

பொதுவாகவே அமெரிக்காவில் வசிக்கும் இந்தியர்கள் அங்கு இருக்கும் அதீதமான மருத்துவ செலவுகளை எப்போதும் சொல்லி கவலைப்படுவதை பார்த்திருப்பீர்கள். அமெரிக்காவில் ஏதேனும் உடல்நலம் பாதிக்கப்பட்டால் நாங்கள் சம்பாதிக்கும் பணம் முழுவதையும் இழக்கக் கூடும் என்று சொல்வார்கள். இதன் காரணமாகவே இந்தியா வரும் போது தங்களுக்குத் தேவையான அத்யாவசியமான மருந்துகளை எச்சரிக்கையாக வாங்கிச் செல்வது வழக்கம்.
அவர்களின் கூற்று உண்மை என நிரூபித்து தற்போது உலக அளவில் அதிக கட்டணம் பெறப்படும் அமெரிக்க மருத்துவ நிலை பற்றிய கவனத்தை ஈர்த்துள்ளது அமெரிக்க பெண் ஒருவரின் காணொளிப் பதிவு.
அமெரிக்காவைச் சேர்ந்த விக்டோரியா (Victoria) என்ற பெண்மணி, அமெரிக்காவில் தனக்குத் தேவைப்பட்ட வெறும் 6 மாத்திரைகளுக்கு 1,000 டாலர்கள் (சுமார் ரூ.95,000 வரை) பில் வந்ததாகக் கூறி வெளியிட்ட வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
அதில் அவர் அமெரிக்க சுகாதார அமைப்பை விமர்சித்ததுடன், ஒரே மருந்துக்கு நோயாளிகளிடம் ஏன் அடிக்கடி முற்றிலும் மாறுபட்ட விலைகள் வசூலிக்கப்படுகின்றன என்றும் கேள்வி எழுப்பியிருந்தார்.
அமெரிக்காவில் 1,000 டாலர் செலவாகும் என்று சொல்லப்பட்ட நிலையில் தனக்குத் தேவையான அந்த ஆறு மாத்திரைகளுக்கான 1,000 டாலர்களை தனது காப்பீட்டு நிறுவனம் அதற்கான பணத்தைச் செலுத்தாது என்பதால் விரக்தி அடைந்த விக்டோரியா அதை வாங்க வேறு மாற்று வழியைத் தேடி யுள்ளார்.
"இந்த மருந்தை அமெரிக்காவில் வாங்கினால் என் சொந்தப் பணத்தில் 1,000 டாலர் செலவாகும், ஆனால் நான் அதை 25 டாலருக்கு வாங்கினேன். ஆமாம், வெறும் ஆறு சின்ன மாத்திரைகளுக்கு, என் சொந்தப் பணத்தில் 1,000 டாலர் செலவழிக்க வேண்டியிருந்தது, ஏனென்றால் என் காப்பீடு அதை ஏற்காது," என்று விக்டோரியா அந்தக் காணொளியில் கூறியுள்ளார்.
இறுதியில் இந்திய உற்பத்தியாளரிடமிருந்து நேரடியாக மருந்தைப் பெறக்கூடிய ஒரு கனடிய மருந்தகத்திற்கு மருந்துச் சீட்டை அனுப்புமாறு தனது மருத்துவர் அறிவுறுத்தியதாகவும் அதன் படி தான் செயல்பட்டதாகவும் தான் சில நூறு டாலர்கள் செலவழிக்கக் தயாராக இருந்தும் அதன் இறுதி விலை மிகவும் ஆச்சரியத்தை அளித்தது என குறிப்பிட்டுள்ளார். அதன் விலை சுமார் 25 டாலர். மருந்துக்கு 10 டாலர், விநியோகத்திற்கு 15 டாலர். இந்தியாவில் உள்ள உற்பத்தியாளரிடமிருந்து நேரடியாக அவருக்கு சென்றுள்ளது.
இந்த நிகழ்வுதான் அமெரிக்காவில் பரிந்துரைக்கப்பட்ட மருந்துகளின் விலை நிர்ணயக் கட்டமைப்பு குறித்து விக்டோரியாவைக் கேள்வி எழுப்ப வைத்தது.
