

இன்று மாலை பாரதிய ஜனதா கட்சியின் தேசிய தலைவர் நிதின் நபின் வெளியிட்ட அறிவிப்பின்படி , கட்சியின் பல்வேறு பிரிவுகளில் பதவிகள் ஒரு சிலருக்கு புதிதாக வழங்கப்பட்டுள்ளது. ஒரு சிலரின் பதவிகள் பறிக்கப்பட்டும் உள்ளது. பதவிகளை இழந்தவர்களுக்கு புதிய பதவிகள் ஏதேனும் அளிக்கப்படுமா? என்று இதுவரை எந்த அதிகாரப்பூர்வ தகவலும் இல்லை.
பதவிகளில் இருந்து விடுவிக்கப்பட்டவர்களில் தமிழகத்தைச் சேர்ந்த வானதி ஶ்ரீனிவாசனும் ஒருவர். அவர் பாரதிய ஜனதா கட்சியின் தேசிய மகளிரணி தலைவியாக பதவி வகித்திருந்தார். தற்போது அவருக்கு பதிலாக சத்தீஸ்கர் மாநிலத்தை சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர் ரூப்குமாரி சவுத்ரி நியமனம் செய்யப்பட்டுள்ளார். தற்போது தேசிய பதவிகளில் 12 பெண்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
முன்பை விட பாஜகவில் தற்போது பெண்களின் முக்கியத்துவம் அதிகரிக்கப்பட்டுள்ளது. முன்னாள் மத்திய அமைச்சர் ஸ்மிரிதி இரானி தேசியப் பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். பாஜக வரலாற்றில் தேசிய பொதுச் செயலாளராக ஒரு பெண்மணி நியமிக்கப்பட்டுள்ளது, இதுவே முதல்முறை. அந்த பெருமையை முதல் முதலாக ஸ்மிருதி இராணி பெறுகிறார்.
பாஜகவின் மகளிர் முகமாக இருக்கும் முன்னாள் முதல்வர் வசுந்தரா ராஜே , ஆந்திராவின் முன்னாள் பாஜக தலைவர் புரந்தேஷ்வரி, முன்னாள் சுகாதாரத்துறை மத்திய இணை அமைச்சர் பார்தி ப்ரவீன் பவார், டாக்டர் மதுசந்தகர் , ரேகா வர்மா , வர்ஷாபென் நரேந்திரபாய் தோஷி உள்ளிட்டவர்களுக்கு பாஜகவின் தேசிய துணை தலைவர் பதவி வழங்கப்படுகிறது.
பாஜகவின் தேசிய செயலாளர் பதவிகளுக்கு சங்கீதா யாதவ் , ஃபங்னான் கோன்யாக் கவிதா பட்டிதார் உள்ளிட்டோர் நியமிக்கப்பட்டுள்ளனர். பாஜகவின் சமூக வலைதள தேசிய ஒருங்கிணைப்பாளர் பதவி ப்ரீத்தி காந்திக்கு வழங்கப்பட்டுள்ளது.
சமீபத்தில் நடைபெற்ற சட்டமன்ற இடைத்தேர்தல்களில் பாரதிய ஜனதா கட்சி , பீகார் மற்றும் மத்திய பிரதேசத்தில் தோல்வி அடைந்தது. பாரதிய ஜனதா கட்சி அதன் பின்னர் தேசிய அளவில் நிர்வாகிகளை கண்காணித்து வருகிறது.மேலும் டெல்லியில் நடைபெற்ற நீட் தேர்வு முறைகேடுக்கு எதிரான போராட்டமும் அந்த கட்சிக்கு ஒரு தடுமாற்றமாக பார்க்கப்படுகிறது. அதனால், தேசிய அளவில் நிர்வாகிகளை மாற்றி கட்சிக்கு புத்துணர்வு அளிக்க செயல்பட்டு வருகிறது.
சுதந்திர தின விழாவில் உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி மகளிர் இட ஒதுக்கீட்டினை செயல்படுத்துவதற்கு அனைத்து அரசியல் கட்சிகளும் ஒன்று சேர வேண்டும் என்று வலியுறுத்தி இருந்தார்.
மாறிவரும் அரசியல் சூழலுக்கு ஏற்ப பெண்களுக்கு உரிய மரியாதை தரவும் முக்கியத்துவம் தரவும் பாஜக செயல்படுகிறது. பாஜக நீண்ட காலமாக மகளிருக்கு 33% இட ஒதுக்கீட்டினை கொண்டு வருவதற்கு முயற்சி செய்து வருகிறது. ஏற்கனவே பாராளுமன்றத்தில் அந்த மசோதா தாக்கல் செய்யப்பட்ட போது எதிர்க்கட்சிகளால் தோற்கடிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்த மசோதா பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்படும் பட்சத்தில் இந்தியாவில் உள்ள சட்டமன்றம் மற்றும் பாராளுமன்றங்களில் மகளிர்க்கு 33% இட ஒதுக்கீடு கிடைக்கும். இதன் மூலம் அரசியலிலும் பெண்களின் பங்கு குறிப்பிட்ட அளவு அதிகரிக்கும்.
புதிதாக பாஜகவில் அறிவிக்கப்பட்டுள்ள 65 பதவிகளில் 12 பேர் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது. ஆயினும் இந்த சதவீதம் பாஜகவின் கனவு மகளிர் இட ஒதுக்கீடு 33% எட்டவில்லை. அதைவிட குறைவான அளவிலேயே மகளிருக்கு நிர்வாகிகள் பதவிகள் வழங்கப்பட்டுள்ளன.