
பாலஸ்தீனம் இஸ்ரேலுக்கு இடையே தீவிரமான மோதல் நடந்து வரும் நிலையில், அமெரிக்க நாட்டின் ட்ரோன்கள் திடீரென காசாவில் இறங்கியுள்ளது பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
இஸ்ரேல் மீது கடந்த அக்டோபர் 7ஆம் தேதி திடீரென பாலஸ்தீனத்தைச் சேர்ந்த ஹமாஸ் படையினர் திடீர் தாக்குதல் நடத்தினர். அதன் பிறகு இஸ்ரேல் நாட்டுக்குள் ஊடுருவி வந்து பொதுமக்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தினர். மேலும் பலரை பிணையக் கைதிகளாகப் பிடித்து சென்றதால், அவர்களின் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக இஸ்ரேல் போரை அறிவித்தது.
இதில் முதற்கட்டமாக காசா மீது ஏவுகணையை வீசிய இஸ்ரேல் கொஞ்சம் கொஞ்சமாக போரை தீவிரப்படுத்தி வருகிறது. இதனால் அங்கு பெரும் பதற்றம் ஏற்பட்டு வரும் நிலையில், திடீரென அமெரிக்காவின் ட்ரோன்கள் காசா நகரில் சுற்றித்திரிவதால் கூடுதல் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 7ம் தேதி ஹமாஸ் பயங்கரவாதிகள் இஸ்ரேல் நாட்டவர்கள் பலரை பிணையக் கைகளாகப் பிடித்துச் சென்று, அதில் சிலரை அவர்களே விடுவித்திருந்தாலும், பலர் இன்னும் அவர்களின் வசத்தில்தான் உள்ளனர். அவர்களை காப்பாற்றுவதற்கு எடுத்த எந்த முயற்சிகளும் கை கொடுக்கவில்லை.
இதனிடையே அந்த பிணையக் கைதிகள் எங்கு இருக்கிறார்கள் என்பதைக் கண்டறியதான் காசாவுக்குள் அமெரிக்காவின் ஆளில்லா ட்ரோன் விமானங்கள் ஊடுருவிச் சென்றுள்ளது. கடந்த ஒரு வாரமாகவே இப்படி ட்ரோன்களை அனுப்பி அவர்களின் இருப்பிடத்தைக் கண்டறிய அமெரிக்கா தீவிர முயற்சிகள் செய்து வருகிறது. அவர்கள் அனைவருமே சுரங்கப்பாதைகளில் அடைக்கப்பட்டிருக்கலாம் என நம்பப்படும் நிலையில், அந்த பிணையக் கைதிகளில் பத்துக்கும் மேற்பட்ட அமெரிக்கர்கள் இருக்கிறார்கள் என தகவல்கள் வெளிவந்துள்ளது.
இதன் காரணமாகவே தன் நாட்டைச் சேர்ந்தவர்களின் இருப்பிடத்தைக் கண்டுபிடிக்க அமெரிக்கா ட்ரோன்களை அனுப்பி தேடி வருவதாக சொல்லப்படுகிறது. மறுபுறம் இஸ்ரேல் படைகள் காசா நகரை முற்றிலுமாக சுற்றி வளைத்து கொடூர தாக்குதல் நடத்தி வருகின்றனர். ஏனெனில் காசா நகரில் அதிகப்படியான ஹமாஸ் படையினர் பதுங்கி உள்ளார்கள் என இஸ்ரேல் ராணுவத்திற்கு தகவல் கிடைத்ததால், அவர்களை முற்றிலுமாக ஒழிப்பதை லட்சியமாகக் கொண்டு இஸ்ரேல் தீவிர தாக்குதலில் ஈடுபட்டுள்ளது.
ஆனால், இஸ்ரேலின் இந்த தாக்குதலில் ஏராளமான பொதுமக்கள் மற்றும் குழந்தைகள் பலியாகியுள்ளனர். போரை நிறுத்த ஐ.நா சபை மற்றும் பல்வேறு நாடுகள் வலியுறுத்தியும் இஸ்ரேல் பாலஸ்தீனயர்கள் மீது கடும் தாக்குதல் நடத்திவருகிறது.