
ராஜஸ்தான் மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் இரண்டாவது பட்டியலில் முன்னாள் முதல்வர் வசுந்தரா ராஜே உள்ளிட்ட 83 பேர் அடங்கிய இரண்டாவது பட்டியலை பா.ஜ.க. வெளியிட்டுள்ளது. வசுந்தரா, வழக்கமான ஜல்ராபதான் தொகுதியிலேயே போட்டியிடுகிறார்.
மத்திய அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத்துடன் வசுந்தரா நேரடி மோதலில் ஈடுபட்டுவந்தார். 2018 ஆம் ஆண்டு ஷெகாவத், ராஜஸ்தான் மாநில பா.ஜ.க. தலைவராக நியமிக்கப்பட்டதிலிருந்தே இருவருக்கும் ஒத்துப்போகவில்லை. ஷெகாவத் நியமனத்தை அவர் எதிர்த்துவந்தார். இந்த நியமனம் ஜாட் சமூகத்தினரை கட்சியிலிருந்து ஒதுக்கிவைத்துவிடும் என்றும் கூறிவந்தார்.
பா.ஜ.க.வின் முதல் வேட்பாளர் பட்டியலில் வசுந்தரா பெயர் இல்லை. அவர் ஓரங்கட்டப்பட்டதாகவே பலரும் பேசிவந்தனர். எனினும் அரசியல் சமன்பாடுகளை சமநிலைப்படுத்தும் முயற்சியாக இந்த நடவடிக்கை பார்க்கப்படுகிறது. வசுந்தரா மட்டுமல்லாமல் அவரது ஆதரவாளர்களுக்கும் தேர்தல் சீட் வழங்கப்பட்டுள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி, கட்சித் தலைவர் ஜே.பி.நட்டா உள்ளிட்டோர் கலந்துகொண்ட கட்சியின் மத்திய தேர்தல் குழு கூட்டத்தில், வசுந்தராவின் செல்வாக்கை பயன்படுத்திக் கொள்ள பா.ஜ.க. தலைமை முடிவு செய்தது. மாநிலத்தில் பல்வேறு மட்டத்திலும் அவருக்கு செல்வாக்கு இருப்பதையும் உணர்ந்து கொண்டது.
வசுந்தரா ராஜே சிந்தியா, மத்தியப் பிரதேசத்திலுள்ள முன்னாள் குவாலியர் அரச குடும்பத்தைச் சேர்ந்தவர். அவரது தாயார் விஜராஜே சிந்தியா பாரதீய ஜனசங்கத்தில் பிரபலமான தலைவராக இருந்தவர். பாரதீய ஜனசங்கம்தான் பின்னர் பா.ஜ.க.வாக மாறியது. அவரது சகோதரர் மாதவாராவ் சிந்தியா, காங்கிரஸ் கட்சியில் முக்கிய தலைவர்களில் ஒருவராக இருந்தவர்.
பா.ஜ.க. இரண்டாவது பட்டியலில் நர்பாத் சிங் ராஜ்விக்கு வித்யாநகர் தொகுதியில் போட்டியிட சீட் கொடுத்துள்ளது. முன்னதாக ஐந்து முறை எம்.எல்.ஏ.வாக இருந்த அவருக்கு இந்த தேர்தலில் சீட் கொடுப்பதில்லை என்று பா.ஜ.க. முடிவு செய்திருந்தது. ராஜ்வி பிரபல அரசியல் தலைவர் பைரோன்சிங் ஷெகாவத்தின் மருமகனாவார். அவரது பெயரும் முதல் பட்டியலில் இடம்பெறவில்லை. தனக்கு சீட் கொடுக்காதது குறித்து பா.ஜ.க.வை அவர் கடுமையாக விமர்சித்ததை அடுத்து பா.ஜ.க. தலைமை தனது நிலையை மாற்றிக்கொண்டு இப்போது சீட் கொடுத்துள்ளது.
ராஜஸ்தான் மாநிலத்தில் 200 சட்டப்பேரவைத் தொகுதிகள் உள்ளன. இங்கு வரும் நவம்பர் 25 ஆம் தேதி தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்தல் முடிவுகள் டிசம்பர் 3 ஆம் தேதி வெளியாகும்.கடந்த 2018 தேர்தலில் காங்கிரஸ் 100 இடங்களில் வென்றது. பா.ஜ.க.வுக்கு 73 இடங்களே கிடைத்தன. முடிவில் காங்கிரஸ் ஆட்சியமைத்தது. அசோக் கெலோட் முதல்வரானார். 6 இடங்களில் வென்ற பகுஜன் சமாஜ் கட்சி அவருக்கு ஆதரவு அளித்தது குறிப்பிடத்தக்கது.