

இன்று தனது X பக்கத்தில் தமிழக முதல்வர் விஜய் ஒரு அறிக்கை வெளியிட்டிருந்தார் , அந்த அறிக்கையில் சட்டமன்றத்தில் தன்னை தாக்கி பேசியிருந்த திமுகவினருக்கு கடுமையாக பதிலடி கொடுத்திருந்தார்.
அந்த அறிக்கையின் சுருக்கம். மக்களின் பெரும் நம்பிக்கையும் அன்பையும் பெற்ற அரசை ஆதரித்தும் எதிர்த்தும் பல்வேறு சட்டமன்ற உறுப்பினர்கள் பேசினர். ஒரு சிலர் இதில் நடுநிலை வகித்தனர், சிலர் வெளிநடப்பு செய்தனர். நம்பிக்கை தீர்மானம் மீதான வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.
அதில் உங்கள் அரசின் மீது நம்பிக்கை வைத்திருக்கும் சட்டமன்ற உறுப்பினர்கள் எண்ணிக்கை 144 , எதிர்ப்பு 22. நடுநிலை 5. பங்கேற்காமல் வெளிநடப்பு செய்தவர்கள் 60. இதன் மூலம் தமிழக வெற்றி கழகம் அரசு நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்றுள்ளது. நம்மை ஆதரித்த அனைத்து இயக்கத் தலைவர்களுக்கும் மீண்டும் நன்றியினை தெரிவிக்கிறோம்.
வழக்கமாக சட்டமன்ற நிகழ்வுகளில் எதிர்ப்புகளை இருட்டடிப்பு செய்வது வாடிக்கை ஆனால், நாம் ஒளிவு மறைவின்றி செயல்பட்டோம், உலகமே இதை பார்த்துள்ளது. இன்று சட்டமன்றத்தில் எதிர்க்கட்சியினர் வழக்கம் போல் , நாம் பெரும்பான்மையான தமிழக மக்களின் ஆதரவு பெறவில்லை என்ற புளித்து போன வாதத்தினை எதிர்க்கட்சி தலைவர் பேசினார்.
2006 ஆம் ஆண்டு 100% வாக்குகளுடன் 234 தொகுதிகளிலும் வென்று தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்த (?) திமுகவை பார்த்து, தமிழக மக்கள் நமட்டு சிரிப்பு சிரித்தது நாடே அறிந்தது தான். எல்லாம் தெரிந்த ஏகாம்பரமான தி.மு.க.வுக்கு எப்போதும் யதார்த்தம் புரியவில்லை.
இந்த சட்டமன்றத் தேர்தலில் நாம் வாங்கிய வாக்குகள்(தவெக) 34.92% . ஆனால், பல கூட்டணி கட்சிகளின் ஓட்டுகளையும் சேர்த்துக் கொண்டு சில தொகுதிகளில் மட்டுமே திமுக வென்றது என்றாலும், அவர்களின் தனிப்பட்ட வாக்கு சதவீதம் 24.19 % மட்டுமே. கூட்டணியே இல்லாமல் நாம் பெற்ற வாக்கு சதவீதத்தை விட அவர்கள் 10% குறைவுதான்.
தி.மு.க. தனிக் கட்சியாகப் பெற்ற வாக்குகள் ஒரு கோடியே 19 லட்சத்து 29 ஆயிரத்து 144 மட்டுமே. ஆனால், தவெக ஒரு கோடியே 72 லட்சத்து 26 ஆயிரத்து 209 வாக்குகள் பெற்றுள்ளது. தி.மு.க.வை விட 52 லட்சத்து 97 ஆயிரத்து 65 வாக்குகள் நாம் அதிகம் பெற்றுள்ளோம்.
இந்த விவரங்கள் எல்லாம் தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள கணக்குகள். 76% தமிழக மக்களால் புறக்கணிக்கப்பட்ட ஒரு கட்சி திமுக. இவர்களெல்லாம் 35 சதவீத வாக்குகளை பெற்ற ஒரு கட்சியை ஏளனமாக பேசுவதன் காரணம் உங்களுக்கு தெரியாதா என்ன?
மாநில மக்களின் மீது கடன் சுமையை ஏற்றிவிட்டு நம்மை பார்த்து ஆதரவை கடன் பெற்றதாக கூறுவதை என்னவென்று சொல்ல?
