யு.எஸ்: துப்பாக்கிச் சூட்டில் 10 பேர் பலி சீன புத்தாண்டு தினத்தில் வெறிச்செயல்!

யு.எஸ்: துப்பாக்கிச் சூட்டில் 10 பேர் பலி சீன புத்தாண்டு தினத்தில் வெறிச்செயல்!

அமெரிக்காவில், கலிபோர்னியா மாகாணம், லாஸ் ஏஞ்சல்ஸ் அருகே மாண்ட்ரே பார்க் நகரம் அமைந்துள்ளது. இங்குள்ள கார்வே அவென்யூ பகுதியில் செங் வான் சோய் என்ற சீன வம்சாவளி தொழிலதிபருக்குச் சொந்தமான ஹோட்டல் உள்ளது.

அந்த ஹோட்டலில் நேற்று இரவு சீன புத்தாண்டு தினம் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. இதில் 10,000-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். அப்போது மர்ம நபர் ஒருவர், ஹோட்டலில் நுழைந்து அதிநவீன துப்பாக்கியுடன் கண் மூடித்தனமாக சுட்டார். இதில் 10 பேர் உயிரிழந்தனர். பலர் படுகாயம் அடைந்தனர்.

தகவல் அறிந்து போலீஸார் விரைந்து வந்து தாக்குதல் நடத்திய மர்ம நபரை தேடினர். ஆனால், அதற்குள் அந்த நபர் அங்கிருந்து தப்பியோடிவிட்டார். அவர் யார், எதற்காக தாக்குதல் நடத்தினார் என்பது தெரியவில்லை. அவரை போலீஸார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

மாண்ட்ரே பார்க் நகரில் 61,000-க்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். அவர்களில் 65 சதவீதம் பேர்

சீன வம்சாவளியை சேர்ந்தவர்கள். இதனால் ஆண்டுதோறும் சீன புத்தாண்டு நிகழ்ச்சிகள் கோலாகலமாகக் கொண்டாடப்படுவது வழக்கம்.

இந்த ஆண்டும் நகரின் அனைத்து ஹோட்டல்கள், கேளிக்கை விடுதிகளில் சீன புத்தாண்டு உற்சாகமாகக் கொண்டாடப்பட்டது. இந்த நிலையில் கார்வே அவென்யூ பகுதி ஹோட்டலில் இனவெறியின் காரணமாக சீனர்களை குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. கடந்தாண்டு சீன புத்தாண்டு கொண்டாட்டத்தின்போதும் மாண்ட்ரே பார்க் பகுதியில் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தாக்குதல் நடத்தப்பட்ட ஹோட்டல் உரிமையாளர் செங் வான் சோய் கூறியதாவது. சீன புத்தாண்டை ஒட்டி எங்கள் ஹோட்டலில் இரண்டு நாட்களாக இரவில் ஆடல், பாடல் நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. சம்பவத்தன்று இரவு நடனம் ஆடும் விடுதியில் மர்ம நபர் புகுந்து துப்பாக்கியால் சுட்டுள்ளார். அப்போது பாப் பாடல் சப்தம் அதிகமாக இருந்ததால் துப்பாக்கிச் சூடு சத்தம் கேட்கவில்லை. சில நிமிடங்களுக்கு பிறகே விபரீதம் புரிந்து அங்கிருந்தவர்கள் தப்பியோடினர். உடனடியாக ஹோட்டல் ஊழியர்கள் முக்கிய அறைகளின் கதவுகளை மூடினர். இதனால் துப்பாக்கிச் சூடு நடத்திய மர்ம நபரால் முன்னேறி வரமுடியவில்லை என்று தெரிவித்தார்.

இதனிடையே துப்பாக்கிச்சூடு நடத்தியவர் யார் என்பதை கண்டுபிடித்து கைது செய்ய கலிபோர்னியா போலீஸார் தீவிர தேடுதல் வேட்டை நடத்தினர்.

துப்பாக்கியால் சுட்டவர் ஹுயு கான் டிரான் என்பவர் எனத் தெரியவந்தது. வாகனத்தில் சென்ற அவரை போலீஸார் சுற்றி வளைத்தனர். ஆனால், 72 வயதான ஹுயு, போலீஸ் நடவடிக்கைக்கு பயந்து தன்னைத்தானே சுட்டுக் கொண்டு உயிரிழந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டது. எனினும் விசாரணை தொடர்கிறது.

அமெரிக்காவில் கடந்த மே மாதம் டெக்ஸாஸில் ஒரு பள்ளியில் நடந்த கண்மூடித்தனமான துப்பாக்கிச் சூட்டில் 22 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

அமெரிக்காவில் துப்பாக்கி வன்முறை கலாசாரம் தலைதூக்கி வருகிறது. இதைத் தடுக்க துப்பாக்கி லைசென்ஸ் வழங்குவதில் விதிகளை மாற்றம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.

கடந்த 2022 ஆம் ஆண்டு மட்டும் அமெரிக்காவில் துப்பாக்கியால் சுட்டதில் 44,000 பேர் உயிரழந்துள்ளனர். இவர்களில் பாதி பேர் துப்பாக்கியால் சுட்டுக் கொண்டு தற்கொலை செய்துகொண்டவர்கள்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com