

பொதுவிடங்களில் தங்கு தடையற்ற மதுபானம் பயன்படுத்துவதை அனுமதிக்கும் தமிழக அரசின் உத்தரவு, எதிர்க்கட்சிகளின் கடுமையான விமர்சனத்தை எதிர்கொண்டிருக்கிறது. 12 மணி நேர வேலை நேரம் குறித்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்த தி.மு.கவின் கூட்டணிக் கட்சிகள் மதுபானம் குறித்த அறிவிப்பு விஷயத்தை மென்மையாக அணுக முடிவெடுத்திருக்கின்றன.
திருமண மண்டபங்களில் மதுபானங்கள் அருந்த ஒருபோதும் அனுமதி வழங்கப்பட மாட்டாது என்று அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கம் அளித்தாலும், மதுபானம் குறித்த அறிவிப்பு இதுவரை டாஸ்மாக் கடைக்கு எதிராக போராடி வந்தவர்களை அதிருப்தியடைய வைத்திருக்கிறது. இது குறித்து எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி, தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை உள்ளிட்டவர்கள் கடுமையான கண்டனத்தை தெரிவித்திருக்கிறார்கள்.
இளைஞர்களின் எதிர்காலத்தை சீரழித்து பண்பாட்டின் மீது திராவகத்தை வீசியுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி கடுமையாக விமர்சனம் செய்திருக்கிறார். மதுவிலக்கே ஒற்றை இலக்கு என கூறிவிட்டு 12 மணி நேரம் மதுக்கடைகளை திறந்து வைத்துள்ள தி.மு.க அரசுக்கு கண்டனங்களை தெரிவிக்க வேண்டியிருக்கிறது.
திருமண மண்டபங்களிலும், விளையாட்டுத் திடல்களிலும், மதுபானம் அருந்தலாம் என அனுமதிப்பது மதுவுக்கு அடிமையாக்கி இளைஞர்களின் எதிர்காலத்தை சீர்குலைத்துவிடும். அது மட்டுமன்றி, பொது அமைதியை சீர்குலைத்து குற்றச் செயல்களை அதிகரிக்கும் இத்தகைய மக்கள் விரோத செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டு வரும் தி.மு.க அரசுக்கு மக்கள் தகுந்த பாடம் புகட்டுவார்கள் என்று எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்திருக்கிறார்.
இது மது விற்பனையை பெருக்கும் முயற்சி என்று குறிப்பிட்டுள்ள தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலையும் தன்னுடைய கண்டனத்தை பதிவு செய்திருக்கிறார். மது ஆலைகளை மூடுவோம் என்று ஆட்சிக்கு வந்த அரசு, வருடா வருடம் உச்ச வரம்பு நிர்ணயித்து மது விற்பனையைப் பெருக்கும் முயற்சியில் உள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.
திருமண மண்டபங்கள், விளையாட்டு மைதானங்கள் உள்ளிட்ட பொதுமக்கள் கூடும் இடங்களில், மதுவுக்கு அனுமதி வழங்கும் சட்டத் திருத்தம் கொண்டு வந்திருக்கிறது இந்த திறனற்ற திமுக அரசு. மது ஆலைகளை மூடுவோம், மதுக்கடைகளின் எண்ணிக்கையைக் குறைப்போம் என்று கூறி ஆட்சிக்கு வந்த திமுக, வருடா வருடம் உச்ச வரம்பு நிர்ணயித்து மது விற்பனையைப் பெருக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது.
சட்டம் ஒழுங்கு ஏற்கனவே பொதுமக்களுக்குச் சவாலாக மாறிவிட்ட நிலையில், திமுகவினர் நடத்தும் மது ஆலைகளின் வருமானத்தைப் பெருக்குவதற்காக சமுதாயச் சீர்கேடுக்கு வழிவகுக்கும் நடவடிக்கைகளில் தொடர்ந்து திமுக ஈடுபட்டு வருவதை, வன்மையாகக் கண்டிக்கிறோம். உடனடியாக இந்த அரசாணையைத்
திரும்பப் பெற வேண்டும் என்று பா.ஜ.க சார்பாக தமிழக அரசை வலியுறுத்துகிறோம் என்றும் குறிப்பிட்டுள்ளார்
12 மணி நேர வேலை நேரம் திருத்த மசோதாவை தி.மு.க திரும்பப் பெற்றிருக்கிறது. அது போல் மதுபானம் விற்பனை குறித்த விஷயத்திலும் தி.முக தன்னுடைய முடிவை பரிசீலனை செய்யுமா என்கிற எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது.