வேங்கை வயல் - தலைமறைவாகியிருக்கும் குற்றவாளிகள். அடுத்து என்ன?

வேங்கை வயல் - தலைமறைவாகியிருக்கும் குற்றவாளிகள். அடுத்து என்ன?

புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் கிராமத்தில் மனிதக் கழிவுகள் கலக்கப்பட்ட விஷயத்தில் இன்னும் குற்றவாளிகளை கண்டுபிடிக்க‘ முடியவில்லை. பெரும்பாலான அரசியல் கட்சிகள் சம்பிரதாயத்திற்கு ஒரு கண்டன அறிக்கையை அளித்துவிட்டு, ஆளுநருக்கு எதிரான அரசியலில் தீவிரமாகிவிட்டன.

குற்றவாளிகளைக் கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தி விடுதலை சிறுத்தைகள் கட்சி ஜனவரி 11 அன்று போராட்டத்தை அறிவித்திருக்கிறது. 'சட்டம் ஒழுங்கு பிரச்னையை சரிவர கையாள வேண்டியது தமிழக அரசின் கடமை. இது போன்ற சம்பவங்கள் தொடர்ந்தால் மாநிலம் முழுவதும் பல பிரச்னைகளை ஏற்படுத்தும்' என்று விடுதலைச் சிறுத்தைகளின் முக்கிய பிரமுகரான ரவிக்குமார் குறிப்பிட்டிருக்கிறார்.

தலித் மக்களுக்கான உரிமைகளை பாதுகாப்பதில் தி.மு.க பல முன்னெடுப்புகளை செய்திருக்கிறது. ஆனாலும், வலது சாரி அரசியல் வளர்ந்து வருவதால் இதுபோன்ற சம்பவங்கள் அதிகரித்து வருவதாக ரவிக்குமார் குறிப்பிடுகிறார். ரவிக்குமார், தி.மு.க எம்பி என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் வேங்கைவயல் கிராமத்தில் புதிதாக நீர்த்தேக்க தொட்டி கட்டுவதற்கான பணிகள் இரண்டொரு தினங்களில் தொடங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்திருக்கிறது. குற்றவாளிகளை தேடும் பணி தொடர்வதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

குற்றவாளிகள் கைது செய்யப்படவேண்டும். புதிய நீர்த்தேக்க தொட்டி கட்டப்படவேண்டும். அதே நேரத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உளவியல் ரீதியான சிகிச்சைகளும் தரப்பட வேண்டியது அவசியம். அறந்தாங்கி "திசைகள் மாணவ வழிகாட்டும் அமைப்பு" என்னும் தன்னார்வலர்களின் அமைப்பு , கடந்த வாரம் தோல் நோய் சிறப்பு மருத்துவ முகாம் ஒன்றை நடத்தியிருக்கிறது.

குடிநீர்த்தொட்டியில் மலம் கலந்து மனதளவிலும் உடலளவிலும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் பொருட்டு மருத்துவ முகாம் நடைபெற்றது. தோல் நோய் சிறப்பு மருத்துவர் மற்றும் திசைகள் மாணவ வழிகாட்டு அமைப்பின் தலைவருமான டாக்டர் தெட்சிணாமூர்த்தி தலைமையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com