தண்டவாளப் பாதைகளை சீரமைத்தால் வந்தே பாரத் ரயில் பயண நேரம் விமானப் பயண நேரத்தை விடக் குறையும்!

தண்டவாளப் பாதைகளை சீரமைத்தால் வந்தே பாரத் ரயில் பயண நேரம் விமானப் பயண நேரத்தை விடக் குறையும்!

நாட்டின் அதிவேக ரயில்கள் என்றால், அது வந்தே பாரத் ரயில்கள்தான். இந்தியா முழுவதும் 75 நகரங்களை இணைக்கும் வகையில் வந்தே பாரத் ரயில் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. ஏற்கெனவே கடந்த மாதம் வரை இந்தியாவின் ஏழு வழித் தடங்களில் இயக்கப்பட்டு வந்த நிலையில், எட்டாவதாக செகந்திராபாத் (ஐதராபாத்) மற்றும் விசாகப்பட்டினத்தை இணைக்கும் வந்தே பாரத் ரயிலை பிரதமர் நரேந்திர மோடி அண்மையில் தொடங்கி வைத்தார். இதைத்தொடர்ந்து ஒன்பதாவது வந்தே பாரத் ரயில் செகந்திரபாத் மற்றும் திருப்பதி இடையே கடந்த ஏப்ரல் 8ம் தேதி ஐதராபாத்தில் தொடங்கி வைக்கப்பட்டது. அன்று மாலையே சென்னை - கோவை வந்தே பாரத் ரயிலை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார்.

சென்னை - கோவை இடையே இயங்கும் இந்த ரயில் நாட்டின் பத்தாவது வந்தே பாரத் ரயில் ஆகும். வந்தே பாரத் ரயில்களின் உண்மை வேகமான 180 கிலோ மீட்டர் வேகத்தில் இயக்கப்பட்டால் சென்னையில் இருந்து கோவைக்கோ அல்லது மதுரைக்கோ பயண நேரம் கிட்டத்தட்ட விமானத்தைப் பிடித்து, போர்டிங்குக்கு வெயிட் செய்து போகும் நேரத்தை விட குறைவாகவே இருக்கும். அதாவது வெறும் மூன்று மணி நேரத்தில் சென்று விட முடியும். அரசு அனுமதித்திருக்கும் 130 கிலோ மீட்டர் வேகத்தில் சென்றால் கூட 4 மணி நேரத்தில் சென்னையில் இருந்து மதுரைக்கோ அல்லது கோவைக்கோ சென்றுவிட முடியும். ஆனால், அதிகபட்சமாக இந்த ரயில்கள் 100 கிலோ மீட்டர் வேகத்தில் இயக்கப்பட்டாலும், கடந்த இரண்டு ஆண்டுகளாக வந்தே பாரத் ரெயில்களின் சராசரி வேகம் மணிக்கு 83 கி.மீ. ஆகவே உள்ளது. இதற்கு தண்டவாளங்களின் மோசமான நிலையே காரணம் என்கிறார்கள்.

தண்டவாளங்களின் கட்டமைப்புகளை மாற்றினால்தான் பெரிய பலன் கிடைக்கும். இப்போதுள்ள கட்டமைப்பில் மிக அதிக வேகமாக ரயில்களை இயக்க முடியாது என்றே சொல்கிறார்கள். இதனிடையே மத்திய அரசு 400 வந்தே பாரத் ரயில்களை இயக்கத் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த 400 வந்தே பாரத் ரயில்களில் 100 ரயில்கள் 'டில்டிங் ரயில்' தொழில்நுட்பத்துடன் தயாரிக்கப்பட்டு உள்ளதாகச் சொல்கிறார்கள். டில்டிங் ரயில் என்பது சாதாரண ரயில் பாதைகளில் வேகத்தை அதிகரிக்கச் செய்யும் தொழில்நுட்பம் கொண்ட ஒரு ரயில் ஆகும். இந்த 'டில்டிங் ரயில்'கள் இயக்கப்படும்போது ரயிலின் வேகம் மிகப்பெரிய அளவில் அதிகரிக்கும் என்கிறார்கள்.

இதுபோன்ற ரயில்கள் தற்போது இத்தாலி, போர்ச்சுகல், ஸ்லோவேனியா, பின்லாந்து, ரஷ்யா, செக் குடியரசு, இங்கிலாந்து, சுவிட்சர்லாந்து, சீனா, ஜெர்மனி மற்றும் ருமேனியா ஆகிய 11 நாடுகளில் இயக்கப்படுகின்றன. 2025-26ம் ஆண்டு 100 டில்டிங் ரயில்கள் உற்பத்தி செய்யப்படும் என்றும், இந்த ரயில்கள் வந்த பின்னர் தற்போது உள்ள தண்டாவள கட்டமைப்பிலேயே ரயில்களை அதிவேகத்தில் இயக்க முடியும் என்றும் கூறுகிறார்கள். தற்போதுள்ள அதிவேக ரயில்களான ராஜ்தானி, சதாப்தி உள்ளிட்ட அதிவேக ரயில்களையும் படிப்படியாக மாற்றியமைக்கும் விதமாக வந்தே பாரத் ரயில்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. அதிகபட்சமாக 160 கி.மீ. வேகத்தில் இருந்து அனைத்து முக்கிய வழித்தடங்களிலும் மணிக்கு 180 கி.மீ. வேகத்தில் செல்லும் என்று ரயில்வே அதிகாரிகள் கூறுகின்றனர்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com