வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் திட்டம் - 15 ஆண்டுகால காத்திருப்புக்கு பின்னர் கைவிடப்படுகிறதா?

வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் திட்டம் - 15 ஆண்டுகால காத்திருப்புக்கு பின்னர் கைவிடப்படுகிறதா?

வேளச்சேரி-பரங்கிமலை இடையேயான பறக்கும் ரயில் சேவையை தமிழக முதல்வர், 2023 மார்ச் மாதம் தொடங்கி வைப்பார் என்று சென்ற ஆண்டு அமைச்சர் முத்துசாமி அறிவித்திருந்ததார். இன்னும் இரண்டு நாட்களில் மார்ச் மாதம் முடிவடையும் நேரத்தில் பறக்கும் ரயில் திட்டத்தின் தற்போதைய நிலை பற்றி ஒரு கள ஆய்வை மேற்கொண்டோம்.

ரூ.495 கோடியில் தொடங்கப்பட்ட திட்டம், சென்னையின் காஸ்ட்லியான மெட்ரோ ரயில் திட்டம். வேளச்சேரி, புழுதிவாக்கம், ஆதம்பாக்கம் ஆகிய இடங்களில் ரயில் நிலையங்களும் அமைக்கப்பட்டு தயாராகிவிட்டன. ஆனால், செயல்பாட்டுக்கு வராத காரணத்தால் பராமரிப்பு இன்றி மோசமான நிலைக்கு ஆளாகியிருக்கின்றன.

புழுதிவாக்கம் ரயில் நிலையம், பேய் பங்களா போல் காட்சியளிக்கிறது. இன்னும் பயன்பாட்டுக்கே வராத கட்டிடம் என்றாலும் வெளிப்புறத் தோற்றத்தில் 30 ஆண்டுகளுக்கு முன்னர் கட்டிமுடிக்கப்பட்டது போல் தெரிகிறது. அமரும் இருக்கைகள், இருக்கைகள், லிப்ட் வசதிகள் அனைத்தும் சேதமடைந்து கிடக்கின்றன.

டிக்கெட் கவுண்டரில் ஏராளமான டாஸ்மாக் பாட்டில் சிதறிக்கிடக்கிறது. வளாகத்தின் உள்ளேயும், வெளியேயும் ஏராளமான மதுபாட்டில்கள் உடைக்கப்பட்டு, சிதறிக்கிடக்கின்றன. ஆள் அரவமற்ற பகுதி வழியாக மக்கள் கடந்து செல்வதற்குக்கூட அச்சப்படுகிறார்கள். இரவு நேரங்களில் ஆட்கள் நடமாட்டமும், குடிமகன்களின் கூச்சலும் இருப்பதாக பாதசாரிகள் தெரிவிக்கிறார்கள்.

சென்னை கடற்கரை முதல் வேளச்சேரி வரை செயல்பட்டு வரும் பறக்கும் ரயில் திட்டத்தை பரங்கிமலை வரை நீட்டிக்க 2007 ஆண்டு திட்டமிடப்பட்டது. சென்னை வேளச்சேரியில் இருந்து பரங்கிமலை வரை 5 கி.மீ. தொலைவுக்கு பணிகள் ஆரம்பிக்கப்பட்டு 3 ஆண்டுகளில் 90 சதவீத பணிகள் நிறைவடைந்துவிட்டன. அடுத்து வந்த 13 ஆண்டுகளில் பறக்கும் ரயில் திட்டத்தை செயல்படுத்துவதில் எந்த முன்னேற்றமும் இல்லை.

ஆதம்பாக்கம் - பரங்கிமலை இடையே 500 மீட்டர் தூரத்துக்கு நிலத்தை கையகப்படுத்துவதில் பிரச்னை இருந்து வந்தது. இதன் காரணமாக 2013ல் நிறைவடைய இருந்த திட்டம் பத்தாண்டுகளுக்கும் மேலாக தாமதமாகி வருகிறது. பரங்கிமலை ரயில் நிலையத்தோடு இணைக்கும் பாதையில் நிலம் கையகப்படுத்துதல் தொடர்பாக தொடரப்பட்ட வழக்குகளால் பணிகள் முடங்கிப் போயின.

உச்ச நீதிமன்ற தலையீட்டுக்கு பிறகு, சட்டப் போராட்டம் முடிவுக்கு கொண்டு வரப்பட்டது. அதைத் தொடர்ந்து இறதிக்கட்ட இணைப்பு பணிகள் வேகமெடுத்தன. ஆனால், திட்டத்திற்கான மதிப்பீடு அதிகமாகிவிட்டதால் தற்போது திட்டத்தை தொடர முடியாத நிலை ஏற்பட்டிருப்பதாக செய்திகள் வருகின்றன.

ரூ.495 கோடியில் தொடங்கப்பட்ட, திட்ட மதிப்பீடு காலப்போக்கில் ரூ.730 கோடியாக உயர்ந்திருக்கிறது. கூடுதலாக இன்னும் சில கோடிகள் தேவைப்படுகிறது என்கிறார்கள், தென்னக ரயில்வே நிறுவன அதிகாரிகள். மேடவாக்கத்தையும் பரங்கிமலையையும் இணைக்கும் திட்டம் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியிருப்பதால், வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் திட்டம் அமலுக்கு வருவதற்குள் மேடவாக்கம் - பரங்கிமலை திட்டம் அமலுக்கு வந்துவிடும் என்கிறார்கள்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com