மதிமுகவில் இருந்து விலகிய திருப்பூர் துரைசாமியின் குற்றச்சாட்டுகளை மறுக்கும் வைகோ!

மதிமுகவில் இருந்து விலகிய திருப்பூர் துரைசாமியின் குற்றச்சாட்டுகளை மறுக்கும் வைகோ!
Published on

பெரும்பாலான உறுப்பினர்கள் ஒப்புக்கொண்டதால் கட்சிப் பதவியை துரை. வைகோ ஏற்றுகொண்டார். அன்று முதல் துரை. வைகோவுக்கு எதிராக கட்சியினர் சிலர் செயல்பட்டு வருகிறார்கள் என்று மதிமுகவின் நிறுவனர் வைகோ குற்றம் சாட்டியிருக்கிறார்.

சமீபத்தில் ம.தி.மு.கவின் அவைத்தலைவராக இருந்த திருப்பூர் துரைசாமி வைகோ மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை வைத்திருந்தார். அதில் எந்த உண்மையும் இல்லை என்று பத்திரிக்கையாளர்களை சந்தித்து விளக்கமளித்துள்ள வைகோ, யாரையும் எதிர்த்து ம.தி.மு.கவை நான் ஆரம்பிக்கவில்லை. நான் திமுகவில் இருந்து நீக்கப்பட்டதன் காரணமாக ட்சி ஆரம்பித்தேன் என்றும் விளக்கம் அளித்திருக்கிறார்.

ம.தி.மு.கவின் தொழிற்சங்கத்திற்கும் தி.மு.கவின் தொழிற்சங்கத்திற்கும் இடையேயான கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டன. அந்நேரத்தில் தேர்தல் அறிவிப்பு வந்தது. அண்ணாவும் பெரியாரும் கட்டியமைத்த திராவிடக் கோட்டையை சரியச் செய்யும் பணியை சனாதான சக்திகள் ஆரம்பித்தபோது, அந்த நேரத்தில் தி.மு.கவுடன் இருப்பதுதான் சரியென்று முடிவு செய்து தி.மு.கவை ஆதரித்தேன்.

கோவையில் ஸ்டாலினை சந்தித்து என்னுடைய நிலைப்பாட்டை விளக்கினேன். அவர் என்னை கலைஞரிடம் அழைத்துப்போனார். கலைஞர் என்னைப் பார்த்ததும கண்கள் கலங்கி கண்ணீர் வழிந்தோடியது. உங்களுக்கு பக்கபலமாக இருப்பது போல் ஸ்டாலினுக்கு பக்கபலமாக இருப்பேன் என்று கலைஞரிடம் உறுதியளித்தேன்.

தி.மு.கவுடன் கூட்டணி சேரக்கூடாது என்று திருப்பூர் துரைசாமி நினைத்தார். தி.மு.க வெற்றி பெறப்போவதில்லை. ஆகவே, ம.தி.மு.க, தி.மு.க கூட்டணியில் சேரக்கூடாது என்று வெளிப்படையாகவே திருப்பூர் துரைசாமி பேசினார். பெரும்பாலான நிர்வாகிகள் தி.மு.கவுடன் கூட்டணி சேரவேண்டும் என்று கருத்தை முன்வைத்தார்கள். பின்னர் உயர்நிலைக்கூட்டம் நடைபெற்றபோது, எக்காரணம் கொண்டும் தி.மு.கவுடன் கூட்டணி சேரக்கூடாது என்று அப்போது பேசினார்.

அன்று சொன்னதற்கு நேர் மாறாக, இன்று ஒரு பொய்யான செய்தியை பதிவு செய்திருக்கிறார். அன்று தி.மு.கவுடனான கூட்டணி அவருக்கு பிடிக்கவில்லை. தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடவேண்டாம் என்று தொண்டர்கள் மத்தியில் பேசியிருக்கிறார். கொரானா தொற்று பரவல் நேரத்தில் துரை. வை.கோ அவர்கள் சமூகத் தொண்டு செய்து கொண்டிருந்தார்.

கொரானா இழப்புகள் நேர்ந்த இடங்களுக்கு துரை. வைகோவை ம.தி.மு.க தொண்டர்கள் அழைத்துச் சென்றார்கள். இவையெல்லாம் என்னுடைய கவனத்திற்கு வரவில்லை. பின்னாளில் ம.தி.மு.க கூட்டத்தில் துரை.வைகோ அவர்கள் அரசியலுக்கு வந்து, கட்சியை வழிநடத்த வேண்டும் என்று வேண்டுகோள் வைத்தபோது, ரகசிய வாக்கெடுப்பு நடத்தலாம் என்று முடிவு செய்து, துண்டு சீட்டில் எழுதித்தருமாறு கேட்டுக்கொண்டிருந்தேன்.

அதில் 104 பேர் அவர் அரசியலுக்கு வரவேண்டும் என்றும் 2 பேர் வரவேண்டாம் என்றும் துண்டு சீட்டில் எழுதியிருந்தார்கள். பெரும்பான்மையினரின் முடிவை நானும் ஏற்றுக்கொண்டேன்.

துரை. வைகோவை பிடிக்காத திருப்பூர் துரைசாமி உள்ளிட்டவர்கள் அன்று முதல் எதிராக செயல்பட ஆரம்பித்துவிட்டார்கள். தி.மு.க.வுடன் உடன்பாடு எப்போதும் கூடாது என்று துரைசாமி திட்டவட்டமாக கூறிவந்தார். இப்போது தி.மு.க.வுடன் இணைக்க வேண்டும் என்று அவர் சொன்னதற்கு எதிர்ப்பு தெரிவித்ததும் வெளியே வந்துவிட்டேன் என்கிறார். இது அப்பட்டமான பொய். இரண்டு ஆண்டுகளாகவே கட்சித் தலைமையை விமர்சித்து வருகிறார் என்றார்.

வரும் நாடாளுமன்றத் தேர்தலில் ம.தி.மு.க, எந்த சின்னத்தில் போட்டியிடும் என்று பத்திரிக்கையாளர்கள் கேட்ட கேள்விக்கு பதிலளிக்க வை.கோ மறுத்துவிட்டார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com