

திமுக கூட்டணியில் எஞ்சியிருந்த கட்சிகளில் ஒன்றான விடுதலை சிறுத்தைகள் கட்சி, வெளியேற உள்ளதாக தகவல் பரவி வருகின்றன. தவெக கூட்டணி அமைச்சரவையில் பங்கேற்றாலும், திமுக கூட்டணியை விட்டு விலகவில்லை , என்று விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் கூறிவந்துள்ளார்.
நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலுக்கு பின்னர், தமிழகத்தின் ஒட்டுமொத்த அரசியல் சூழலும் முற்றிலும் மாறி போய் உள்ளது. ஆட்சி அமைப்பதற்காக பெரும்பான்மை பலம் இல்லாததால் , தவெக மற்ற கட்சிகளிடம் ஆதரவு கோரியது. அதிமுக ஆதரவை தராமல் இழுத்தடித்த நிலையில் அப்போது செயல்பட்டதால் , திமுக கூட்டணியில் இருந்த கட்சிகள் ஆதரவு கொடுத்தனர்.
திமுகவின் முன்னாள் கூட்டணி கட்சிகள் ஆதரவுடன் தமிழக வெற்றி கழகம் ஆட்சி அமைத்தது. அதன் பின்னர் கூட்டணி கட்சிகளுக்கு அமைச்சர் பதவிகளை விஜய் வாரி வழங்கினார். இந்த சம்பவம் ஒட்டுமொத்த தமிழக அரசியலையே புரட்டி போட்டது.
இதற்கு முன்னர் கூட்டணி கட்சிகளுக்கு அமைச்சர் பதவி அளிப்பது கலாச்சாரம் இல்லாததால் , தேர்தல் தோல்விக்கு பின்னாலும் தங்களது கட்சிகளில் சட்டமன்ற உறுப்பினர்கள் தொடர்ந்து பயணித்து வந்தனர். ஆனால், தற்போது காலம் மாறிவிட்டது.
தங்களது கட்சி தேர்தலில் தோற்றுவிட்டால், அந்த கட்சியை விட்டு விரைவாக வெளியேறுவது தற்போது ட்ரெண்டிங்கில் உள்ளது. இந்த சம்பவம் தமிழகம் மட்டுமல்லாது மற்றும் மாநிலங்களிலும் தொடர்ச்சியாக நடைபெறுகிறது. தமிழகத்தில் அதிமுக கட்சியை சேர்ந்த எம்எல்ஏக்கள் , வாரத்திற்கு ஒருவர் என்று பதவியை ராஜினாமா செய்து விட்டு தமிழக வெற்றி கழகத்தில் இணைந்து கொண்டிருக்கிறார்கள்.
தவெக ஆட்சிக்கு ஆதரவு அளித்து ஆட்சியைக் காப்பாற்றிய கட்சிகள், அமைச்சரவையில் பங்கேற்றாலும் திமுக கூட்டணியில் இருப்பதாகவே பொதுவெளியில் கூறிவந்துள்ளனர். இதில் காங்கிரஸ் கட்சி ஆரம்பத்திலேயே திமுக கூட்டணியை விட்டு விலகுகிறோம், என்று அறிவித்த பின்னரே தவெக ஆட்சிக்கு ஆதரவளித்தது. அதன் பின்னர் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியும் திமுக கூட்டணியை விட்டு வெளியேறியது. கூட்டணியை விட்டு வெளியேறியதால் காங்கிரஸ் கட்சியை திமுக மிக கடுமையாக விமர்சித்து வந்தது.
முஸ்லிம் லீக் கட்சியை தொடர்ந்து சில தினங்களுக்கு முன்னர் , மதிமுக தனது பொதுக் குழுவினை கூட்டியது. அந்தக் கூட்டத்தில் திமுக கூட்டணியை விட்டு வெளியேறுவது என்று தீர்மானம் போட்டனர். இறுதியாக அவர்களிடம் மிச்சம் இருந்தது விசிக மட்டும் தான். விசிக இதுவரை இரட்டை ஆதரவு நிலையை எடுத்து வந்தது.
வழக்கமாக திமுகவை விமர்சிக்காத திருமாவளவன் , நேற்று கூட்டணியின்றி திமுகவால் ஆட்சியை பிடிக்க முடியுமா? என்று தெரியவில்லை. கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் தான் திமுக 60 இடங்களில் வென்றது. கூட்டணி கட்சிகள் இன்றி எதிர்காலத்தில் ஆட்சி அமைப்பது கடினம் என்று கூறியுள்ளார். "திமுக தலைமையிலான கூட்டணியை தேர்தலுக்கு முன் கட்டிக் காப்பாற்றியவன் திருமாவளவன் , இதை யாராலும் மறுக்க முடியாது" என்று கூறியிருந்தார்.
இந்நிலையில் இன்று விடுதலை சிறுத்தைகள் கட்சி திமுக கூட்டணியில் இருந்து வெளியேறுகிறது, என தகவல்கள் பரவி வருகின்றன. ஜூலை 1 ஆம் தேதி தவெக கூட்டணி கட்சிகளின் கூட்டம் விஜய் தலைமையில் கூடுகிறது. இந்த கூட்டத்திற்கு விடுதலை சிறுத்தைகள் செல்ல உள்ளது. இதற்காக திமுக கூட்டணியில் இருந்து அந்த கட்சி வெளியேற உள்ளதாக தகவல்கள் பரவி வருகின்றன .