அமெரிக்க அதிபர் ஜோ பைடன் ஐரோப்பிய சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். இப்பயணத்தின் இடையே இன்று திடீரென உக்ரைன் நாட்டிற்கு ஜோ பைடன் சென்றுள்ள சம்பவம் உலக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவின் நேட்டோ படையில் உக்ரைன் சேருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து ரஷியா, உக்ரைன் மீது போர் தொடுத்தது. உக்ரைன் - ரஷ்யா போர் கடந்த ஓராண்டு காலமாக நடைபெற்று வரும் நிலையில் திடீர் பயணமாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உக்ரைன் தலைநகர் கீவ் சென்றுள்ளார்.
இப்போரில் உக்ரைனுக்கு பக்கபலமாக அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் பல வகைகளில் உதவிகளை அளித்து வருகின்றன.
இந்தப் போரால் உக்ரைனில் பொதுமக்கள், ராணுவ வீரர்கள் உட்பட ஆயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். போருக்கு அஞ்சி லட்சக்கணக்கான மக்கள் அண்டை நாடுகளுக்கு அகதிகளாக சென்றுள்ளனர். ரஷ்யாவின் இந்த ராணுவ நடவடிக்கைக்கு அமெரிக்க உள்ளிட்ட உலக நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்தனர். இதேபோல் உக்ரைனுக்கு ராணுவ உபகரணங்கள் உள்ளிட்டவற்றை வழங்கி பெரும் உதவிக்கரம் நீட்டி வருகின்றன. இதேபோல் ரஷ்யாவிற்கு எதிர்வினையாற்றும் வகையில் பொருளாதார தடைகளும் விதிக்கப்பட்டன. இருந்த போதிலும் போர் ஓய்ந்தபாடில்லை.
இந்நிலையில், அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உக்ரைனுக்கு திடீரென சென்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. உக்ரைன் தலைநகர் கிவ்வுக்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் வந்துள்ள தகவலை அந்நாட்டின் உள்ளூர் மீடியாக்கள் உறுதிப்படுத்தியுள்ளன. ரஷ்யாவின் போர் நடந்து வரும் இந்த சூழ்நிலையில், அமெரிக்க அதிபர் உக்ரைனுக்கு சென்றுள்ள சம்பவம் உலக நாடுகள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஐரோப்பிய நாடுகளுக்கு சுற்றுப்பயணம் சென்று இருந்த ஜோ பைடனின் யாரும் எதிர்பாரத வகையில் உக்ரைன் சென்றார். கடைசி வரை அவரது பயண விவரம் ரகசியமாகவே வைக்கப்பட்டு வருகிறது. போருக்கு மத்தியில் ஜோ பைடைனின் உக்ரைன் பயணம் முக்கியத்துவம் பெற்றுள்ளது.
ரஷியா -உக்ரைன் போர் ஓராண்டாக நீடித்து வரும் நிலையில் ஜோ பைடனின் இந்த பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது.