

தமிழக சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று முதல்வராக பதவி ஏற்றுள்ள ஜோசப் விஜய் , அரசு முறை பயணமாக தலைநகர் டெல்லிக்கு சென்றுள்ளார். அவர் முதல்வர் பதவியேற்ற பின் , செல்லும் முதல் பயணமாக இருப்பதால் இது அதிக முக்கியத்துவம் பெறுகிறது. அதேநேரம் விஜய்யின் டெல்லி பயணத்தில் தமிழகத்தை சேர்ந்த எந்த ஒரு அமைச்சரும் அவருடன் செல்லவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
விமானம் வழியாக டெல்லிக்கு சென்ற முதல்வர் விஜய், அங்குள்ள தமிழ்நாடு இல்லத்திற்கு முதலில் சென்றார். தமிழ்நாடு இல்லத்தில் உற்சாக வரவேற்பு விஜய்க்கு வழங்கப்பட்டது , அதன் பின்னர் தமிழக காவல்துறையின் அணிவகுப்பு மரியாதையும் அவருக்கு வழங்கப்பட்டது. பின்னர் ரேஞ்ச் ரோவர் காரில் பிரதமர் மோடியை சந்திக்க புறப்பட்டு சென்றார்.
தமிழக முதல்வர் விஜயை சந்திக்க, மாலை 5 மணி அளவில் பாரதப் பிரதமர் நரேந்திர மோடி நேரம் ஒதுக்கி இருந்தார். இந்த சந்திப்பின்போது விஜய்க்கு , முதலில் தனது வாழ்த்துக்களை பிரதமர் தெரிவித்துக் கொண்டார். 15 நிமிடங்கள் வரை நடைபெற்ற இந்த சந்திப்பின்போது தமிழகத்திற்கு தேவையான பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விஜய் பிரதமரிடம் பேசியுள்ளார்.
விஜயின் முதல் கோரிக்கையாக
1.மாநில அரசின் நிகழ்ச்சிகளில் தமிழ்த்தாய் வாழ்த்து முதலில் பாடப்பட வேண்டும்.
2. இலங்கை சிறையில் உள்ள 58 மீனவர்களை மீட்பதுடன், அங்கு பிடிபட்ட தமிழ்நாட்டு மீனவர்களின் 266 படகுகளையும் பெற்று தர வேண்டும் .
3. வான்வழி அமைப்பு மையத்தை தமிழ்நாட்டில் அமைத்திட வேண்டும்.
4. மேகதாதுவில் அணை கட்டுவதை எப்போதும் அனுமதிக்க கூடாது ஆகியவற்றை முதன்மைக் கோரிக்கையாக வைத்திருந்தார்.
பிரதமர் மோடியுடன் சந்திப்பு நிறைவடைந்த பின்னர் தமிழக முதல்வர் விஜய், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்தார். நீண்ட காலமாக தமிழகத்திற்கு தரவேண்டிய நிலுவைத் தொகையை உடனடியாக விடுவிக்குமாறு அவரிடம் வேண்டுகோள் வைக்கப்பட்டிருக்கிறது. தமிழகத்தின் உள் கட்டமைப்பு வசதி , நலத்திட்டங்கள் , சுகாதார வசதிகள் மேம்படுத்துதல் மற்றும் போக்குவரத்து இணைப்பு திட்டங்கள் ஆகியவற்றிற்கு அதிக நிதி தேவைப்படுவதையும் நிதியமைச்சரிடம் எடுத்துரைத்துள்ளார்.
தமிழகத்தில் மத்திய அரசின் பி.எம். ஸ்ரீ திட்டத்தை ஏற்காததால், சில வருடங்களாக கல்வித் துறைக்கு வழங்கப்படும் நிதி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அந்த நிதியை விடுவிக்குமாறும் , விஜய் வலியுறுத்தியுள்ளதாக தகவல்கள் வந்துள்ளது. நிதியமைச்சர் உடன் உடனான சந்திப்பு நிறைவடைந்த பின்னர் மதிய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்திக்க விஜய் திட்டமிட்டிருந்தார். ஆயினும் இந்த சந்திப்பு தற்போது நடைபெறாது என்று தெரியவந்துள்ளது.விஜய்யை சந்திக்க மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நேரம் ஒதுக்கவில்லை என தகவல் வெளியாகியிருந்தது
இந்நிலையில் முதலமைச்சர் விஜய் - மத்திய அமைச்சர் அமித்ஷா இடையேயான சந்திப்பு ரத்து என வெளியான தகவலுக்கு உள்துறை அமைச்சகம் மறுப்பு தெரிவித்துள்ளது.
மத்திய அமைச்சர் அமித்ஷா குஜராத் செல்வதால், முதலமைச்சர் விஜய்யைச் சந்திக்க நேரம் ஒதுக்கவும் இல்லை. ரத்து செய்யவும் இல்லை. மத்திய அமைச்சர் அமித்ஷா குஜராத் செல்வதால் இன்றும் (28.05.2026) சந்திக்க வாய்ப்பில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.