ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கிக் கடன் மோசடி வழக்கு தொடர்பாக விடியோகான் குழுமத்தின் தலைவர் வேணுகோபால் தூத், சிபிஐ அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த முறைகேடு தொடர்பாக ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கியின் முன்னாள் தலைமைச் செயலர் சந்தா கோச்சார் மற்றும் அவரது கணவர் தீபக் கோச்சார் இருவரும் இரண்டு நாட்களுக்கு முன்பு கைது செய்யப்பட்டனர்.
தனியார் துறை வங்கியில் தலைமை பொறுப்பில் இருந்த சந்தா கோச்சார், விதிகளை மீறி விடியோகான் குழுமத்துக்கு ரூ.3,000 கோடி கடன் வழங்கி முறைகேடுகளில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதுதொடர்பாக சந்தா கோச்சார், கணவர் தீபக் ஆகிய இருவரையும் காவலில் வைத்து சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது.
2010 மற்றும் 2012-க்கும் இடையில் விடியோகான் குழுமத்துக்கு ஐ.சி.ஐ.சி.யை வங்கி கடன் வழங்கியிருந்தது. இதற்கு கைமாறாக தீபக் நிர்வகித்துவந்த நியூபவர் ரினூவபிள்ஸ் நிறுவனத்தில் ரூ.64 கோடியை வேணுகோபால் முதலீடு செய்தாராம்.
கோச்சார், தாம் தலைமை வகிக்கும் கமிட்டியின் மூலம், அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி விடியோகான் குழமத்துக்கு தேவையான கடன்களுக்கு ஒப்புதல் அளித்ததாக கூறப்படுகிறது.
இந்த புகார் தொடர்பாக வங்கி நிர்வாகம் சந்தா கோச்சாரிடம் விசாரணை நடத்தியது. வங்கியின் கொள்கைகள், ரிசர்வ வங்கி விதிமுறைகளை மீறி அவர் செயல்பட்டு வந்தது தெரியவரவே அவர் 2018 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் பணிநீக்கம் செய்யப்பட்டார். ஆனால், தாம் முறைகேடு எதிலும் ஈடுபடவில்லை என்று சந்தா கோச்சார் கூறிவருகிறார்.