

தமிழ்நாட்டில் ஆட்சி அமைக்க தவெகவிற்கு ஆதரவு தாருங்கள் என விசிக தலைவர் திருமாவுக்கு தவெக தலைவர் விஜய் கடிதம் எழுதியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழக சட்டசபை தேர்தல் ஒரே கட்டமாக கடந்த 23ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. அதன் முடிவுகள் மே 4ஆம் தேதி வர தொடங்கியதும் விஜயின் தமிழக வெற்றிக்கழகம் அதிக வாக்குகளை பெற்று முன்னிலையில் வந்து, 108 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. மொத்தம் உள்ள 234 தொகுதிகளில் பெரும்பான்மைக்கு 118 இடங்கள் தேவை. ஆனால் தவெகவிற்கு அந்த அளவுக்கு பெரும்பான்மை இல்லாததால் காங்கிரஸ் மற்றும் விசிகவிடம் ஆதரவு கேட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
த.வெ.க தலைவர் விஜய் 2 தொகுதிகளில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளதால், ஒரு தொகுதியில் சட்டப்பேரவை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும்.மேலும், சபாநாயகராகவும் ஒருவரை தேர்தெடுக்க வேண்டும் என்பதால், 108-ஆக உள்ள பலம், 106 என்ற எண்ணிக்கையில் குறையும். அப்போது, 12 சட்டப்பேரவை உறுப்பினர்களின் ஆதரவு தேவை
108 எம்எல்ஏக்களை கொண்டுள்ள தவெக ஆட்சி அமைக்க மேலும் 12 எம்எல்ஏக்கள் தேவை என்கின்ற நிலையில் 2 எம்எல்ஏக்கள் உள்ள விசிகவிற்கு கூட்டணிக்கு வருமாறு தவெக தலைவர் விஜய் கடிதம் அனுப்பியுள்ளார். ஏற்கனவே ஆதரவு கோரி காங்கிரஸ் தலைமையிடம் தவெக தலைவர் விஜய் பேசியதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில், காங்கிரசைத் தொடர்ந்து இந்திய கம்யூனிஸ்ட், விசிகவிடம் ஆதரவு கோரி கடிதம் அனுப்பி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. காங்கிரஸ் கட்சிக்கு 5 தொகுதிகளும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் விசிகவிற்கு தலா 2 எம்எல்ஏக்களும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.