விஜய் மல்லையா, நீரவ் மோடி பொருளாதாரக் குற்றவாளிகள்: பிரிட்டன் அமைச்சர் விளக்கம்!

நீரவ் மோடி
நீரவ் மோடி

கொல்கத்தாவில் நடைபெற்ற ஊழலுக்கு எதிரான ஜி20 நாடுகளின் மாநாட்டில் கலந்து கொண்ட பிரிட்டன் அமைச்சர், ‘விஜய் மல்லையா, நீரவ் மோடி ஆகியோர் பொருளாதார குற்றவாளிகள்’ என்று குறிப்பிட்டுப் பேசினார்.

மேற்கு வங்க மாநிலம், கொல்கத்தாவில் ஊழலுக்கு எதிராக ஜி20 நாடுகளின் அமைச்சர்கள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் ஜி20 நாடுகளைச் சேர்ந்த முக்கியமான துறை அமைச்சர்கள் பங்கேற்றனர். இந்தக் கூட்டத்தில் பாரதப் பிரதமர் நரேந்திர மோடியும் கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது, ‘ஊழலுக்கு எதிராக உலக நாடுகள் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். அதற்காகப் போதிய ஒத்துழைப்பை அளிக்க முன்வர வேண்டும்’ என்று பிரதமர் வலியுறுத்தினார்.

இதைத் தொடர்ந்து நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பிரிட்டன் அமைச்சர் டாம் துகென்தாட்டிடம் விஜய் மல்லையா மற்றும் நீரவ் மோடி குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பிரிட்டன் அமைச்சர், ‘பொருளாதார குற்றவாளிகளை பிரிட்டன் ஒருபோதும் அனுமதிக்காது. அவர்களை தஞ்சமடைந்த நபர்களாக ஏற்றுக்கொள்வது எங்களுடைய முடிவு அல்ல. திருப்பி அனுப்புவது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது. இது தொடர்பாக இந்தியா மற்றும் பிரிட்டன் நாடுகளிடையே சட்ட வழிமுறைகளை பின்பற்ற வேண்டியுள்ளது. தண்டனை பெற்றவர்கள் தப்பிக்க, தஞ்சம் அடைய பிரிட்டனை பயன்படுத்த முடியாது’ என்று குறிப்பிட்டார்.

கிங் பிஷர் நிறுவனத்தின் உரிமையாளர் விஜய் மல்லையா இந்திய பொதுத்துறை வங்கிகளிடம் ஒன்பதாயிரம் கோடி ரூபாய் கடனைப் பெற்று திருப்பி செலுத்தாமல் 2016ம் ஆண்டு பிரிட்டன் நாட்டுக்குத் தப்பி சென்றார். இதைத் தொடர்ந்து வைர வியாபாரி நீரவ் மோடி பஞ்சாப் நேஷனல் வங்கியில் 14,000 கோடி ரூபாய் கடனைப் பெற்றுக்கொண்டு 2018ம் ஆண்டு பிரிட்டன் தப்பிச் சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதைத் தொடர்ந்து இருவரையும் பிடிப்பதற்கு இந்திய அரசு பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது. இந்த நிலையில், ஜி20 நாடுகளுடன் நடைபெற்ற ஊழல் ஒழிப்பு கூட்டத்தில் இது குறித்து பேசப்பட்டு இருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com