
இந்திய புராணங்கள் பல்வேறு தெய்வங்களின் தோற்றக் கதைகளால் நிறைந்துள்ளன. இதில் பாம்புகளின் கதைகளும் சிறப்பிடம் பெற்றுள்ளன. இந்து மதத்தில் பாம்புகள் தெய்வங்களாக வணங்கப்படுகின்றன. இதன் காரணமாக இன்றும் பாம்பை பார்த்தால் அடிப்பதற்கு சிலர் தயங்குகின்றனர். சிவபெருமானின் கழுத்தைச் சுற்றிக்கொண்டிருக்கும் வாசுகி, பாம்புகளின் ராஜாவாகக் கருதப்படுகிறது. பாற்கடலில் தேவர்கள் அமிர்தம் கடைய ஆதிசேஷன் பாம்பு உதவியதாக புராணக் கதைகள் கூறுகின்றன.
இந்நிலையில் சமீபத்தில் ஒரு பெரிய பாம்பின் புதைபடிவம் கண்டுபிடிக்கப்பட்டது. அதற்கு வாசுகி என ஆய்வாளர்கள் பெயரிட்டுள்ளதால், இது தற்போது பலரது கவனத்தை பெற்றுள்ளது. அறிவியல் ரீதியாக பார்க்கையில், இது இந்தியாவில் காணப்படும் ஒரு வகை பாம்பின் அழிந்துபோன இனமாகக் கருதப்படுகிறது. இந்த ஆராய்ச்சியில் கிடைத்த முதுகெலும்புகளை வைத்துப் பார்க்கும்போது, இது உலகின் மிக நீளமான பாம்பாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது.
கடந்த 2005ம் ஆண்டு இந்தியாவில் உள்ள குஜராத்தின் கட்ச் பகுதியில், பழங்காலத்தில் வாழ்ந்த ஒரு வலிமையான உயிரினத்தின் புதைப்படிவ எச்சங்களும், 27 முதுகெழும்புகளும் கண்டுப்பிடிக்கப்பட்டன. இதுகுறித்த ஆராய்ச்சிகள் பல ஆண்டு காலங்கள் நடந்து வந்தன. அந்தவகையில், இந்தியன் ரூர்க்கி இன்ஸ்டிடியுட் ஆஃப் டெக்னாலஜி ஆராய்ச்சியாளர்களின் இறுதி முடிவு சைன்டிஃபிக் ரிப்போர்ட்ஸ் இதழில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த புதைப்படிவங்கள் 66 மில்லியன் ஆண்டுகளுக்கு முந்தையவை என்பதே அனைவரின் ஆச்சர்யமாக உள்ளது.
டைனோசர் அழிவுக்கும் 23 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் இந்த வாசுகி பாம்பு அதிகளவில் இருந்ததாகவும், வேட்டையாடும் பாம்பாக இருந்திருக்கும் என்றும் ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். வாசுகி எச்சங்களின் முழுமையற்ற தன்மை காரணமாக, இதன் நீளம் 36-49 அடி (11-15 மீட்டர்) மற்றும் ஒரு மெட்ரிக் டன் (1,000 கிலோ) அளவிற்கு எடை இருக்கும் என்ற தோராயமான மதிப்பீட்டை ஆராய்ச்சியாளர்கள் வழங்கியுள்ளனர்.
இதனை கேட்ட பலரும் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.