
நிதி ஒதுக்கீடு தொடர்பான புதிய மசோதாவுக்கு அமெரிக்காவில் இன்னும் ஒப்புதல் கிடைக்காததால், அமெரிக்கா நாடாளுமன்றம் முழுவதும் முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
அமெரிக்க நாடாளுமன்றம் மிகவும் வலிமையானது. புரியும்படி சொல்ல வேண்டுமென்றால், இந்தியாவில் எடுக்கப்படும் சில முக்கிய முடிவுகளுக்கு அமைச்சராவை ஒப்புதல் இருந்தால் போதும். ஆனால் அமெரிக்காவில் நாடாளுமன்றத்தின் ஒப்புதல் நிச்சயம் தேவை. அதாவது அமெரிக்க அரசின் செலவுகள், ஆய்வுக்கான நிதி, அரசு ஊழியர்களின் சம்பளம் உள்ளிட்டவை அடங்கிய நிதிக்கான ஒதுக்கீட்டிற்கு நாடாளுமன்றத்தின் ஒப்புதல் தேவை. ஏற்கனவே ஒதுக்கப்பட்ட நிதிகள் செப்டம்பர் மாதம் வரை மட்டுமே இருந்தது. இதைத்தொடர்ந்து நவம்பர் மாத இறுதியில் நிதி ஒதுக்கீட்டு ஒப்புதல் மசோதா நிறைவேற்றப்படும் என கூறப்பட்டது.
இந்நிலையில் அங்கு மீண்டும் நாடாளுமன்றத்தில் சலசலப்பு ஏற்பட்டுள்ளதால், நிதி ஒதுக்கீடு தொடர்பான தீர்மானத்தை நிறைவேற்ற விடாமல் எதிர்க்கட்சியினர் முட்டுக்கட்டை போடுகின்றனர். இது அமெரிக்காவுக்கு மிகப்பெரிய பிரச்சனையாக மாறியுள்ளது. அரசாங்க செலவுகளுக்கு போதிய நிதி இல்லையென்றால், ஒட்டுமொத்த அமெரிக்காவும் முடங்கிவிடும்.
அமெரிக்க நாடாளுமன்றத்தில் சபாநாயகர் பொறுப்பில் இருப்பவர் ஒரு எதிர்க்கட்சித் தலைவர் என்பதால், இந்த மசோதாவை ஏற்றுக் கொள்வதில் பெரும் சிக்கல் நிலவி வருகிறது. இந்த நிதி ஒதுக்கீட்டு பட்ஜெட்டில் பல மாற்றங்கள் செய்யப்பட்டிருப்பதாலேயே ஒப்புதல் அளிக்க தாமதமாகிறது என சொல்லப்பட்டு வரும் நிலையில், ஆளும் கட்சியில் உள்ள சில பழமைவாத எம்பி-க்களே இதற்கு ஆதரவு தருவதில்லை.
அமெரிக்க பொருளாதாரம் தற்போது மோசமாக இருப்பதாலேயே அரசு சார்ந்த அதிக செலவுகளை குறைக்கும் நோக்கில் இந்த மசோதா கொண்டுவரப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. ஒருவேளை இவர்களுக்குள் சமரசம் ஏற்படாமல் அமெரிக்கா முடங்கினால், அமெரிக்காவின் கடன் மதிப்பீட்டுக் குறியீடு கடுமையாக பாதிக்கப்படும். விரைவில் இந்த தீர்மானம் நிறைவேறினால் மட்டுமே அமெரிக்கா மிகப்பெரிய பொருளாதார பிரச்சினைகளிலிருந்து தப்பும் என வல்லுனர்கள் கூறுகின்றனர்.
இதற்கிடையே அமெரிக்காவில் அதிபர் தேர்தல் குறித்த பிரச்சாரங்கள் தீவிரமாக நடந்து வரும் நிலையில், அமெரிக்கா முடங்கினால், அது ஆளும் பைடன் அரசுக்கு மிகப்பெரிய பிரச்சினையாக மாறிவிடும். எனவே இதை கருத்தில் கொண்டு அமெரிக்க அரசியல் தலைவர்கள் தீவிர ஆலோசனை நடத்தி வருகிறார்கள்.