
குடியரசு துணைத் தலைவராக இருந்த ஜெகதீப் தங்கர் ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து, புதிய குடியரசு துணைத் தலைவரைத் தேர்வு செய்வதற்கான தேர்தல் இன்று காலை முதல் விறுவிறுப்பாக நடைபெற்றது. ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் தமிழ்நாட்டைச் சேர்ந்தவரும், மகாராஷ்டிரா மாநில ஆளுநருமான சி.பி.ராதாகிருஷ்ணன் போட்டியிடுகிறார். இந்தியா கூட்டணி சார்பில் உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி சுதர்சன் ரெட்டி போட்டியிடுகிறார்.
குடியரசு துணைத் தலைவர் தேர்தலை பொறுத்தவரை நாடாளுமன்ற உறுப்பினர்கள் வாக்களித்து குடியரசு துணைத் தலைவரை தேர்வு செய்வர். மக்களவை உறுப்பினர்களின் மொத்த எண்ணிக்கை 543. மாநிலங்களவை உறுப்பினர்களின் மொத்த எண்ணிக்கை 245. இரு அவை உறுப்பினர்களின் மொத்த எண்ணிக்கை 788. இதில், மக்களவையில் ஒரு இடமும், மாநிலங்களவையில் 5 இடங்களும் காலியாக உள்ளன.
மொத்தம் 782 வாக்குகள் இருக்கும் நாடாளுமன்றத்தில் குறைந்தது 391 வாக்குகளை பெற வேண்டும்.
தேர்தலில் பதிவான வாக்குகள் உடனடியாக எண்ணப்பட்டன. இதில், 767 வாக்குகள் பதிவாகின. 14 உறுப்பினர்கள் வாக்களிப்பில் பங்கேற்கவில்லை. அதேவேளை, பதிவான 767 வாக்குகளில் 15 வாக்குகள் செல்லாதவை என அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், மாலை 6 மணிக்கு வாக்குகள் எண்ணும் பணி தொடங்கியது. முடிவில் 452 வாக்குகள் பெற்று சிபி ராதாகிருஷ்ணன் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியா கூட்டணி வேட்பாளர் சுதர்சன் ரெட்டி 300 வாக்குகள் பெற்று தோல்வி அடைந்தார்.இதன் மூலம் 152 வாக்குகள் வித்தியாசத்தில் சி.பி.ராதாகிருஷ்ணன் அபார வெற்றிபெற்றார்.
எஞ்சிய 752 வாக்குகளில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர் சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு 452 வாக்குகளையும், காங்கிரஸ் தலைமையிலான இந்தியா கூட்டணி வேட்பாளர் சுதர்சன் ரெட்டி 300 வாக்குகளையும் பெற்றனர். இதன் மூலம் 152 வாக்குகள் வித்தியாசத்தில் பாஜக கூட்டணி வேட்பாளர் சி.பி.ராதாகிருஷ்ணன் அபார வெற்றிபெற்றார். அவர் துணை ஜனாதிபதியாக விரைவில் பதவியேற்க உள்ளார்.