"அமெரிக்காவில் சுகாதார அமைப்பு ஒரு கேலிக்கூத்தாக இருக்கிறது. நாங்கள் முழுமையாக ஏமாற்றப்படுகிறோம். இதற்கு ஆயிரம் டாலர்கள் செலவாகும் என்கிறீர்களா? ஆனால், என்னால் அந்த மருந்துக்கு பத்து டாலர்கள் மட்டுமே செலுத்த முடிந்தது என்றால் மருந்து தொடர்பான கூடுதல் செலவுகள் எங்கே செல்கின்றன ?" என்றும் விக்டோரியா கேள்வி எழுப்பியுள்ளார்.
அமெரிக்காவின் அதிக மருத்துவச் செலவுகள் மற்றும் காப்பீட்டு குறைபாடுகள் குறித்து விவாதத்தை கிளப்பிய இந்த வீடியோ வைரலான நிலையில் குறைந்த விலையில் மருந்துகளை வழங்கும் இந்தியாவுக்கும் பாராட்டுகள் குவிகிறது.
மேலும் அமெரிக்காவில் பரிந்துரைக்கப்பட்ட மருந்துகள் மற்றும் சுகாதார சேவைகளின் அதிக விலையை நீண்ட காலமாக விமர்சித்து வரும் பல பயனாளர்களிடையே அவரது கருத்துக்கள் எதிரொலித்து அவர் எழுப்பிய கேள்விக்கு ஆதரவாகவும் அதிகமாகும் அமெரிக்க மருத்துவ கட்டணங்கள் குறித்தும் விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன.
இந்த விமர்சனத்தில் ஆமெரிக்காவில் மருந்தை வாங்குவதை விட இந்தியாவிற்குப் பயணம் செய்வது மலிவாகவே இருக்கும் என்று ஒரு பயனர் தெரிவித்துள்ளார்.
மேலும் "இந்தியாவுக்கு விமானத்தில் செல்லுங்கள், இந்தியாவில் வார விடுமுறையைக் கொண்டாடுங்கள், மருந்தகத்திற்குச் சென்று உங்களுக்கு வேண்டியதை வாங்கிக்கொண்டு, அமெரிக்காவுக்குத் திரும்பி வாருங்கள். அப்போதும் கூட, இதற்கு உங்களுக்கு 1000 டாலருக்கும் குறைவாகவே செலவாகும்," என்றும் அவர் எழுதியிருந்தது அங்கிருக்கும் இந்தியர்கள் ஏற்கக் கூடிய கருத்தாக கருதப்படுகிறது.
இந்த நிலையில் அமெரிக்காவில் மருந்துகளின் விலை பல மடங்கு அதிகமாக இருப்பதற்கு அங்குள்ள தனியார் மருத்துவக் காப்பீட்டு முறை, மருந்து நிறுவனங்களின் ஏகபோக உரிமை மற்றும் அரசு தலையீடு இல்லாததே முக்கிய காரணங்களாகும் என்கின்றனர் வல்லுநர்கள். இதற்கு நேர்மாறாக, இந்தியாவில் அரசு விதிகள் மற்றும் கடுமையான விலை கட்டுப்பாடுகள் இருப்பதால், தரமான மருந்துகள் மிகக் குறைந்த விலையில் கிடைப்பதாகவும் குறிப்பிடுகிறார்கள்.
இந்தச் சம்பவம் மூலம் தனியொரு பெண்ணாக விக்டோரியா எழுப்பிய கேள்விகள் அமெரிக்காவின் சுகாதாரக் கட்டமைப்பு குறித்த உலகளாவிய விவாதத்தை மீண்டும் உருவாக்கியுள்ளதாக கூறப்படுகிறது. இதன் விளைவுகள் என்னவாக இருக்கும் என்பதை அமெரிக்கர்களுடன் அங்கு வசிக்கும் பல்வேறு நாட்டினரும். ஆவலுடன் கவனித்து வருகின்றனர்