பாகிஸ்தான் தீவிரவாதி தஹாவூர் ராணாவை இந்தியாவிடம் ஒப்படைக்க அமெரிக்க நீதிமன்றம் உத்தரவு!

பாகிஸ்தான் தீவிரவாதி தஹாவூர் ராணாவை இந்தியாவிடம் ஒப்படைக்க அமெரிக்க நீதிமன்றம் உத்தரவு!
Published on

மும்பை மாநகரில் 2008ம் ஆண்டு லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாத அமைப்பு மிகப்பெரிய தாக்குதலை நடத்தியது. தானியங்கி துப்பாக்கி, வெடிகுண்டுகளுடன் மும்பைக்கு வந்த பத்து பாகிஸ்தான் தீவிரவாதிகள் மும்பையின் தாஜ் ஹோட்டல், டிரிடெண்ட் ஹோட்டல், சி.எஸ்.டி. ரயில் நிலையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கண்ணில்பட்ட அப்பாவி மக்களை சுட்டுத்தள்ளினர். யாரும் எதிர்பாராத இந்தத் தாக்குதலை எதிர்த்துப் போராடிய தேசியப் பாதுகாப்புப் படை மற்றும் மும்பை போலீசார் மூன்று நாட்கள் தீவிரவாதிகளுடன் சண்டையிட்டு அவர்களைக் கொன்றனர். உயிருடன் பிடிபட்ட அஜ்மல் கசாப் எனும் தீவிரவாதிக்கு நீதிமன்றத்தில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டு அது நிறைவேற்றப்பட்டது.

இந்த நிலையில், மும்பை தீவிரவாதத் தாக்குதலில் தஹாவூர் ராணாவுக்கு தொடர்பு இருப்பதாக இந்தியா வைத்த கோரிக்கையை ஏற்று அமெரிக்க போலீசார் அவரை கைது செய்தனர். அதைத் தொடர்ந்து தஹாவூர் ராணாவை இந்தியாவுக்கு நாடு கடத்துவது தொடர்பான வழக்கு கடந்த 16ம் தேதி கலிஃபோர்னியா நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இந்த விசாரணையின்போது, ‘‘ராணாவின் சிறு வயது நண்பர் பாகிஸ்தானிய அமெரிக்கரான டேவிட் கோல்மன் ஹெட்லி லஷ்கர்-இ-தொய்பாவுடன் தொடர்பு கொண்டிருந்ததையும், ஹெட்லிக்கு உதவுவதன் மூலமும், அவரது நடவடிக்கைகளுக்குப் பாதுகாப்பு கொடுப்பதன் மூலமும், அவர் பயங்கரவாத அமைப்பு மற்றும் அதன் கூட்டாளிகளுக்கு ஆதரவளிப்பதை ராணா அறிந்திருந்தார்.

ஹெட்லி உடனான சந்திப்புகள், அதில் பேசப்பட்டது, தாக்குதல்களின் திட்டமிடல் குறித்து ராணாவுக்குத் தெரியும். ஆகவே, சதித்திட்டத்தின் ஒரு பகுதியாக ராணா இருந்திருக்கிறார். எனவே, தீவிரவாதச் செயலில் முக்கியக் குற்றத்தை அவர் செய்ததற்கான சாத்திக்கூறுகள் இருக்கின்றன" என்று அரசு வழக்கறிஞர்கள் வாதாடினர். ஆனால், ராணாவின் வழக்கறிஞர் இதற்கு மறுப்பு தெரிவித்தார். இறுதியில் நீதிபதி ஜாக்குலின் சூல்ஜியன் (Jacqueline Chooljian), “எடுத்துவைக்கப்பட்ட வாதங்களின் அடிப்படையில், ராணா மீது முன்வைக்கப்பட்டிருக்கும் குற்றங்களுக்காக அவர் நாடு கடத்தப்படுவார் என்று இந்த நீதிமன்றம் முடிவு செய்கிறது" என்று உத்தரவிட்டார்.

இதையடுத்து, மும்பை தீவிரவாதத் தாக்குதலில் தொடர்புடையவராகக் குற்றம் சாட்டப்பட்டு, அமெரிக்கச் சிறையிலிருக்கும் பாகிஸ்தானைப் பூர்வீகமாகக் கொண்ட தஹாவூர் ராணா இந்தியாவிடம் ஒப்படைக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com