குரங்குகளை விரட்ட கரடி வேஷம் போடும் விவசாயிகளின் வீடியோ வைரல்!

குரங்குகளை விரட்ட கரடி வேஷம் போடும் விவசாயிகளின் வீடியோ வைரல்!

அந்தக் காலத்தில் விலங்குகளும் பறவைகளும் பயிர்களை நாசம் செய்யமால் இருக்க கிராமங்களில் மனிதர்கள் போன்ற பொம்மையை உருவாக்கி அதற்கு கருப்பு சட்டை அணிவித்து வயல்களின் வரப்புகளில் வைப்பது வழக்கம். இதை “சோளக் கொல்லை பொம்மை” என்றும் அழைப்பார்கள். ஆனால், இந்த தந்திரங்கள் அதிக பலனை தரவில்லை.

எனவே உத்தரப்பிரதேச மாநிலம், ல்க்கிம்பூர் கேர் பகுதியைச்சேர்ந்த விவசாயிகள் பழைய முறையை கைவிட்டு புதிய முறையை கையாளத் தொடங்கிவிட்டனர். அதாவது, குரங்குகள் வந்து கரும்பு பயிர்களைச் சேதப்படுத்தாமல் இருக்க, அவற்றை விரட்ட விவசாயிகளே கரடி வேஷம் போடத் தொடங்கிவிட்டனர்.விவசாயிகள் கரடி வேஷத்தில் வயல்களின் நடுவில் நின்று பயிர்களைக் காப்பது போன்ற காட்சிகள் சமூக வலைத்தளத்தில் வெளிவந்துள்ளன.

கரும்பு வயல்களில் புகுந்து குரங்குகள் நாசப்படுத்துவது குறித்து கிராம நிர்வாகத்திடம் புகார் கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாததால், தாங்களே கரடி வேஷம் போடத் தொடங்கிவிட்டதாக விவசாயி ஒருவர் தெரிவித்தார்.

கரும்பு பயிர்களைக் காப்பதற்காக விவசாயிகள் ரூ.4,000 வரை செலவழித்து கரடி வேஷம் போடுவதற்கான ஒப்பனைப் பொருட்களை வாங்கியுள்ளதாகவும் அவர் கூறினார்.எங்கள் பகுதியில் குரங்குத் தொல்லை அதிகரித்து வருகிறது. சராசரியாக 40 முதல் 50 குரங்குகள் எங்கள் பகுதியில் சுற்றித்திரிந்து கரும்பு பயிர்களை நாசம் செய்து வருகின்றன. அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் இல்லை. எனவே நாங்களே கரடி வேஷம் போடுகிறோம். இதற்காக நாங்கள் ஆயிரக்கணக்கில் பணம் செலவழித்து ஒப்பனைப் பொருள்களை வாங்கியுள்ளோம் என்றார் அவர்.

விவசாயிகள் பயிர்களைக் காக்க கரடி வேஷம் போடும் காட்சிகள் விடியோவில் வெளியானதை அடுத்து குரங்குத் தொல்லையை தடுக்க நடவடிக்கை எடுப்பதாக கோட்ட வன அதிகாரி தெரிவித்துள்ளார். இதற்கிடையே இந்த படங்கள் விவசாயிகளின் கவலையை மக்களிடையே எடுத்துச் சென்றுள்ளது. பலரும் விவசாயிகளின் பிரச்னைக்கு தீர்வுகாணப் பட வேண்டும் என வலியுறுத்தினர். சிலர் விவசாயிகளின் நடவடிக்கையை பாராட்டியுள்ளனர்.

கரும்பு பயிர்களை காப்பதற்காக விவசாயிகள் கரடி வேஷம் போட்டு 40 டிகிரி வெயிலில் நிற்பது பார்க்க பரிதாபமாக இருப்பதாக சிலர் கருத்து தெரிவித்துள்ளனர்.

பயிர்களை நாசப்படுத்தும் குரங்குத் தொல்லையிலிருந்து விடுபட ஒரு நல்ல தீர்வு தேவை என்று வேறு சிலர் கருத்து தெரிவித்துள்ளனர். இதனால், பணம் செலவாவதுடன், மன உளைச்சலும் ஏற்படுவதாக அவர்கள் கூறியுள்ளனர்.இது ஒரு சுயசார்பான, புதிய கண்டுபிடிப்பு என்று ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com