிலைத் தேர்வு முடிவுகள் வந்தவுடன் இத்திட்டத்தின் கீழ் விரும்பும் கல்லூரியில் விரும்பும் பாடப்பிரிவில் சேர்ந்து படிப்பதில் சிக்கல் எதுவும் இருக்காது.இதனை உணர்ந்து மாணவர்கள் செயல்பட வேண்டிய காலம் இதுவாகும்.

logo
Kalki Online
kalkionline.com