

தமிழக முதல்வராக பதவி ஏற்றுக்கொண்ட ஜோசப் விஜய் இன்று மதியம் , திமுக தலைவர் முக.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றார். அதைத் தொடர்ந்து மதிமுக பொதுச் செயலாளர் வைகோவை அவரது இல்லத்தில் சந்தித்து விஜய் வாழ்த்து பெற்றுள்ளார். விஜயை வரவேற்பதற்காக வீட்டு வாசலில் காத்திருந்த வைகோ, விஜய் பார்த்ததும் அதிக மகிழ்ச்சியில் மாலை போட்டு மரியாதை செய்து , அவரை வீட்டுக்குள்ளே அழைத்து சென்றார். வைகோவின் மகனான துரை வைக்கவும் விஜய்யை வாஞ்சையுடன் அழைத்துச் சென்றார்.
தன் வீட்டில் உள்ள குடும்பத்தினர் அனைவரையும் அழைத்து விஜய்க்கு வைகோ அறிமுகம் செய்து வைத்தார். வைகோ வீட்டில் உள்ள அவரது குடும்பத்தினர்கள் விஜயை பார்த்ததும் மகிழ்ச்சி பரவசத்தில் திளைத்தனர். வீட்டு பணியாளர்கள் அனைவரையும் வர சொன்ன வைகோ, ஒவ்வொருவரையும் விஜய்யிடம் அறிமுகம் செய்து வைத்தார். அப்போது ஒரு பணியாளர் விஜயின் காலில் விழுந்ததும் அவர் பதறி தடுத்து விட்டார். பணியாளர்கள் மிகுந்த மகிழ்ச்சியுடன் சிரிப்புடன் விஜய்க்கு அங்கேயே திருஷ்டி கழித்தனர்.
அதன் பின்னர் வைகோ வீட்டில் இருந்த கட்சிக்காரர்கள் ஒரு சிலரையும் விஜய்க்கு அறிமுகப்படுத்தினார். வைகோ வீட்டு சந்திப்பை நிறைவு செய்த விஜய் , அடுத்ததாக பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் அன்புமணியை அவரது வீட்டுக்கு சென்று சந்தித்தார். முதல் அமைச்சர் விஜயின் வருகையை அறிந்த பாமக தலைவர் அன்புமணியும் , அவரது மனைவியும் தர்மபுரி தொகுதி எம்எல்ஏவுமான சௌமியா அன்புமணியும் அவரை வீட்டு வாசலுக்கு சென்று பூங்கொத்து கொடுத்து வீட்டிற்குள் அழைத்துச் சென்றார்கள்.
அன்புமணியின் வீட்டில் அவரது மகள்கள், பேரக்குழந்தைகள் , உறவினர்கள் , கட்சி பிரமுகர்கள் உள்ளிட்ட ஏராளமானவர்கள் திரண்டு இருந்தனர். வீட்டிற்குள் விஜய்க்கு சால்வை அணிவித்து அன்புமணி மரியாதை செலுத்தினார், பதிலுக்கு விஜய்யும் அன்புமணிக்கு சால்வை அணிவித்து மரியாதை செய்தார். அதன் பின்னர் தன் குடும்பத்தில் உள்ள ஒவ்வொருவரையும் விஜய்க்கு அன்புமணி அறிமுகப்படுத்தினார். அப்போது அன்புமணி குடும்பத்தில் உள்ள அனைவரும் மிகவும் மகிழ்ச்சியுடன், விஜயை பார்த்த உற்சாகத்துடன் காணப்பட்டனர்.
அன்புமணி குடும்பத்தினர் ஒவ்வொருவரும் விஜய்யுடன் புகைப்படங்களை எடுத்துக் கொண்டனர். அதன் பின்னர் சிறிது நேரம் விஜய் உரையாடிவிட்டு கிளம்பினார். இவர்களை தொடர்ந்து தற்போது நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர்
சீமானையும் அவரது இல்லத்தில் விஜய் சந்தித்தார். விஜய்யை மகிழ்ச்சி பெருக்குடன் வரவேற்று அழைத்துச் சென்ற சீமான் அவருக்கு பூங்கொத்தை கொடுத்து வரவேற்றார் , அத்துடன் புத்தகங்களையும் பரிசாக வழங்கினார்.
விஜய் முதல்வராக பதவி ஏற்றதிலிருந்து பல்வேறு கட்சித் தலைவர்களை தொடர்ச்சியாக சந்தித்து வருகிறார். விஜய் எதிரணியில் உள்ள அரசியல் கட்சித் தலைவர்களின் வீட்டிற்கு சென்று சந்தித்தது, தமிழக அரசியல் வட்டாரத்தில் மிகுந்த பேசுபொருளாகியுள்ளது. இதற்கு முன்னர் இது போன்று எந்த ஒரு முதல்வரும் எதிரணியை சேர்ந்த அரசியல் தலைவர் அவர்களின் வீட்டிற்கு சென்றது இல்லை.
விஜயின் அணுகுமுறை தமிழக அரசியலில் நாகரீகமான பண்பினை கொண்டு வந்ததாக அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். மேலும் சமூக வலைதளங்களிலும் விஜயின் பண்பினை பலரும் பாராட்டி வருகின்றனர்.