காவிக்கு மாறும் வந்தே பாரத் ரயிலின் நிறம்!

காவிக்கு மாறும் வந்தே பாரத் ரயிலின் நிறம்!
Published on

சென்னை ஐசிஎப் ரயில் பெட்டித் தொழிற்சாலையில் இருபத்து ஐந்துக்கும் மேற்பட்ட வடிவமைப்புகளில் எழுபதாயிரத்துக்கும் மேற்பட்ட ரயில் பெட்டிகள் இதுவரை தயாரிக்கப்பட்டு இருக்கின்றன. உலகப் புகழ்பெற்ற இந்த ஐசிஎப் ரயில் பெட்டித் தொழிற்சாலையில்தான் சமீபத்தில் இந்தியாவில் அறிமுகமான அதிவேக ரயிலான வந்தே பாரத் ரயிலும் உருவாக்கப்பட்டு மக்களின் பயன்பாட்டுக்கு வந்தது.

வந்தே பாரத் ரயில் முதலில், உள்நாட்டுத் தொழில் நுட்பத்தில், கடந்த 2018ம் ஆண்டு ‘ரயில் 18’ என்ற பெயரில் உருவாக்கப்பட்டது. இந்த அதிவேக புதிய ரயில் சேவை முதன் முதலில் கடந்த 2019ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 15ம் தேதி புதுடெல்லி – வாரணாசி இடையே தனது பயணத்தைத் தொடங்கியது. மக்களிடம் பெரிய வரவேற்பைப் பெற்ற இந்த ரயில் சேவையைத் தொடர்ந்து, இதுபோன்ற ரயில்களை ஐசிஎப் ரயில் பெட்டித் தொழிற்சாலை மேற்கொண்டு உருவாக்கத் தொடங்கியது.

இதைத் தொடந்து, இதுபோன்ற ரயில்களை நாட்டின் பல்வேறு முக்கியமான வழித்தடங்களில் இயக்கவும் தென்னக ரயில்வே முடிவு செய்தது. அதன்படி, சென்னை – மைசூர் இடையேயும், சென்னை – கோவை இடையேயும், திருவனந்தபுரம் – காசர்கோடு இடையேயும் இந்த வந்தே பாரத் ரயில் சேவை தொடங்கியது. மேலும், வந்தே பாரத் விரைவு ரயில் தயாரிப்பை அதிகப்படுத்தவும் இந்திய ரயில்வே வாரியம் முடிவு செய்திருக்கிறது. அதைத் தொடர்ந்து, மெட்ரோ வந்தே பாரத் ரயில், தூங்கும் வசதி வந்தே பாரத் ரயில், சரக்கு வந்தே பாரத் ரயில், புறநகர் வந்தே பாரத் ரயில் ஆகிய நான்கு வகை வந்தே பாரத் ரயில்களை தயாரிக்கவும் திட்டமிடப்பட்டு இருக்கிறது. அந்த வகையில், சென்னை ஐசிஎப் ரயில் பெட்டித் தொழிற்சாலையில் கடந்த 2018ம் ஆண்டு முதல், தற்போது வரை 25 வந்தே பாரத் ரயில்கள் தயாரிக்கப்பட்டு இருக்கின்றன. 2023 - 24ம் உற்பத்தியாண்டில், சென்னை ஐசிஎப் நிறுவனத்தில் மட்டும் 736 வந்தே பாரத் ரயில் பெட்டிகள் தயாரிக்கத் திட்டமிடப்பட்டு இருக்கிறது.

இந்த நிலையில், இதுவரை வெண்மை நிறத்தில் இயக்கப்பட்டு வந்த வந்தே பாரத் ரயில்கள் இனி, காவி நிறத்துக்கு மாற்றம் செய்யப்பட்டு இருக்கின்றன. காரணம், வெள்ளை நிறத்தால் வந்தே பாரத் ரயில் பெட்டிகள் விரைவில் அதிக அழுக்காவதை தவிர்ப்பதற்காக காவி நிறத்துக்கு மாற்றம் செய்யப்பட்டு இருப்பதாக ரயில்வே வாரியம் சார்பில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

இதற்கிடையில், ‘தேசியக் கொடியில் காவி நிறம் இருப்பதால், வந்தே பாரத் ரயிலுக்கு அந்த நிறத்தைத் தேர்வு செய்து இருப்பதாக ரயில்வே துறை அமைச்சர் அஷ்வினி வைஷ்னவ் விளக்கம் கொடுத்து இருக்கிறார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com