ஆயுதங்களை சுமந்து கொண்டு முதல் அமெரிக்க போர் விமானம் இஸ்ரேலை வந்தடைந்தது. இதனால் போர் மேலும் தீவிரமடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஏற்கனவே காசா மீது இஸ்ரேல் தொடர்ந்து வான்வழி தாக்குதல்கள் நடத்தி வரும் நிலையில், ஹமாஸ் தீவிரவாதிகளின் மறைவிடமும் கொஞ்சம் கொஞ்சமாக அழிக்கப்பட்டு வருகிறது. இந்தப் போரில் பல நாடுகள் இஸ்ரேலுக்கு ஆதரவாக முன்வந்துள்ளனர். இதற்கிடையில் அமெரிக்க ஆயுதங்களை சுமந்து கொண்டு வந்த முதல் போர் விமானம் இஸ்ரேலுக்கு வந்து சேர்ந்துள்ளதாக இஸ்ரேல் பாதுகாப்புப் படை தெரிவித்துள்ளது.
இதுகுறித்து எக்ஸ் தளத்தில் பதிவு வெளியிட்டுள்ள இஸ்ரேல் பாதுகாப்புப் படை "இந்த போரில் எங்கள் நாட்டின் பாதுகாப்பையும், பலத்தையும், எங்கள் நாட்டு படைகளின் ஒத்துழைப்பையும் உறுதிப்படுத்துவதே எங்களுக்கு முக்கியமானது" என அந்தப் பதிவில் கூறியுள்ளனர்.
அமெரிக்கா தனது நாட்டின் சக்தி வாய்ந்த USS Gerald R என்ற போர்க்கப்பலை இஸ்ரேலிடம் ஒப்படைத்துள்ளது. இது அமெரிக்க கடற்படையின் மேம்படுத்தப்பட்ட விமானம் தாங்கி போர்க்கப்பலாகும். ஹமாஸ் இயக்கம் இஸ்ரேல் மீது போரைத் தொடங்கியவுடன், அமெரிக்கா இஸ்ரேல் நாட்டுக்கு உடனடியாக ஆதரவு கொடுத்தது. இதில் இஸ்ரேலில் இருக்கும் அமெரிக்க தளவாடங்களில் உள்ள ஆயுதங்களையும் அவர்களைப் பயன்படுத்த அனுமதி அளித்துள்ளது.
இதுவரை ஹமாஸ் இயக்கத்திற்கு எதிராக இஸ்ரேல் நான்கு நாட்களாக போர் தொடுத்து வரும் சூழலில், இதுவரை ஆயிரத்திற்கும் அதிகமான இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டுள்ளதாகவும், 2500 கும் அதிகமான நபர்கள் காயமடைந்துள்ளனர் என்றும் மற்றும் 50க்கும் மேற்பட்ட நபர்கள் பிணைக் கைதிகளாக கடத்திச் செல்லப்பட்டது உறுதி செய்யப்பட்டுள்ளது.
எனவே தற்போது அமெரிக்கா இஸ்ரேலுக்கு ஆயுத உதவி செய்வதால் இஸ்ரேலுக்கு ஏற்பட்ட சேதத்தை விட பாலஸ்தீன ஹமாஸ் இயக்கத்திற்கு அதிக சேதம் ஏற்படும் என சொல்லப்படுகிறது.