விடுதலை சிறுத்தைகள் கட்சி ஆந்திரா, தெலங்கானாவில் தனது கிளையை நிறுவியது

 விடுதலை சிறுத்தைகள் கட்சி ஆந்திரா, தெலங்கானாவில் தனது கிளையை நிறுவியது

விசிக பொதுச் செயலாளர் சிந்தனைச் செல்வன், தலித் மற்றும் பிற பிற்படுத்தப்பட்ட சமூகங்களின் வலுவான ஆதரவைப் பெற்ற இடதுசாரி இயக்கத்தின் முன்னாள் உறுப்பினர்கள், காங்கிரஸ் கட்சியை மட்டுமில்லாமல், இப்போது விசிகவையும் மாற்றாகப் பார்க்கிறார்கள் என்று தெரிவித்துள்ளார்.

“கர்நாடகா, ஆந்திரப் பிரதேசம், தெலங்கானா மாநிலங்களில் உள்ள தலித்துகளின் பிரச்சனைகளை காங்கிரஸ் எழுப்புகிறது. ஆனால், நாளடைவில் தொடாந்து போராடாமல் பிரச்சினைகளை நீர்த்துப்போகச் செய்கிறார்கள். எனவே, இங்கு வலுவான தலித் கட்சி தேவை” என்று சிந்தனைச் செல்வன் கூறுகிறார்.

திருமாவளவன் சமீபத்தில் தனியார் தொலைக்காட்சி ஒன்றிற்கு பேட்டி அளித்தார். அப்போது பாஜக, காங்கிரஸ் ஆகிய இரண்டு கட்சிகளுமே இந்தியாவில் ஒரு பொது மொழி தேவை என்ற கருத்தை முன்வைக்கின்றன. பிராந்திய மொழிகளை அழிக்க இரண்டு கட்சிகளுமே முடிவு செய்துள்ளன என்றார். இதனால் பாஜக மட்டுமின்றி காங்கிரஸ் கட்சிக்கு எதிராக திருமாவளவன் திரும்பக்கூடும் எனத் தெரிகிறது. ஏற்கனவே திமுக, அதிமுக ஆகிய இரண்டு கட்சிகளையும் சமயம் வரும் போது கண்டிக்க தவறியது இல்லை.

1990களில் அம்பேத்கர் நூற்றாண்டு விழாவைத் தொடர்ந்து தமிழகத்தில் எழுச்சி பெற்ற தலித் அரசியலில் இந்திய குடியரசு கட்சி, தலித் பேந்தர் ஆஃப் இந்தியா (டிபிஐ, புரட்சி பாரதம் உள்ளிட்ட தலித் அரசியல் இயக்கங்கள் வலுப்பெற்றன. மகாராஷ்டிராவில் தொடங்கப்பட்ட தலித் பேந்தர் இயக்கத்தில் தமிழ்நாடு அமைப்புக்கு திருமாவளவன் தலைமை ஏற்ற பிறகு அது புதுவேகம் பெற்றது. அதே நேரத்தில் தலித் அரசியல் மட்டுல்லாமல் தமிழ்த் தேசிய அரசியலையும் பேசத் தொடங்கியது. தலித் பேந்தர் இயக்கம் பின்னர் விடுதலை சிறுத்தைகள் கட்சி என்ற தமிழ் அடையாளத்துடன் மாறியது. சாதி ஒழிப்பே மக்கள் விடுதலை என்ற முழக்கத்துடன் தமிழ்த் தேசிய அரசியலையும் பேசியதால் திருமாவளவன் தலைமையிலான விசிக, தலித் கட்சிகளில் இருந்து தனித்து விளங்கியது.


