விஜய் சேதுபதி - எல். ராமசந்திரன் ஹாட்ரிக் போட்டோ ஷூட் ‘ தி ஆர்டிஸ்ட் ’

விஜய் சேதுபதி - எல். ராமசந்திரன்  ஹாட்ரிக் போட்டோ ஷூட் ‘ தி ஆர்டிஸ்ட் ’

புகைப்படக் கலைஞர் எல்.ராமசந்திரன், ஒவ்வோர் ஆண்டும் தனித்துவமான தலைப்பைத் தேர்ந்தெடுத்து, ஒரு புகைப்பட தொகுப்பை உருவாக்கி, அதனை மாதாந்திர நாட்காட்டியாக வடிவமைத்து வெளியிடுவதை வழக்கமாகக் கொண்டவர்.

முந்தைய ஆண்டுகளில் ‘ஹூயூமன்’, ‘கலைஞன்’ ஆகிய தலைப்புகளில் நடிகர் விஜய் சேதுபதியைக் காட்சிப்படுத்திய எல்.ராமசந்திரன் இந்த ஆண்டும், தொடர்ந்து மூன்றாம் முறையாக அவரோடு இணைந்து, ஒரு படைப்பாளியைப் பின்புலமாகக் கொண்ட ‘தி ஆர்டிஸ்ட்’ என்ற தலைப்பில் காட்சிகளை வடிவமைத்து, அதனை 2023-ம் ஆண்டுக்கான மாதந்திர நாட்காட்டியாய் வடிவமைத்திருக்கிறார்.

ஓவியர், சிற்பி, கிராஃபிக் ஆர்டிஸ்ட் எனப் பல பரிமாணங்களில் விஜய் சேதுபதியைப் புகைப்படம் எடுத்து, அதனை வண்ணமயமான நாட்காட்டியாகத் தயாரித்திருக்கிறார் எல்.ராமசந்திரன்.

இந்தப் படைப்புக்காக நூற்றுக்கும் மேற்பட்ட கலைஞர்கள், பத்து நாட்களுக்கும் மேலாக அயராது உழைத்து, 12 செட்டுகளைத் தனித்துவமான தலைப்பில் (Theme) வடிவமைத்துள்ளனர்.

“கலையும் கற்பனையும், பல சமூக மாற்றங்களை நிகழ்த்தியுள்ளது; பல முன்னெடுப்புகளுக்கு ஆதாரமாய் இருந்துள்ளது; பலரையும் மகிழ்வித்து வருகிறது; அவ்வாறான எல்லாக் கலைஞர்களுக்கும் இந்த ‘ஆர்டிஸ்ட்’ சமர்ப்பணம். இந்தப் படத்தொகுப்பில் இடம் பெற்றிருக்கும் ஒவ்வொரு தலைப்பிற்கும், அந்தந்த துறை சார்ந்த நிபுணர்களை அணுகி, அதன் நுணுக்கங்களை உள்வாங்கி, அந்தந்தக் கதாபாத்திரமாகவே தன்னை மாற்றியிருக்கிறார் விஜய் சேதுபதி. சர்வதேச தரத்தில், ஒவ்வொரு மாதத்திற்கும் இரண்டு புகைப்படங்கள் என 24 புகைப்படங்களோடு, அழகுற வடிவமைக்கபட்டுள்ள இந்த நாட்காட்டி, உங்கள் உள்ளங்களையும் இல்லங்களையும் அழகாக்கும் என்பதில் சிறிதும் ஐயமில்லை.

கடந்த 2021ம் ஆண்டு கோவிட் ஊரடங்கு சமயத்தில் "HUMAN", 2022ம் ஆண்டு "கலைஞன்" என்று தெருக்கூத்து கலைஞர்களை மையமாகக் கொண்டு வெளியிடப்பட்ட நாட்காட்டி ஆகியன நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.

இம்முறை ‘தி ஆர்டிஸ்ட்’ நாட்காட்டி விற்பனைக்கு வருகிறது. இதன் மூலம் கிடைக்கப் பெறும் வருவாய், காசா அறக்கட்டளை மூலம் கல்வி மற்றும் மருத்துவ நலன்களுக்காக பயன்படுத்தப்படும் என்பதையும் இத்தருணத்தில் மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறோம்” எனக் குறிப்பிடும் எல்.ராமசந்திரன், விஜய் சேதுபதிக்கு தனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்திருக்கிறார்.

ஆர்டிஸ்ட் காலண்டர் store.lramachandran.com, அமேசான் போன்ற இணையதளங்களிலும் மற்றும் முன்னணி புத்தகக் கடைகளிலும் விற்பனைக்கு வந்துள்ளது!

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com