UPI பரிவர்த்தனைகள் நான்கு மடங்கு உயர வாய்ப்பு - ரிசர்வ் வங்கி ஆளுநர்!

UPI பரிவர்த்தனைகள் நான்கு மடங்கு உயர வாய்ப்பு - ரிசர்வ் வங்கி ஆளுநர்!
Published on

யூபிஐ பரிவர்த்தனைகள் நான்கு மடங்காக உயர்வதற்கு வாய்ப்பிருப்பதாக ரிசர்வ் வங்கியின் ஆளுநர் சக்திகாந்த தாஸ் தெரிவித்திருக்கிறார். தற்போது தினமும் 26 கோடி பரிவர்த்தனைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் வெகு விரையில் இது 100 கோடி பரிவர்த்தனைகளை கடந்துவிடும் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும் அதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

டீமானிடைசேஷன் நடவடிக்கைக்கு பின்னர் டிஜிட்டல் டிரான்ஸ்க்ஷன் நாடு முழுவதும் அதிகரித்து வந்தது. கொரனா தடுப்பு பரவல் காலத்தில் இதுவே அடுத்த கட்டத்திற்கு நகர்ந்தது. தற்போது 2000 ரூபாய் நோட்டுகள் திரும்பப் பெறப்பட்டு வருவதால் டிஜிட்டல் பரிவர்த்தனைகள் இன்னும் அதிகரிக்க வாய்ப்புள்ளது. முன்பு சிறிய அளவிலான தொகைகள் மட்டுமே யூபிஐ மூலம் பரிவர்த்தனை செய்யப்பட்டன. தற்போது லட்சக்கணக்கான ரூபாய் யூபிஐ மூலமாகவே அனுப்பப்படுகிறது.

2023ஆம் ஆண்டுக்கான டிஜிட்டல் வழி பரிவர்த்தனைகள் குறித்த விழிப்புணர்வு வாரம் கொண்டாடப்பட்டு வருகிறது. நேற்று நடந்த நிகழ்ச்சியொன்றில் கலந்து கொண்டு பேசிய ரிசர்வ் வங்கியின் ஆளுநர், இந்தியாவில் டிஜிட்டல் பரிவார்த்தனைகளின் போக்கு குறித்து விரிவாக பேசியிருக்கிறார்.

டிஜிட்டல் பரிவர்த்தனைகள் அதிகமாகும்போது அவற்றை கையாளுவதற்கான கட்டமைப்பு இருக்கிறதா என்கிற கேள்விக்கு ரிசர்வ் வங்கி ஆளுநர் பதிலளித்திருக்கிறார். தினமும் 100 கோடி பரிவர்த்தனைகளை கையாளும்படியான கட்டமைப்பு இருக்கிறது என்றும், யூபிஐ பிளாட்பார்மில் தினமும் லட்சக்கணக்கான புதிய வாடிக்கையாளர்களையும் சேர்த்துக்கொள்ள முடியும் என்று தெரிவித்துள்ளார்.

அனைத்து வங்கிகளும், பரிவர்த்தனைகளை மேற்கொள்ளும் ஆபரேட்டர்களும் ஒத்துழைப்பு தரவேண்டும் என்றும், இல்லாவிட்டால் டிஜிட்டல் பரிவர்த்தனைகளின் பலனை முழுமையாக பெறமுடியாது என்றும் தெரிவித்துள்ளார். யூபிஐ பரிவர்த்தனை செய்ய முன்வரும் வாடிக்கையாளர்களுக்கு அதன் சாதகங்கள் பற்றியும், பாதுகாப்பு அம்சங்கள் குறித்தும் வங்கிகள் விளக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டிருக்கிறார்.

டிஜிட்டல் பரிவர்த்தனைகள் அதிகமாகி வருவது குறித்த குறிப்பிட்ட ஆளுநர், 2017 ஜனவரி மாதத்தில் டிஜிட்டல் பரிவர்த்தனைகள் 45 லட்சம் இருந்தாகவும் கடந்த ஆறு ஆண்டுகளில் பல மடங்கு உயர்ந்திருப்பதாகவும் தெரிவித்துள்ளார். கடந்த ஜனவரி மாதம், 804 கோடி பரிவர்த்தனைகள் நடந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.

அதே நேரத்தில் யூபிஐ மூலமாக பரிவர்த்தனை செய்யப்படும் பணங்களின் மதிப்பும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. முன்பு சிறிய தொகைகள் மட்டுமே யூபிஐ மூலமாக பரிவர்த்தனை செய்யப்பட்டு வந்தன. தற்போது மதிப்பும் அதிகரித்திருக்கிறது. 2017 ஜனவரி மாதம் 1700 கோடி ரூபாய் மட்டுமே பரிவர்த்தனை செய்யப்பட்டது. ஆனால், 2023 ஜனவரி காலகட்டத்தில் ஏறக்குறைய 13 லட்சம் கோடி ரூபாய் யூபிஐ மூலம் பரிவர்த்தனை செய்யப்பட்டிருக்கிறது.

அடுத்த கட்டமாக, நம்மூர் யூபிஐ சிஸ்டத்தை வெளிநாடுகளில் உள்ள சிஸ்டத்தோடு இணைக்கும் பணிகள் ஆரம்பமாக உள்ளன. முதல் கட்டமாக சிங்கப்பூர் உடனான யூபிஐ பரிவர்த்தனைகளுக்கான பணிகள் நிறைவடையும் கட்டத்தில் இருக்கின்றன. அமலுக்கு வரும் பட்சத்தில் சிங்கப்பூர்வாசிகளுக்கு இங்கிருந்து உடனுக்குடன் பணம் அனுப்ப முடியும். அங்கிருந்து இந்திய மதிப்பிலான பணத்தையும் உடனே பெற முடியும்.

முன்னர் சிங்கப்பூர் டாலர்களை மாற்றவேண்டுமென்றால் கடைகளுக்கு நேரில் சென்று இந்திய மதிப்பில் மாற்ற வேண்டியிருந்தது. பின்னர் இணையம் மூலமாக செய்ய முடிந்தாலும், 24 மணி நேரம் காத்திருக்க வேண்டியிருக்கிறது. அடுத்த ஆண்டு ஒரே ஒரு செகண்ட்டில் சிங்கப்பூர் டாலர்களை இந்திய ரூபாய் மதிப்புக்கு மாற்றிக்கொள்ள முடியும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com