குறிப்பாக திமுக விஷயத்தில் ’தோழமை சுட்டல்’ என்று சொல்லியிருக்கிறார். மேலும் பிற்படுத்தப்பட்ட மக்களுக்காவும் குரல் கொடுத்து அனைவருக்குமான அரசியல் தலைவராக உருவெடுத்துள்ளார். மற்றொரு பேட்டியில், இதுவரை தனித்து நின்று வாக்கு சதவீத்தை நிரூபித்தது கிடையாது. எங்கள் வாக்கு வங்கி எவ்வளவு என்று எங்களுக்கே தெரியாது. ஆனால் எங்கள் கட்சியை சிவப்பு கம்பளம் விரித்து எல்லா கட்சிகளுமே வரவேற்கின்றன. அதற்கு நாங்கள் அரசியலையும் தாண்டி செயல்படுவது தான் என்றார். திருமாவளவனுக்கு கர்நாடகாவில் நல்ல வரவேற்பு உண்டு. அவ்வப்போது விழாக்களில் பங்கேற்று கவனம் ஈர்த்து வருகிறார். திமுக தொடங்கப்பட்ட 1950களில் கர்நாடக மாநிலத்தில் அக்கட்சியின் கொடி பறந்தது. அங்குள்ள தமிழர்கள் பெரும் வாக்கு வங்கியாக இருந்தனர். தற்போதும் இருக்கின்றனர். ஆனால் அங்கு நடந்த கலவரங்களால் திமுக பலமிழந்தது. தற்போது திருமாவளவன் மூலம் தமிழ்நாட்டை சேர்ந்த ஒரு கட்சி கர்நாடகாவில் கிளையை நிறுவியுள்ளது. இந்த சூழலில் ஆந்திரா மற்றும் தெலுங்கானாவிலும் விசிக தனது கிளையை நிறுவியுள்ளது.

தனது ட்விட்டர் பதிவில் ஆந்திராவில் புதிய கிளைகளை திறந்துள்ளதாகவும், பல மாவட்டங்களில் அலுவலகங்கள் இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார். விசிகவின் வாக்கு வங்கி பற்றி யாருக்கும் தெரியாவிட்டாலும் பட்டியலின மற்றும் ஒடுக்கப்பட்ட மக்கள் மத்தியில் விசிகவிற்கு இருக்கும் செல்வாக்கு பற்றி அனைத்து கட்சிகளும் அறிந்து வைத்துள்ளன. திருமாவளவனை புறக்கணித்தால் ஒடுக்கப்பட்ட மக்களின் எதிர்ப்பை சம்பாதிக்க வேண்டும் என்பதை இரண்டு திராவிட கட்சிகளுமே நன்கு உணர்ந்துள்ளன

இத்தகைய சூழலில் திருமாவளவன் தலைமையிலான விசிக, தென்னிந்தியாவில் கிளைகளாக விரிவடைவது, திராவிட கட்சிகள் மற்றும் தேசிய கட்சிகளுக்கு பெரிய தலைவலி என்று சொல்லப்படுகிறது. விசிக தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யப்பட்ட கட்சி மட்டுமே. தேர்தல் ஆணையத்தால் அங்கீரிக்கப்பட்ட கட்சியாக மாறவில்லை. திருமாவளவனின் நீண்ட கால லட்சியங்களில் ஒன்று அங்கீரிக்கப்பட்ட கட்சி என்ற அடையாளத்தை பெறுவது.

தற்போது விசிக பக்கத்து மாநிலங்களில் காலூன்றி வருவதால் இனி வரும் மக்களவை மற்றும் சட்டமன்ற தேர்தலில் தனி சின்னத்தில் போட்டியிட்டு அங்கீரிக்கப்பட்ட கட்சியாக மாற வேண்டும் என முனைப்பு காட்டி வருகிறது. இதற்கான வேலைகளில் தீவிரம் காட்டி கொண்டிருக்கிறது. இதனால் தமிழ்நாட்டை சேர்ந்த இரண்டு திராவிட கட்சிகளும் கலக்கத்தில் ஆழ்ந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதுமட்டுமின்றி அடுத்து வரும் தேர்தல்களில் திருமாவளவன் அதிக தொகுதிகளை கேட்டால் மற்ற கூட்டணி கட்சிகளை எப்படி சமாளிப்பது என்ற ஆலோசனையிலும் ஈடுபட்டுள்ளனராம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com