இன்றைய தொழில்நுட்ப யுகத்தில், பல்வேறு வகையில் சைபர் குற்றங்கள் நடப்பதை நாம் கேள்விப்பட்டு வருகிறோம். அந்த வகையில் சமீப காலமாக USB charger scam என்பது இந்தியாவில் அதிகரித்துள்ளதாக அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. அதாவது பொது இடங்களில் இருக்கும் USB சார்ஜிங் பாயின்ட்களில் நாம் நமது போனை சார்ஜ் செய்யும்போது, அது ஹேக் செய்யப்படுவது வழக்கமாகியுள்ளது.
விமான நிலையம், ரயில்வே நிலையம், ஷாப்பிங் மால் போன்ற பொது இடங்களில் வைக்கப்பட்டுள்ள USB சார்ஜிங் போர்ட்களை ஒருவர் பயன்படுத்துவதால், அவரது சாதனத்தில் சைபர் குற்றவாளிகள் மால்வர்களை இன்ஸ்டால் செய்கின்றனர். இதன் மூலமாக அந்த சாதனத்தில் இருக்கும் தனிப்பட்ட விவரங்கள் மற்றும் தரவுகளை அவர்கள் திருடி, அதை குற்ற சம்பவங்களுக்கு பயன்படுத்துவோ அல்லது பணம் பறிக்கவோ முயல்கின்றனர்.
அரசு சொல்வது என்ன?
இப்போது இந்த குற்ற சம்பவம் அதிகமாக நடப்பதால் பொது இடங்களான, பேருந்து நிலையங்கள், விமான நிலையங்கள், ஹோட்டல்கள், ரயில்வே நிலையங்கள் போன்ற இடங்களில் வைக்கப்பட்டுள்ள சார்ஜிங் ஸ்டேஷனிலிருந்து சார்ஜ் செய்ய வேண்டாம் என பொதுமக்களுக்கு அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. இத்தகைய மோசடிகளில் மக்கள் சிக்கிக் கொள்ளாமல் இருப்பதற்கு, அரசாங்க நிறுவனமான CERT-In சில வழிகாட்டு நெறிமுறைகளையும் கொடுத்துள்ளது. இவற்றைப் பின்பற்றி இத்தகைய மோசடிகளில் சிக்கிக் கொள்ளாமல் பாதுகாப்பாக இருக்கலாம்.
இதுகுறித்து CERT-In தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், USB charger scam-ல் சிக்கிக் கொள்ளாமல் இருக்க என்ன செய்ய வேண்டும் என்று கூறியுள்ளது.
பொது இடங்களில் உள்ள சார்ஜிங் போர்ட்களில் சார்ஜ் போடுவதற்கு முன்பு ஒரு முறைக்கு இரண்டு முறை யோசித்து சார்ஜ் செய்யுங்கள்.
வெளியே செல்லும்போது உங்கள் போனின் சார்ஜரைக் கொண்டு செல்லுங்கள்.
முடிந்தவரை உங்களது ஃபோனின் பவர் கேபிள் அல்லது பவர் பேங்க் எடுத்துச் செல்லுங்கள்.
மற்ற சாதனங்களுடன் உங்கள் ஸ்மார்ட்போன் இணையாதபடி அனைத்தையும் பிளாக் செய்யவும்.
உங்களது போனை சுவிட்ச் ஆப் செய்து பொது இடங்களில் சார்ஜ் போடுங்கள்.
இவற்றைப் பின்பற்றினால், இத்தகைய சைபர் குற்றங்களிலிருந்து நீங்கள் பாதுகாப்புடன் இருக்கலாம்.