2020-ல் காங்கிரஸ் ஆட்சி கவிழாமல் இருக்க வசுந்தரா ராஜே உதவினார்: கெலோட் அதிரடி!

2020-ல் காங்கிரஸ் ஆட்சி கவிழாமல் இருக்க வசுந்தரா ராஜே உதவினார்: கெலோட் அதிரடி!

ராஜஸ்தானில் 2020 ஆம் ஆண்டில் துணை முதல்வராக இருந்த சச்சின் பைலட் உள்ளிட்ட சிலர், தமது அரசுக்கு எதிராக போர்க்கொடி உயர்த்தியபோது, காங்கிரஸ் ஆட்சி கவிழாமல் இருக்க வசுந்தராராஜே உள்ளிட்ட பா.ஜ.க. தலைவர்கள் உதவியதாக முதல்வர் அசோக் கெலோட் அதிரடியாகத் தெரிவித்தார்.

இரண்டு ஆண்டுகளுக்கு முன் ஏற்பட்ட அரசியல் நெருக்கடியின்போது காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் யாராவது பணம் பெற்றிருந்தால் அதை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவிடம் திருப்பியளித்துவிடுமாறும் கெலோட் கேட்டுக்கொண்டார்.

அமித்ஷா, மத்திய அமைச்சர்கள் கஜேந்திரசிங் ஷெகாவாத் மற்றும் தர்மேந்திர பிரதான் ஆகியோர் இணைந்து எனது அரசை கவிழ்க்க சதித் திட்டம் தீட்டினார்கள். இதற்காக காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களுக்கு பணம் கொடுத்தார்கள். ஆனால், அவர்களது முயற்சி வெற்றிபெறவில்லை. இன்றுவரை அவர்கள் அந்த பணத்தை திரும்ப பெற்றுக்கொள்ளவில்லை. தங்கள் முயற்சி வெற்றிபெறாத நிலையில் அவர்கள் கொடுத்த பணத்தை ஏன் கேட்டுப் பெறவில்லை என்பது எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது என்று டோல்பூரில் ஒரு நிகழ்ச்சியில் பேசுகையில் முதல்வர் அசோக் கெலோட் கூறினார்.

“நீங்கள் ரூ.10 கோடி அல்லது ரூ.20 கோடி பெற்றிருந்தாலும், அதில் ஒரு குறிப்பிட்ட தொகையை செலவழித்திருந்தாலும் மொத்த பணத்தையும் திருப்பிக் கொடுத்துவிடுங்கள். உங்களுக்கு தேவையான பணத்தை நான் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியிடமிருந்து வாங்கித் தருகிறேன் என்றுகூட நான் அந்த எம்.எல்.ஏ.க்களிடம் தெரிவித்தேன்” என்றார் கெலோட்.

கடந்த 2020 ஆம் ஆண்டு ச்ச்சின் பைலட், 18 எம்.எல்.ஏக்களுடன் சேர்ந்து முதல்வர் கெலோட்டுக்கு எதிராக போர்க்கொடி உயர்த்தினர். இதனால் கெலோட் அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டது. சுமார் 1 மாத காலம் நீடித்த அரசியல் நெருக்கடியை கட்சித் தலைமை தலையிட்டு தீர்த்து வைத்தது. சச்சின் பைலட் துணை முதல்வர் பதவியிலிருந்தும், மாநில காங்கிரஸ் தலைவர் பதவியிலிருந்து நீக்கப்பட்டார்.

2020 ஆம் ஆண்டு எனது அரசுக்கு நெருக்கடி ஏற்பட்ட போது முன்னாள் முதல்வர் வசுந்தராராஜே, முன்னாள் சட்டப்பேரவைத் தலைவர் கைலாஷ் மேக்வால் மற்றும் எம்.எல்.ஏ. ஷோபாராணி குஷ்வாஹா ஆகியோர் ஆட்சி கவிழாமல் உதவி செய்தனர். நான் மாநில காங்கிரஸ் தலைவராக இருந்தபோது, பைரோன் சிங் ஷெகாவாத் தலைமையிலான பா.ஜ.க. அரசுக்கு இதேபோல் அரசியல் நெருக்கடி ஏற்பட்டது. அப்போது ஆட்சி கவிழாமல் இருக்க

நான் உதவினேன். அதேபோல் அவர்களுக்கு எனக்கு உதவி செய்தனர் என்றார் கெலோட்.

சதித்திட்டம் வசுந்தரா: எனினும் கெலோட் கூறியுள்ளவை சதித்திட்டத்தின் ஒரு பகுதியாகும் என்றும் தம்மை அவர் அவமதித்துவிட்டதாகவும் வசுந்தார ராஜே கூறியுள்ளார். 2023 தேர்தல் தோல்வி பயத்தில் அவர் ஏதோதோ உளறுவதாகவும் அவர் கூறினார்.

கடந்த ஆண்டு நடைபெற்ற மாநிலங்களவைத் தேர்தலில் ஷோபாராணி குஷ்வாஹா, காங்கிரஸ் வேட்பாளருக்கு ஆதரவாக வாக்களித்ததால் பா.ஜ.க.விலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் அமித்ஷாவிடம் வாங்கிய பணத்தை திருப்பித் தராவிட்டால், அவர் தொடர்ந்து நெருக்கடி கொடுப்பார். மிரட்டல் விடுப்பார். மகாராஷ்டிரத்தில் சிவசேனை கட்சிக்குள் பிளவு ஏற்படுத்தியதுபோல பிளவை ஏற்படுத்துவார். என்றார். காங்கிரஸார் நடந்தவைகளை மறந்துவிட்டு ஒன்றுபட்டு வரவிருக்கும் தேர்தலில் காங்கிரஸ் மீண்டும் ஆட்சியைப் பிடிப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று அசோக் கெலோட் கேட்டுக் கொண்டார்.

2020 இல் தமது அரசுக்கு எதிராக அதிருப்தி கோஷ்டி உருவாவதை சரியான நேரத்தில் தெரிவித்த காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் ரோஹித் போரா, சேடன் துடி மற்றும் டானிஷ் அப்ரார்

ஆகியோரை அவர் பாராட்டினார். அவர்கள் தகவல் தெரிவிக்காமல் இருந்திருந்தால் தாம் இன்று முதல்வராக நீடித்திருக்க முடியாது என்றும் கெலோட் குறிப்பிட்டார்.

இதனிடையே ஆட்சியை காப்பாற்ற பா.ஜ.க.வினர் உதவியதாக கெலோட் கூறியுள்ளது முற்றிலும் அடிப்படை இல்லாதது என்று மூத்த பா.ஜ.க. எம்.எல்.ஏ.வும் கட்சியின் செய்தித் தொடர்பாளருமான ராம்லால் சர்மா தெரிவித்தார். காங்கிரஸ் கட்சியில் கெலோட்டுக்கு எதிராக அதிருப்தி கோஷ்டியினர் செயல்பட்டதற்கும் பா.ஜ.க.வுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.

காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் சிலர் அமித்ஷாவிடமிருந்து பணம் பெற்றதற்கான ஆதாரம் இருந்தால் அவர்களை ஏன் கெலோட் கட்சியிலிருந்து வெளியேற்றவில்லை என்று சர்மா கேள்வி எழுப்பினார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com