

தென் அமெரிக்க நாடான வெனிசுலாவில் அடுத்தடுத்து இரண்டு சக்திவாய்ந்த நிலநடுக்கங்கள் இன்று அதிகாலை ஏற்பட்டுள்ளது. குறிப்பிட்ட நிமிட இடைவெளியில் 7.1 மற்றும் 7.5 ஆகிய ரிக்டர் அளவில் இரண்டு சக்திவாய்ந்த நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளதை அமெரிக்க புவியியல் ஆய்வு மையமும் நிலநடுக்கத்தை உறுதிப்படுத்தியுள்ளது.
மோரோன் (Morón) நகருக்கு மேற்கே கரீபியன் கடற்கரை பகுதியில் சுமார் 13 கி.மீ ஆழத்தில் ஏற்பட்ட முதல் நிலநடுக்கம் 7.1 என ரிக்டர் அளவு கோலில் பதிவாகியுள்ளது. இதைத் தொடர்ந்து அடுத்த நிலநடுக்கம் 7.5 என ரிக்டர் அளவு கோலில் பதிவாகியுள்ளது. இந்த நில நடுக்கமும் மோரோன் நகருக்கு தென்மேற்கே 16 கி.மீ தொலைவில் 10 கி.மீ ஆழத்தில் ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இதனை அடுத்து அங்கே சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. .
வெனிசுலா தலைநகர் கராகஸ் உட்பட நாட்டின் பல பகுதிகளில் இந்த அதிர்வுகள் பலமாக உணரப்பட்டதாகவும், சில இடங்களில் கட்டிடங்கள் இடிந்து விழுந்துள்ளதாகவும், வீடுகளில் பொருட்கள் சேதமடைந்துள்ளதாகவும் வெனிசுலா நிலநடுக்கம் தொடர்பாக சமூகவலைதளங்களில் வெளியான பதைபதைக்கும் காட்சிகள் கொண்ட வீடியோக்கள் மூலம் அறியப்படுகிறது.
அடுத்தடுத்து நிகழ்ந்த இந்த நிலநடுக்கங்கள் காரணமாக அங்கு பல இடங்களில் சுவர்கள் இடிந்து விழுந்ததைக் கண்ட பொதுமக்கள் அச்சத்தில் தங்களுடைய உடமைகளை தூக்கிக் கொண்டு தெருக்களில் தஞ்சம் அடைந்ததுள்ளனர். பரபரப்பாக இயங்கி வந்த உணவு விடுதிகள் முதல் மற்ற கடைகளில் இருந்தவர்கள் அலறியடித்து சாலைகளில் ஓடியதும், சாலை முழுவதும் புழுதி பறக்க மக்கள் அங்கும் இங்கும் ஓடி பலர் காயமடைந்ததாகவும் செய்திகள் கூறுகின்றன. இதை உறுதிப்படுத்தும் விதமாக அந்நாட்டின் உள்துறை மந்திரி பல்வேறு மாகாணங்களிலும் நில நடுக்கங்களின் தாக்கம் உணரப்பட்டதாகவும் மக்களில் பலர் காயமடைந்து உள்ளதாகவும் கூறியுள்ளார். மேலும் தலைநகர் கராகஸ் மட்டுமல்லாமல், பல இடங்களும் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், நிவாரண மற்றும் மீட்பு பணிகளில் அரசு துரிதமாக செயல்பட்டு வருவதாகவும் உள்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
அடுத்தடுத்து நிகழ்ந்த இந்த சக்தி வாய்ந்த் நிலநடுக்கத்தைத் தொடர்ந்து போர்டோ ரிக்கோ மற்றும் அமெரிக்க, பிரிட்டிஷ் விர்ஜின் தீவுகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது. மேலும், வெனிசுலா கடற்கரைக்கு அருகில் உள்ள தீவுகளுக்கும் (அருபா, குராக்கோ மற்றும் போனாய்ர்) ஆபத்தான அலைகள் ஏற்பட வாய்ப்புள்ளதாக எச்சரிக்கப்பட்டு சுமார் ஒரு மணி நேரத்திற்குப் பிறகு இந்த எச்சரிக்கை திரும்பப் பெறப்பட்டதாக கூறப்படுகிறது.
இந்த நிலநடுக்கத்தால் பலியான மக்களின் எண்ணிக்கை குறித்து தகவல்கள் அவ்வப்போது வெளியாகி வருகிறது. தற்போது அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் (USGS), உயிரிழப்பு எண்ணிக்கை 10,000 முதல் 1,00,000 வரை இருக்கக்கூடும் என்று அதிர்ச்சி தரும் ஆரம்பகட்ட மதிப்பீட்டை வெளியிட்டது. மேலும் பலி எண்ணிக்கை உயரும் வாய்ப்பு உள்ளதாக அங்கு உள்ள மக்கள் அச்சத்தில் இருக்கின்றனர்.
அதே வேளையில் இரண்டாவது நிலநடுக்கத்தால் 10 ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்திருக்க 44% வாய்ப்பும், ஒரு லட்சத்திற்கும் அதிகமானோர் உயிரிழந்திருக்க 30% வாய்ப்பும் இருக்கலாம் என அஞ்சப்படுவதாகவும். இருப்பினும், இறப்பு மற்றும் சேதங்கள் குறித்த விவரங்கள் எதுவும் இதுவரை வெளியிடப்படவில்லை எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
காராகஸில் உள்ள அமெரிக்கத் தூதரகம், நிலநடுக்கத்திற்குப் பிந்தைய சூழலைத் தொடர்ந்து கண்காணித்து வருவதாகத் தெரிவித்ததுடன், அந்நாட்டில் உள்ள குடிமக்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறும், சேதமடைந்த பகுதிகளைத் தவிர்க்குமாறும் அறிவுறுத்தியுள்ளது. இதற்கிடையே வெனிசுலா அதிபர் நாட்டில் அவசரகால நிலையை பிரகடனம் செய்துள்ளார். மீட்பு பணிகள் முழு வீச்சில் நடப்பதாகவும் கூறியுள்ளதாகத் தெரிகிறது.
இந்த நூற்றாண்டின் எதிர்பாராத பேரிடரால் ஏற்பட்ட பெரும் உயிரிழப்புகளும் அதிக சேதங்களும் அந்நாட்டின் அன்றாட வாழ்வில் பரவலான பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் என்று கருதப்படுகிறது.
ஸ்பெயினிடமிருந்து வெனிசுலாவின் சுதந்திரத்தை உறுதிப்படுத்திய 1821-ஆம் ஆண்டின் ராணுவ வெற்றியை நினைவுகூறும் பொது விடுமுறை நாளை மக்கள் கொண்டாடி கொண்டிருந்த வேளையில் நிலநடுக்கம் தாக்கியுள்ளது அந்நாட்டினரை என்றும் இந்த நாளை மறக்க இயலாத வேதனையில் ஆழ்த்தியுள்ளது.
இந்நிலையில் வெனிசுலாவை தொடர்ந்து ஜப்பானிலும் 6.9 ரிக்டராக நிலநடுக்கம் பதிவாகி இருப்பதாக சமீபத் தகவல்கள் தெரிவிக்கின்றன.