சென்னை ஐகோர்ட்டு உத்தரவை தொடர்ந்து கடந்த 12-ந்தேதி நொச்சிக்குப்பம் முதல் பட்டினம்பாக்கம் வரையிலான லூப் சாலையை ஆக்கிரமித்து வைக்கப்பட்டிருந்த மீன் கடைகள், உணவகங்களை போலீசார் உதவியுடன் சென்னை மாநகராட்சி அதிகாரிகள் அகற்றினர்.
மீன் கடைகளை அகற்றியதற்கு எதிர்ப்பு தெரிவித்து மீன் வியாபாரிகளும், மீனவ பெண்களும் கடந்த 13-ந்தேதி போராட்டத்தில் இறங்கினர். அப்போது, விற்பனைக்கு வைத்திருந்த மீன், நண்டு ஆகியவற்றை சாலையில் கொட்டி எதிர்ப்பு தெரிவித்தனர். நொச்சிக்குப்பம் முதல் பட்டினம்பாக்கம் வரையிலான மீன்பிடி பகுதிகளை மீன்பிடி மண்டலமாக அறிவிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.
நொச்சிக்குப்பம் மீனவர்கள் இங்கு காலம் காலமாக வாழ்ந்து வருகிறார்கள். நாள் முழுவதும் மீன் வியாபாரம் செய்து வருகிறார்கள். உயர்நீதிமன்ற நீதிபதிகள் நேரடியாக இதில் தலையிட்டு தீர்ப்பு வழங்கி உள்ளார்கள் என வருத்தப்பட்டார் விசிக தலைவர் திருமாவளவன்.
சென்னை நொச்சிக்குப்பம் சாலையில் ஆக்கிரமிப்புகளை அகற்றப்பட்டதை கண்டித்து நொச்சிக்குப்பம் பகுதி மீனவர்கள் கடந்த இரண்டு நாட்களாக சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்க விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் நேரில் சந்தித்து, மீனவர்களுடன் சாலையில் அமர்ந்து ஆதரவு தெரிவித்தார்.
மீனவ சமூகத்தினரின் இந்த உணர்வை புரிந்து கொள்ள வேண்டும். பரம்பரை பரம்பரையாக இந்த பகுதியில் வாழ்ந்து வரும் மக்களை சுத்தம் என்கிற பெயராலும், அனைவருக்கும் புதுவித மாற்றம் என்கின்ற பெயராலும், இந்த பகுதி மீனவர்களை இந்த பகுதியில் இருந்து அகற்றுவது என்பது, இயற்கை நீதிக்கு புறம்பானது.
உயர்நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிராக மேல்முறையீட்டு மனுவை அரசு தாக்கல் செய்ய வேண்டும். மக்களின் கோரிக்கையை ஏற்று இவர்களின் வசிப்பிடத்திற்கு அருகே வேறு இடத்தில் கட்டப்பட உள்ள கடைகளை இதே பகுதியில் கட்டித் தர வேண்டும் என்று கோரிக்கை வைத்தார் விசிக தலைவர் திருமாவளவன்.