இஸ்ரோ வடிவமைத்துள்ள சந்திரயான் 3 விண்கலம் நாளை விண்ணில் ஏவப்படவிருக்கும் நிலையில், இத்திட்டத்தில் முக்கிய பங்குவகித்த விழுப்புரத்தைச் சேர்ந்த ஓர் தமிழரைப் பற்றி இந்தப் பதிவில் பார்க்கலாம்.
இந்தத் திட்டம் வெற்றியடைந்தால், நிலவின் மேற்பரப்பில் விண்கலத்தை இறக்கிய நான்காவது நாடு என்ற பெருமையை இந்தியா பெறும். எனவே உலகம் முழுவதும் சந்திரயான் 3 திட்டம் பற்றிய எதிர்பார்ப்புகள் உருவாகி இருக்கிறது. இந்நிலையில் இத்திட்டத்திற்கு மூளையாக செயல்பட்ட தமிழர் குறித்த தகவல்கள் வெளிவந்துள்ளது. அவர்தான் இஸ்ரோ விஞ்ஞானியான வீரமுத்துவேல். சந்திரயான் 3 முழுக்க முழுக்க இவருடைய வழிகாட்டுதலின் பேரிலேயே உருவாக்கப்பட்டுள்ளது.
விழுப்புரத்தைச் சேர்ந்த வீரமுத்துவேல் சென்னை ஐஐடியில் படித்தவர். பின்னர் இவருடைய பங்கு சந்திரயான் 2 திட்டத்திலும் இருந்ததாக கூறப்படுகிறது. இதற்கு முன்பு சந்திரயான் 2 திட்டத்திற்கு இயக்குனராக இருந்த வனிதாவுக்கு பதிலாகத் தான் வீரமுத்துவேல் சந்திரயான் 3 திட்டத்திற்கு இயக்குனராக செயல்பட்டு வருகிறார். இவரின் தந்தையான பழனிவேல் என்பவர் சதர்ன் ரயில்வேயில் டெக்னீசியனாக பணியாற்றியவர்.
தன் தந்தையுடன் விழுப்புரம் ரயில்வே குடியிருப்பில் தங்கி, அங்குள்ள ரயில்வே பள்ளியிலேயே படித்திருக்கிறார். பின்னர் தாம்பரத்தில் உள்ள தனியார் கல்லூரியில் பொறியியல் படிப்பை முடித்து, முதுநிலை ஆராய்ச்சி படிப்பை சென்னை ஐஐடியில் முடித்திருக்கிறார். இப்படி தொழிற்கல்வி முதல் ஆராய்ச்சி படிப்புவரை வெவ்வேறு சூழ்நிலைகளில் இவரது பயணம் இருந்திருக்கிறது.
அதன் பிறகு மத்திய அரசுத் துறையில் இவருக்கு ஏராளமான வேலைகள் கிடைத்த போதிலும், அந்தப் பணிகளில் இவர் சேரவில்லை. அதன் பிறகு 2014ல் இஸ்ரோ விஞ்ஞானியாக சேர்ந்து, இஸ்ரோ தலைமையகத்தின் விண்வெளி உட்கட்டமைப்பு அலுவலகத்தின் துணை இயக்குனராக இருந்தார். இதைத் தொடர்ந்து தான் 2019 ஆம் ஆண்டு சந்திரயான் 3 திட்டத்திற்கு வீரமுத்துவேல் இயக்குனராக நியமிக்கப்பட்டார்.
இவருக்கு கீழே மொத்தம் 29 துணை இயக்குனர்களும், அவர்களுக்குக் கீழே ஏராளமான பொறியாளர்களும் ஒன்றாக இணைந்து தான் சந்திரயான் 3 செயற்கைக்கோளை வெற்றிகரமாக உருவாக்கி இருக்கின்றனர். தற்போது இந்த விண்கலம் முழுமையடைந்து விண்ணில் ஏவப்படுவதற்கு தயார் நிலையில் இருக்கிறது.
சிறுவயதிலிருந்தே இஸ்ரோவில் விஞ்ஞானியாக வேண்டும் என்ற வீர முத்துவேலின் சிறு வயது கனவு, இவரோடு இணைந்து செயல்பட்ட நூற்றுக்கணக்கான விஞ்ஞானிகளின் உழைப்பு, மேலும் இந்தியாவின் ஒட்டுமொத்த கனவும் சந்திரயான் 3 விண்கலத்தால் நிறைவேறப் போகிறது. இதனாலேயே இந்தத் திட்டம் உலகம் முழுவதும் எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது.