
யுபிஐ பரிவர்த்தனை என்பது இந்தியாவில் யுனிஃபைட் பேமெண்ட்ஸ் இன்டர்ஃபேஸ் ( யுபிஐ ) அமைப்பைப் பயன்படுத்தி செய்யப்படும் பணப்பரிமாற்றத்தைக் குறிக்கிறது. பயனர்கள் தங்கள் ஸ்மார்ட்போன்கள் அல்லது பிற டிஜிட்டல் சாதனங்களைப் பயன்படுத்தி வங்கிக் கணக்குகளுக்கு இடையே உடனடியாக பணத்தைப் பரிமாற்றம் செய்ய யுபிஐ உதவுகிறது. ஸ்மார்ட்போன் மற்றும் இணைய இணைப்பு இருந்தால் போதும், நொடிகளில் பணப் பரிவர்த்தனை செய்ய முடியும் என்பது இதன் சிறப்பு அம்சமாகும். இந்தியாவில் கோடிக்கணக்கானோர் யுபிஐ பணபரிவர்தனைகளை தினந்தோறும் பயன்படுத்தி வருகின்றனர். தற்போது ரோட்டு கடை முதல் சூப்பர் மார்கெட் வரை அனைத்துமே யுபிஐ பணபரிவர்தனை மூலமே நடைபெற்று வருகிறது.
இந்தியாவில் ‘Cashless Transaction’ எனும் டிஜிட்டல் பணபரிவர்த்தனையை ஊக்குவிக்கும் பொருட்டு கொண்டு வரப்பட்ட யுபிஐ பணப்பரிவர்த்தனைகள் கடந்த காலத்தை விட சமீபத்தில் அதிகரித்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
நீங்கள் ஒருவரிடம் பணம் கேட்க விரும்பினால், பணம் அனுப்பும் வசதியைப் பயன்படுத்தி, சம்பந்தப்பட்ட நபருக்குப் பணம் அனுப்பலாம் அல்லது உங்கள் யுபிஐ, ஐடியைக் கொடுத்து, அவரே உங்களுக்குப் பணம் அனுப்பும்படி கேட்டுக்கொள்ளலாம்.
அதேபோல் யுபிஐ பணப்பரிவர்த்தனையில் இருக்கும் 'Request Money' அம்சத்தை பயன்படுத்தி பணம் கேட்டும் ஒருவருக்கு கோரிக்கை அனுப்ப முடியும். ஆனால் பல யுபிஐ செயலிகளில், ‘Request Money’ (பணம் கேட்பு) வசதியை நிறுத்திப்பட்டுள்ளதால், இனிமேல் ஒருவரிடம் பணத்தைக் கேட்பதற்கு அந்த செயலியைப் பயன்படுத்த முடியாது.
நீங்கள் கூகுள் பே அல்லது போன் பே போன்ற செயலிகளை பயன்படுத்தும் பயனர்கள் என்றால், இனிமேல் அதில் பணம் கேட்கும் வசதி இருக்காது. அதனால் நீங்கள் பணம் அனுப்ப மட்டுமே முடியும். ஆனால் அதுவே நீங்கள் பேடிஎம் போன்ற செயலிகளை பயன்படுத்தும் பயனர்கள் என்றால், பணம் கேட்கும் வசதி இருக்கலாம். ஆனால், பல செயலிகளில் இந்த வசதி படிப்படியாக நிறுத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில் 'Request Money' வசதியை சிலர் தவறாக பயன்படுத்தி வருவதால், வரும் அக்டோபர் மாதம் 1-ம் தேதி முதல் நிரந்தரமாக நீக்க இந்திய தேசிய கொடுப்பனவு நிறுவனம் (NCPI) முடிவு செய்துள்ளது. டிஜிட்டல் பரிவர்த்தனையில் பயனர்களின் பாதுகாப்பை வலுப்படுத்தவும், மோசடிகளை தடுக்கவும் இம்முடிவை எடுத்துள்ளதாக NCPI தெரிவித்துள்ளது.
கடந்த ஆகஸ்ட் 1-ம்தேதி முதல் யுபிஐ பண பரிவர்த்தனைக்கு பல்வேறு புதிய விதிமுறைகளை தேசிய பணப்பரிவர்த்தனை கழகம் (NPCI)அமல்படுத்திய நிலையில் தற்போது இந்த விதிமுறையை கொண்டு வந்துள்ளது.