தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில்(NCERT) அமைப்புக்கு நிகர்நிலைப் பல்கலைக்கழக அந்தஸ்து வழங்க பல்கலைக்கழக மானியக் குழு முடிவு செய்துள்ளது.
மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் தலைமையில் நேற்று நடந்த உயர்மட்டக் குழுக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
– இது குறித்து பல்கலைக்கழக மானியக் குழு தெரிவித்ததாவது:
நாட்டில் NCERT அமைப்புக்கு இப்போது ” டி நோவோ” பிரிவில் நிகர்நிலைப் பல்கலைக்கழக அந்தஸ்து வழங்கப் படுகிறது.இந்த டி நோவோ பிரிவில் நாட்டில் தற்போது 7 பல்கலைக்கழங்கள் உள்ளன.
டி-நோவோ பிரிவில் நிகர்நிலைப் பல்கலைக்கழக அந்தஸ்துக்காக யுஜிசியிடம் அனுமதிபெற்றபின், ஆராய்ச்சிப் படிப்புகள், புதிய ஆராய்ச்சிகள், வளர்ந்துவரும் துறைகள் குறித்த ஆராய்ச்சிகள், ஆய்வுகள், ஏற்கெனவே இருக்கும் படிப்புகள் குறித்த ஆய்வுகளை மேற்கொள்ள முடியும்.
பள்ளிக் கல்விக்கான உயர்மட்ட அமைப்பான என்சிஇஆர்டி, ஏற்கெனவே கல்விதொடர்பான பல்வேறு பணிகளில் ஈடுபட்டு வருகிறது.
குறிப்பாக கல்வி ஆராய்ச்சி மற்றும் புத்தாக்கம், மாணவர்களின் திறன்மேம்பாடு வளர்த்தல், பாடங்களின் தரத்தை மேம்படுத்துதல், கற்றல், கற்பித்தலில் புத்தாக்கத்தை கொண்டுவருதல் போன்றவற்றை செய்து வருகிறது
என்சிஇஆர்டி அமைப்புக்கு நிகர்நிலை பல்கலைக்கழக அந்தஸ்து கிடைத்துவிட்டால், என்சிஇஆர்டி பிறமாநிலப் பல்கலைக்கழகங்களுடனும், மத்தியப் பல்கலைக் கழகங்களுடனும் இணைந்து முதுநிலைப் பட்டப்படிப்புகளை வழங்கலாம்.
தற்போது என்சிஇஆர்டி மூலம் வழங்கப்படும் இளநிலை மற்றும் முதுநிலைப் படிப்புகள், உள்ளூர் பல்கலைக்கழங்களுடன் இணைந்து நடத்தப்படுகின்றன.
நிகர்நிலை பல்கலைக்கழக அந்தஸ்து வழங்கப்பட்டால் அனைத்து பல்கலைக் கழகங்களுடன் இணைந்து என்சிஇஆர்டி தனது படிப்புகளை வழங்க முடியும்.
கடந்த 1961-ம் ஆண்டு சொசைட்டி சட்டத்தின் கீழ் என்சிஇஆர்டி அமைப்பு உருவாக்கப்பட்டது. மத்திய அரசுக்கு கல்விரீதியான ஆலோசனைகள் வழங்கவும், உதவவும் அமைக்கப்பட்டது.
-இவ்வாறு தெரிவிக்கப் பட்டுள்ளது.