சேலம் மாநகராட்சி பட்ஜெட்டில் பயனுள்ள புதிய அறிவிப்புகள்...

சேலம் மாநகராட்சி பட்ஜெட்டில் பயனுள்ள புதிய அறிவிப்புகள்...
Published on

சேலம் மாநகராட்சியில் 2023- 2024 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டம் (பட்ஜெட்) நேற்று தாக்கல் செய்யப்பட்டது. ரூபாய் 10 கோடியில் பள்ளிகளில் உள்கட்டமைப்பு வசதிகள் செய்து தரப்படும் என்றும் சேலம் புதிய பேருந்து நிலையம் ரூபாய் 4.75 கோடியில் நவீன முறையில் மேம்படுத்தப்படும் என்றும் சேலம் மாநகராட்சி பட்ஜட் உரையில் சேலம் மேயர் ராமச்சந்திரன் அறிவித்திருந்தார்.

     இந்த நிகழ்ச்சியில் மாநகராட்சி மேயர் ராமச்சந்திரன் அவர்கள்  தலைமையில் வரிவிதிப்பு மற்றும் நிதி குழு தலைவர் குமரவேல் நிதிநிலை அறிக்கை அடங்கிய பெட்டியை கொண்டு வந்திருந்தார். மேயர் ராமச்சந்திரன் நிதிநிலை அறிக்கை அடங்கிய புத்தகத்தை வெளியிட்டார். அதனை மாநகராட்சி ஆணையாளர் கிறிஸ்துராஜ் மற்றும் துணை மேயர் சாரதா தேவி ஆகியோர் பெற்றுக் கொண்டனர். தொடர்ந்து மாநகராட்சி மேயர் ராமச்சந்திரன் பட்ஜெட்டைத் .தாக்கல் செய்து பேசினார் . பட்ஜெட்டில் பல்வேறு முக்கிய அறிவிப்புகளை மேயர் ராமச்சந்திரன் வெளியிட்டார்.

அதில் முக்கியமானவைகள் இதோ

*  சேலம் மாநகராட்சி 60 வார்டு பகுதிகளிலும் குடிநீர் வினியோகத்தை கண்காணிக்க 58 மேல்நிலைத் நீர்த்தேக்க தொட்டிகளில் 60 லட்சத்தில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படும்..

*   இரண்டு இடங்களில் 50 லட்சத்தில் போட்டித் தேர்வு மையங்கள்,

* ஒரு கோடியில் மாநகராட்சி பகுதியில் விளையாட்டு மைதானங்கள் சீரமைப்பு.

*  16 நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள், 32 நகர்ப்புற நலவாழ்வு மையங்கள் கீழ் செயல்படும் மருத்துவமனைகளுக்கு வரும் நோயாளிகள் மற்றும் அங்குள்ள உபகரணங்களை பாதுகாத்தல் மற்றும் கண்காணித்தல் மிகவும் அவசியம் என்பதால் ரூபாய் 50 லட்சம் செலவில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படும்.

*   குமாரசாமிப்பட்டி நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் ரூபாய் 25 லட்சத்தில் உட்கட்டமைப்பு வசதிகள்.

*  நான்கு ரவுண்டானா பகுதியில் பொதுமக்களின் பங்களிப்புடன் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் இரண்டு கோடியில் நவீன வசதியுடன் கூடிய சுகாதார வளாகம்.

* அம்மாபேட்டையில் அண்ணா ஆஸ்பத்திரியில் ஒருங்கிணைந்த நகர்ப்புற நலவாழ்வு மையம் ஏற்படுத்தி முன்மாதிரி மருத்துவமனையாக செயல்படுத்த ரூபாய் 99 லட்சம் நிதி ஒதுக்கீடு.

*   மாநகராட்சியில் பணிபுரியும் நிரந்தர தூய்மைப் பணியாளர்களுக்கு எருமாபாளையத்தில் கட்டி முடிக்கப்பட்ட மூன்று அடுக்குமாடி குடியிருப்பு வளாகத்தில் 36 குடியிருப்புகளை வழங்க நடவடிக்கை.

*   கழிப்பிட வசதிகள் இல்லாத பூங்காக்களில் ரூபாய் 25 லட்சம் செலவில் கழிப்பிட வசதி.

*   சேலம் மாநகராட்சி 60 வார்டுகளில் மாநகராட்சி கவுன்சிலர் அலுவலகம், பணிபுரியும் அலுவலர்கள் முறையே உதவி பொறியாளர் ஆகிய அலுவலகங்கள்  ஒரே இடத்தில் அமைந்தால் அரசின் சேவைகளை பொதுமக்கள் எளிதில் பெற்று தங்கள் குறைகளைத் தெரிவிக்க ஏதுவாக அமையும் என்ற அடிப்படையில் புதிதாக ஒவ்வொரு வார்டிற்கும் புதிய அலுவலகங்கள் கட்டப்படும். அதற்கான விரிவான திட்ட அறிக்கை தயார் செய்யப்பட்டு இந்த நிதி ஆண்டு முதல் படிப்படியாக அலுவலகங்கள் கட்டி முடிக்கப்படும்.

* சூரமங்கலம் உழவர் சந்தை ரூபாய் ஆறு கோடியில் மேம்படுத்தப்படும்.

* மாநகராட்சிக்குச் சொந்தமான காலியிடங்கள் கண்டறியப்பட்டு அந்த இடத்தில் சுற்றுப்புற சுகாதாரத்தைக் கருத்தில் கொண்டு பொதுமக்களின் பங்களிப்புடன் நீரூற்றுகள் அமைத்து நகர் அழகு படுத்தப்படும்

*   மாநகராட்சியில் விடுபட்ட பகுதிகளுக்கு தெருவிளக்கு வசதிகள் செய்து தரப்படும்.

*   மாநகராட்சியில் மண் சாலைகளே இல்லாத ஒரு நிலையை ஏற்படுத்தி தரமான தார்ச்சாலை மற்றும்  சாலை வசதிகள் செய்ய முடிவு.

மாநகராட்சி பட்ஜெட்டுகளை அதிகாரிகள் சரியான முறையில் பயன்படுத்தி திட்டங்கள் செயல்படுத்தப் பட்டால் சேலம் மக்களுக்கு மகிழ்ச்சியே. 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com