மதச்சார்பற்ற நிலைப்பாட்டில் நாம் இருப்பதால்தான் மற்ற கட்சிகள் நம்மை ஆதரித்தன. நமது ஆட்சி அமையக்கூடாது என்று திமுக செய்த வேலைகள் மக்களுக்கு தெரிந்ததுதான். ஆனாலும் ஆட்சிக்கு தடையாக இருக்க மாட்டோம் என்ற கீறல் விழுந்த கார்டில் பெருந்தன்மை பாடலை இசைக்க விடுவது வேறு ரகம்.
நம்பிக்கை இல்லாததால் தான் நாம் இரண்டு தொகுதிகளில் போட்டியிட்டதாகக் கூறினார் எதிர்கட்சி தலைவர். நம் வெற்றியின் வீச்சு கொளத்தூர் தொகுதியில் பார்த்தும் கூடவா புரியவில்லை? தி.மு.க. அமைச்சர்கள் 15 பேரின் தோல்வியைப் பார்த்தும் கூடவா இன்னும் புரிந்து கொள்ளவில்லை?
திமுக 1999 ஆம் ஆண்டு பாஜகவுடன் கூட்டணி பேரம் பேசி, மந்திரி பதவிகள் பெற்றதையும் மக்கள் இன்னும் மறக்கவில்லை. மக்கள் தந்த தோல்வியால் கண்களிலும் காதுகளிலும் வாயிலும் மூக்கிலும் பொறாமையால் தி.மு.க. புகை கக்குவதாகத்தான் மக்கள் பேசிக்கொள்கின்றனர். தோல்வியில் மூழ்கித் திக்கித் திணறிக்கொண்டிருக்கும் தி.மு.க., நம் மீது சேற்றை வாரி இறைக்கத்தான் செய்யும். அதைப் பற்றி நாம் கண்டுகொள்ளவே போவதில்லை. நாம் எப்போதும் மக்கள் நலன் சார்ந்த செயல்களிலும் திட்டங்களிலும் சட்டங்களிலும்தான் ஈடுபடப் போகிறோம். என்று முதல்வர் விஜயின் பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் அந்த எக்ஸ் அறிக்கைக்கு பதிலளித்துள்ளார் உதயநிதி. முதலமைச்சரின் பதிவுக்கு பதிலளிக்கும் விதமாக பதிவிட்டுள்ள அவர், பேரவையில் இருந்தபோது பதிலளிக்காமல், வீட்டுக்கு சென்று அறிக்கை வெளியிட்டு இருக்கும் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு…நாங்கள் வாங்கிய வாக்கு விழுக்காடு எங்களுக்குத் தெரியும். அதனால்தான் மக்கள் தீர்ப்பை மதித்து, எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்திருக்கிறோம். பெரும்பான்மை இல்லாத நிலையிலும், பதவி வெறியோடு ஆளுநர் மாளிகைக்கு நாங்க தினசரி வருகை போட்டுட்டு இருக்கல.
நாங்கள் மக்களால் நிராகரிக்கப்பட்டோம்னு சொல்றீங்களே. அப்படி நிராகரிக்கப்பட்ட எங்களுக்கு விழுந்த வாக்குகளைக் காட்டித்தான் நீங்க முதலமைச்சராவே ஆகியிருக்கீங்க. அதை மறந்துட்டீங்களா முதல்வரே? 2006-ல அமைந்த தி.மு.க. ஆட்சிய பத்தி, பதிவு பண்ணியிருக்கீங்களே,, அந்த சமயத்தில உங்களைப் போல எதிர்த்தரப்பு எம்.எல்.ஏ-க்களைக் கடன் வாங்கியோ, குதிரை பேரத்துல விலைக்கு வாங்கியோ, எந்தக் கட்சியையும் பிளவுபடுத்தியோ, சோஃபா செட் அனுப்பியோ அமைக்கப்பட்ட ஆட்சி அது இல்ல. முழுக்க முழுக்க தி.மு.க. கூட்டணிக் கட்சிகளின் ஆதரவோட - மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சிதான் அது. அதை உங்களுக்குச் சொல்ல மறந்துட்டாங்க போல. திராவிட முன்னேற்றக் கழகம் 2026 தேர்தலில் தோற்றிருக்கலாம். ஆனால், திராவிட மாடல் ஆட்சியின், மக்கள் நலத் திட்டங்கள் தொடரும் என உங்கள் வாயாலேயே சொல்ல வைத்ததுதான் எதிர்கட்சியா எங்களோட வெற்றி எனக் குறிப்பிட்டுள்ளார்.