புதுக்கோட்டை மாவட்டம் இறையூர் கிராமத்தில் வேங்கைவயல் பகுதியில் தலித் இனத்தவர்கள் வசிக்கும் பகுதியில் நடந்த சம்பவம் கடந்த சில மாதங்களாகவே பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் மலம் கழிக்கப்பட்ட சம்பவம் குறித்து சி.பி.சி.ஐ.டி விசாரணை தொடர்ந்து நடந்து வருகிறது.
எத்தனையோ சிக்கலான வழக்குகளை கையாண்ட சி.பி.சி.ஐ.டி குழுவுக்கும் வேங்கை வயல் விவகாரம் பெரும் சவாலாக இருந்து வருகிறது. டிசம்பர் 26 அன்று நடந்த சம்பவம் தொடர்பாக வெள்ளனூர் காவல்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தது. ஆனால், குற்றவாளிகளை கண்டுபிடிக்க முடியவில்லை.
பின்னர் வழக்கு சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றம் செய்யப்பட்டது. சி.பி.சி.ஐ.டி. அதிகாரிகள் கடந்த 40 நாட்களாக தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். விசாரணையின்போது பலர் முன்னுக்கு பின் முரணாக பதிலளித்திருப்பதாக தெரிய வந்திருக்கிறது. இத்தகைய வாக்குமூலங்களை புதிய தொழில்நுட்பம் மூலம் ஆய்வுக்கு உட்படுத்திட சி.பி.சி.ஐ.டி அதிகாரிகள் திட்டமிட்டிருக்கிறார்கள்.
உண்மை கண்டறியும் சோதனை நடத்த இருப்பதாகவும், இதன் மூலம் முக்கியமான குற்றவாளிகளை பிடிக்கமுடியும் என்றும் நம்பப்படுகிறது. வழக்கு விசாரணையில் எந்தவித முன்னேற்றமும் இல்லாத காரணத்தால் அரசியல் ரீதியாக தி.மு.க கூட்டணிக்கட்சிகள் பெரும் சங்கடத்தை எதிர்கொண்டு வருகிறார்கள்.
விசாரணையை துரிதப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு தலித் அமைப்புகள் அரசுக்கு தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகின்றன. இடைத்தேர்தல் நேரத்தில் விசாரணையில் சுணக்கம் ஏற்பட்டதாகவும் சில விமர்சனங்கள் எழுந்த நிலையில் தற்போது விசாரணை விறுவிறுப்பான கட்டத்தை எட்டியிருக்கிறது.
இந்நிலையில் வேங்கை வயல் கிராமத்தில் உள்ள தண்ணீர் தொட்டியை இடிக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. புதிய தொட்டியை உடனே கட்டுவதற்கும் அனுமதி வழஙகப்பட்டுள்ளது. தி.மு.கவின் மாநிலங்களவை உறுப்பினர், எம்.எம்.அப்துல்லா புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியருக்கு எழுதியுள்ள கடிதத்தில், வேங்கை வயல் கிராமத்தில் புதிய தண்ணீர் தொட்டி அமைக்க தனது பாராளுமன்ற உறுப்பினர் நிதியில் இருந்து ரூ 9 லட்சம் நிதி ஒதுக்கியுள்ளதாக குறிப்பிட்டிருக்கிறார்.
சமூக நீதியின் தாயகமாக சொல்லப்பட்டு வரும் தமிழகத்தில் ஒரு அவமானச் சின்னமாக அந்த நீர்த்தேக்க தொட்டி தொடர்ந்து இருந்து வருகிறது. சம்பவம் நடந்து 100 நாள் நிறைவடைதற்குள் புதிய தண்ணீர் தொட்டி கட்டப்படுமா என்கிற எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் இருந்து வருகிறது.