

உள்நாட்டு தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்பட்டு மணிக்கு 160 கிலோமீட்டர் வேகத்தில் நவீன வசதிகள் மற்றும் அதிநவீன இருக்கைகளுடன் இயக்கப்படும் வந்தே பாரத் ரயில் இந்தியாவின் அதிவேக மற்றும் சொகுசு ரயிலாகும். கட்டணங்கள் சற்று அதிகம் என்றாலும் நீண்ட தூர பயணத்தை குறைந்த நேரத்தில் அடைய முடியும் என்பதால் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. இத்தகைய சிறப்பு வாய்ந்த வந்தே பாரத் ரயிலில் செல்லப் பிராணிகளையும் அழைத்து செல்லலாம்.
வீட்டில் செல்லப் பிராணிகள் வளர்க்கும் பலருக்கும் வெளியூருக்கு செல்லும் போது அவற்றை எங்கே விட்டுச் செல்வது என்பதில் குழப்பம் உண்டாகி விடுகிறது .இதனை போக்கும் வகையில் வந்தே பாரத் ரயிலில் செல்லப் பிராணிகளை அழைத்து செல்லலாம் என்று இந்திய ரயில்வே வெளியிட்ட அப்டேட் மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. செல்லப் பிராணிகளை வளர்ப்பவர்களுக்கு இந்திய ரயில்வே கூறிய இந்த நல்ல செய்தியால் செல்லப்பிராணிகளை தனியாக விட்டுச் செல்லாமல் பயணம் செய்யும்போது உடன் அழைத்துச் சென்று ஒன்றாகவே பயணிக்கலாம்.
ரயிலில் செல்லப்பிராணிகளுக்கு 'பெட் பாக்ஸ்'
செல்லப் பிராணிகளை உடன் அழைத்துச் செல்வதற்கு ஏதுவாக 'பெட் பாக்ஸ்' என்ற வசதி வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில் பெட்டியில் உள்ளது. வந்தே பாரத் ரயிலின் இன்ஜினுக்கு அருகில் ரயிலின் இரு புறங்களிலும் பாதுகாப்பாக செல்லப் பிராணிகளை அழைத்துச் செல்ல 'பெட் பாக்ஸ்' அமைக்கப்பட்டிருக்கும்.
செல்லப்பிராணிகளை அழைத்துச் செல்ல நடைமுறைகள்
செல்லப்பிராணிகளை அழைத்து செல்ல நினைப்பவர்கள் இந்த வசதியைப் பெற ஆன்லைனில் பதிவு செய்ய முடியாது. ரயில் புறப்படும் ஸ்டேஷனில் இருக்கும் பார்சல் அல்லது லக்கேஜ் அலுவலகத்திற்குச் சென்று ரயில் புறப்படுவதற்கு குறைந்தது 3 மணி நேரத்திற்கு முன்பாக செல்லப்பிராணிகளை உடன் அழைத்துச் செல்ல பதிவு செய்ய வேண்டும்.
பெட் பாக்ஸில் செல்லப்பிராணிகளை அழைத்துச் செல்ல பதிவு செய்ய நினைக்கும் பயணிகளிடம் கண்டிப்பாக 'கன்ஃபார்ம் டிக்கெட்' இருக்க வேண்டும். பெட் பாக்ஸ் பதிவு வசதியை RAC, வெயிட்டிங் லிஸ்ட் டிக்கெட் வைத்திருக்கும் பயணிகள் பெற முடியாது. செல்லப்பிராணிகளை பெட் பாக்ஸில் பயணம் செய்ய வைப்பதற்கு 48 மணி நேரத்திற்குள் தடுப்பூசி போட்டதற்கான கால்நடை மருத்துவர் சான்றிதழ் அவசியம் இருக்க வேண்டும். மேலும் செல்லப் பிராணிகளில் எடைக்கேற்ப ஒரு கிலோவிற்கு ரூபாய் 30 கட்டணமாக பயணம் செய்ய வசூலிக்கப்படும்.
ஒரு PNR எண்ணுக்கு ஒரு செல்லப்பிராணி மட்டுமே அனுமதிக்கப்படுவதோடு இந்த பெட் பாக்ஸ் சேவை வந்தே பாரத் ரயில் செல்லும் அனைத்து வழித்தடங்களிலும் இருக்கிறதா என்பதனை பயணிகள் முன்கூட்டியே சரி பார்த்துக் கொள்வது மிகவும் அவசியமாகும்.
தற்போது ஒவ்வொருவர் வீட்டிலும் மன அழுத்தத்தை போக்க செல்லப்பிராணிகளை வளர்க்கின்றனர். சாதாரணமாக வீட்டில் இருக்கும் நாட்களில் மிகுந்த அக்கறையோடு செல்லப் பிராணிகளை கவனித்துக் கொள்கின்றனர்.அதேபோல் வெளியூருக்கு செல்லும்போது செல்லப்பிராணிகளை பிரிந்து இருப்பது பலருக்கும் கவலையை அளிக்கிறது.
வந்தே பாரத் ரயிலின் 'பெட் பாக்ஸ் வசதி' இந்த கவலையைப் போக்கும் விதத்தில் உள்ளது. விமானத்திற்கு இணையான அதிநவீன வசதிகள் கொண்ட வந்தே பாரத் ரயிலில் செல்லப் பிராணிகளையும் ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு சுலபமாக அழைத்துச் செல்லலாம் என்ற இந்த வசதி பெரும்பாலானோருக்கு இனிப்பான செய்தியாகவே உள்ளது.
இந்தியா முழுவதும் முக்கிய நகரங்களுக்கிடையே இயக்கப்படும் வந்தே பாரத் ரயிலில் பயணம் செய்பவர்கள் தங்கள் பயணிக்கும் வழித்தடத்தில் பெட் பாக்ஸ் வசதி உள்ளதா என்பதனை தெரிந்து கொண்டு அழைத்துச் சென்றால் தேவையற்ற சிரமத்தை தவிர்க்கலாம்.