வேலைக்கு தகுதியில்லாதவர்கள் அதிகரித்து விட்டார்கள் - ஆளுநர் ரவியின் அடுத்த அதிரடி ஸ்டேட்மெண்ட்!

வேலைக்கு தகுதியில்லாதவர்கள் அதிகரித்து விட்டார்கள் - ஆளுநர் ரவியின் அடுத்த அதிரடி ஸ்டேட்மெண்ட்!
Published on

பணிபுரியும் வேலைக்கு ஏற்ற திறன்களை இன்றைய மாணவர்கள் பெற்றிருக்கவில்லை என்று ஆளுநர் ஆர். என். ரவி பேசியிருக்கிறார். புதிய கல்விக் கொள்கை தொடர்பான கருத்தரங்கில் பேசியவர், திறன் இல்லாத பொறியியல் பட்டதாரிகள் அதிகரித்து வருவதாக தெரிவித்துள்ளார்.

கடலூர் மாவட்டம் வடலூரில் நடந்த வள்ளலாரின் 200-வது ஜெயந்தி விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு ஆளுநர் பேசியது நேற்று முன்தினம் பேசியது சர்ச்சையானது. இந்நிலையில் சென்னையில் குருநானக் கல்லூரியில் நடைபெற்ற கருத்தரங்கில் கலந்து கொண்டு ஆளுநர் பேசியதும் அடுத்த சர்ச்சையாக உருவெடுத்திருக்கிறது.

வேலைக்கு ஏற்ற போதுமான திறன்களை தமிழ்நாட்டு மாணவர்கள் பெற்றிருக்கவில்லை என்று தொழில் நிறுவன அதிகாரிகள் தெரிவித்திருப்பதாக பேச்சின்போது ஆளுநர் குறிப்பிட்டுள்ளார். புதிய கல்விக்கொள்கையை அமல்படுத்துவதில் உள்ள சவால்கள் குறித்த கருத்தரங்கில் பேசும்போது இதை குறிப்பிட்டுள்ளார்.

தொழில் நிறுவன விரிவாக்கம் தொடர்பாக பல்வேறு தொழிலதிபர்களிடம் பேசிக்கொண்டிருந்தபோது தற்போதைய மாணவர்களின் கல்வித்தகுதி, திறன் குறித்து பேச்சு வந்தது. இந்தியாவில் பல லட்சம் மாணவர்கள் பட்டப்படிப்பு முடித்தும் வேலை இல்லாமல் இருப்பதற்கான காரணம் குறித்தும் பேசிக்கொண்டிருந்தோம். பல நிறுவனங்கள் புதிய ஊழியர்களை பணியில் அமர்த்தும்போது பட்டப்படிப்பை விட தனித்திறனையே விரும்புகின்றன.

பொறியியல் படிப்பை படித்து முடித்த 80 சதவீத மாணவர்களுக்கு வேலை வழங்க முடியாத நிலை இருந்து வருகிறது. தமிழகத்தில் உள்ள தொழில் நிறுவனங்களில் பணியமர்த்தும் அளவுக்கு நம்முடைய பட்டதாரிகளுக்கு போதுமான திறன் இல்லை என்கிற பதிலே கிடைத்திருக்கிறது.

பெரும்பாலும் இளைஞர்கள் பொறியியல், மருத்துவம் சார்ந்த படிப்புகளையே விரும்புகிறார்கள். கலை, அறிவியல் படிப்புகளுக்கு ஏனோ பெரிய அளவில் நாட்டமில்லை. பட்டப்படிப்பில் வரலாறு படிப்பவர்களுக்கும் அறிவியல் படிக்கும் வாய்ப்பையும் நாம் ஏற்படுத்தி தர வேண்டும். அனைத்துத் துறைகளையும் மாணவர்கள் நாடி, படிப்பதற்கான சூழல் வரவேண்டும்.

இளங்கலை பட்டம் முடித்த இளைஞர்களில் 70% பேருக்கும் வேலை கிடைப்பதில் சிரமம் இருக்கிறது. வேலை கிடைப்பதற்கான திறன்களை அவர்கள் வளர்த்துக் கொள்ள வேண்டியிருக்கிறது. மத்திய அரசு உருவாக்கியுள்ள தேசிய கல்விக்கொள்கை என்பது ஒரு புரட்சிகரமான கொள்கை. தற்போதுள்ள சிக்கல்களை தீர்ப்பதற்கான தீர்வுகளை புதிய கல்விக்கொள்கை கொண்டிருப்பதாகவும் ஆளுநர் பேசியிருக்கிறார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com