உ.பி, குஜராத்தை குறிவைக்கும் ராகுல்காந்தியின் இந்திய ஒற்றுமை யாத்திரை Part2!

உ.பி, குஜராத்தை குறிவைக்கும் ராகுல்காந்தியின் இந்திய ஒற்றுமை யாத்திரை Part2!

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும் எம்.பி.யுமான ராகுல்காந்தி, இரண்டாம் கட்டமாக வருகிற ஜனவரி 14 ஆம் தேதி மணிப்பூர் மாநிலத் தலைநகர் இம்பாலில் இருந்து தனது “இந்திய ஒற்றுமை யாத்திரையை” தொடங்குகிறார். அவரது பயணம் 14 மாநிலங்களை கடந்து செல்லும் என்றாலும் முக்கியமாக உத்தரப்பிரதேசம் மற்றும் குஜராத்தை குறிவைத்து அவரது யாத்திரை இருக்கும் என்று சொல்லப்படுகிறது.

ராகுல் காந்தியின் “இந்திய ஒற்றுமை யாத்திரை” எந்தெந்த வழியாகச் செல்லும் என்பது இன்னும் இறுதி செய்யப்படாத நிலையில் அரசியல் முக்கியத்துவம் கருதி அவர் உத்தரப்பிரதேசம் மற்றும் குஜராத்தில் ஏறக்குறைய ஒருவாரத்தை செலவிடக்கூடும் என்று பெயர் குறிப்பிட விரும்பாத காங்கிரஸ் தலைவர்கள் இருவர் தெரிவித்தனர்.

80 மக்களவைத் தொகுதிகளைக் கொண்ட உத்தரபிரதேச மாநிலத்தில் ரேபரேலி தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட சோனியாகாந்தி ஒருவர் மட்டுமே காங்கிரஸ் கட்சி எம்.பி.யாவார். கடந்த இரண்டு மக்களவைத் தேர்தலில் குஜராத்தில் மொத்தம் உள்ள 26 மக்களவைத் தொகுதிகளையும் பா.ஜ.க. தட்டிச் சென்றது. அந்த மாநிலத்தில் பா.ஜ.க. 1998 ஆம் ஆண்டிலிருந்து தொடர்ந்து ஆட்சியில் இருந்து வருகிறது.

கடந்த ஆண்டு நடைபெற்ற இந்திய ஒற்றுமை யாத்திரையில் செல்லாத மாநிலங்களுக்கு இந்த முறை முன்னுரிமை அளிக்கப்படும் என்றும் குறிப்பாக உத்தரப்பிரதேசம் மற்றும் குஜராத் மாநிலங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்றும் காங்கிரஸ் வட்டாரத்தில் கூறப்படுகிறது. ராகுல்காந்திகடந்த யாத்திரையில் குஜராத் பக்கமே போகவில்லை. உ.பி.யில் மூன்று நாட்களே கழிந்த்து. இந்த பயணத்தின்போது உ.பி. மற்றும் குஜராத் மாநிலங்களில் குறைந்தது 6 அல்லது 7 நாட்கள் செலவிடப்படலாம் என தெரிகிறது.

ராகுல்காந்தி நடத்தவிருக்கும் இந்திய ஒற்றுமை யாத்திரையின் மையப் பொருளாக அரசியலமைப்புச் சட்டத்தை காப்பாற்ற வேண்டும் என்பதாக இருக்கும். மக்களவைத் தேர்தல் நெருங்கி வருவதால் இந்த யாத்திரை நடைப்பயணம் மற்றும் பேருந்து பயணத்தை உள்ளடக்கியதாக இருக்கும். மொத்தம் 14 மாநிலங்கள் மற்றும் 85 மாவட்டங்களை கடந்து இந்த பயணம் இருக்கும். யாத்திரை எந்நெந்த வழிகளில் செல்லும் என்பது ஜனவரி 8 ஆம் தேதி முடிவு செய்யப்படும்.

தற்போதைய நிலவரப்படி மணிப்பூர், நாகாலாந்தில் ஒருநாள், மேற்குவங்கத்தில் நுழைவதற்கு முன்பாக அஸ்ஸாமில் 3 அல்லது 4 நாட்கள் என இருக்கும். மேற்கு வங்கத்தில் காங்கிரஸ் கட்சிக்கு இரண்டு மக்களவை உறுப்பினர்களே உள்ளனர். மேற்குவங்கத்தில் ஒரு காலத்தில் காங்கிரஸ் கோட்டையாக இருந்த மாநிலத்தின் வடக்கு பகுதியில் யாத்திரை கவனம் செலுத்தும் என நம்பப்படுகிறது.

வடக்கு பெங்கால் முக்கியமானது. அங்குள்ள 4 தொகுதிகளில் 3 ரிசர்வ் தொகுதிகள். திரிணமூல் காங்கிரஸ் கட்சி வலுவாக உள்ள கொல்கத்தா மற்றும் தெற்கு பெங்காலுக்கு யாத்திரை செல்லாது என அரசியல் வட்டாரத்தில் கூறப்படுகிறது.

உத்தரப்பிரதேசத்தில் காங்கிரஸ் 2009 இல் 21 இடங்களில் வெற்றிபெற்றது. இதையடுத்து மன்மோகன் அரசு 200 இடங்களுக்கு மேல் வெற்றிபெற்று ஆட்சிக்கு வர முடிந்தது. அதன் பிறகு காங்கிரஸ் கட்சியின் செல்வாக்கு சரிந்துவிட்டது. 2009 இல் 21 இடங்களை வென்ற காங்கிரஸ் 2014 இல் 2 இடங்களை மட்டுமே வென்றது. 2019 ஆம் ஆண்டில் சோனியா ஒருவர் மட்டுமே வெற்றிபெற்றார்.

இந்திய ஒற்றுமை யாத்திரையின்போது நாங்கள் குஜராத்தை தவிர்க்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. ஆனால், இந்த முறை ராகுல், மகாராஷ்டிரத்திற்குள் நுழைவதற்கு முன்பாக  குஜராத்தில் விரிவான பயணத்தை மேற்கொள்வார் என்று பெயர் குறிப்பிட விரும்பாத மற்றொரு காங்கிரஸ் தலைவர் கூறினர்.

இந்த முறை இரண்டாம்கட்டமாக ராகுல்காந்டித தொடங்கவுள்ள இந்திய ஒற்றுமை யாத்திரை 55 நாட்கள் 14 மாநிலங்களில் உள்ள 358 தொகுதிகளை கடந்து செல்லும். இந்த யாத்திரையில் இந்தியா எதிர்க்கட்சி கூட்டணி தலைவர்களும் பங்கேற்கலாம் என கூறப்படுகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com