தற்கொலை செய்திகளை ஊடகங்கள் எவ்வாறு கையாளவேண்டும்?

தற்கொலை செய்திகளை ஊடகங்கள் எவ்வாறு கையாளவேண்டும்?
encrypted-tbn0.gstatic.com

பொதுவாக பிரபலமானவர் ஒருவர் இறந்துவிட்டால் அன்றைய தினம் மீடியாக்களில் அது தலைப்புச் செய்தியாக இடம்பெறும். உயிரிழந்த பிரபலத்திற்கு அரசியல் கட்சியினர், திரையுலக பிரபலங்கள் என பல்வேறு தரப்பினர் தங்களுடைய இறுதி அஞ்சலியை செலுத்தவருவார்கள். ஆனால், பிரபலமானவர் ஒருவர் தற்கொலை செய்துகொண்டோலோ அல்லது தற்போது நடிகர் மற்றும் இசையமைப்பாளர் விஜய் ஆண்டனியின் மகள் மீராவின் மரணம்போல் சமூகத்தில் பிரபலமானவர்கள் ஒருவரின் நெருங்கிய சொந்தம் யாராவது தற்கொலை செய்துக்கொண்டால் அது தொடர்பான செய்திகளை ஏராளமான குவியத் தொடங்கும்.

குறிப்பாக இதுபோன்ற பிரபலங்களின் தற்கொலைச் செய்தியில் உண்மையில் என்ன நடந்தது என காவல் துறையினரின் விசாரணைக்கு முன்பே ஊடகத்தினரின் புலன் விசாரணை தொடங்கிவிடும். தற்கொலை செய்துக்கொண்ட பிரபலம் இதனால்தான் இறந்தார், நடிகை என்றால் காதல் தோல்வியினால் தற்கொலை செய்துக்கொண்டார், தயாரிப்பாளர் என்றால் கடன் தொல்லை என ஊடகத்தினரால் மக்களிடத்தில் ஒரு சமூக கருத்து உருவாக்கப்படுகிறது. ஆனால், நிஜத்தில் உயிரிழந்த பிரபலம் எதனால் தற்கொலை செய்துக்கொண்டார் என்பது காவல் துறையினருக்கும் இறந்தவரின் குடும்பத்தினருக்கும் மட்டும் தெரிந்த விஷயமாக இருக்கும்.

இதுதான் தற்போது இசையமைப்பாளர் விஜய் ஆண்டனியின் மகள் மீராவின் தற்கொலை விஷயத்திலும் பின்பற்றப்படுகிறது. 16 வயது மாணவி மனஅழுத்தம் காரணமாக தற்கொலை செய்துக்கொண்டதாக செய்திகள் வெளியாகின்றன. ஆனால், உண்மையான காரணம் என்னவென்பது இன்னும் தெளிவாக தெரியவில்லை. இதன்காரணமாகதான் தற்கொலை தொடர்பான செய்திகளை மீடியாக்கள் எவ்வாறு கையாளவேண்டும் என பிரஸ் கவுன்சில் ஆஃப் இந்தியா பல வழிமுறைகளை வெளியிட்டுள்ளது. அதேபோல் ஊடகங்கள் தற்கொலை தொடர்பான செய்திகளுக்கு அதிகளவு முக்கியத்துவம் கொடுக்கும்போது, அதனுடைய தாக்கம் சமூகத்தில் எதிர்மறையாக சிந்தனைகளை ஏற்படுத்தி ஒருவருக்கு தற்கொலை எண்ணத்தை அதிகரிக்கச் செய்கிறது என்கிறார் பிரபல மனோதத்துவ நிபுணரும்  சிநேஹா தற்கொலை தடுப்பு நிறுவனருமான டாக்டர். லக்ஷ்மி விஜயகுமார்.

Dr. Lakshmi Vijayakumar
Dr. Lakshmi Vijayakumar

இதுகுறித்து சமீபத்தில் கல்கி ஆன்லைன் தளத்திற்கு அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது, ” உலகளவில் இந்தியாவில்தான் அதிகப்படியான தற்கொலைகள் நடைபெறுகின்றன என்பது மிகவும் வருந்தத்தக்க விஷயம். கடந்த இரண்டு வருடங்களாக கடும் உழைப்பை செலுத்தி National Suicide Prevention Strategy ஒன்றினை ஏற்படுத்தினோம். பரிந்துரை செய்தோம். ஆனால், அதனை இன்றுவரை அரசு நடைமுறைப்படுத்தவில்லை.

ஒன்று Universal strategy அதாவது எல்லாருக்குமானது. ஒருவருக்கு தற்கொலை எண்ணம் இருக்கிறதோ இல்லையோ யார் வேண்டுமானாலும் இந்த Universal Strategy படித்து விழிப்புணர்வு பெற்றுக்கொள்ளலாம்.

உதாரணத்திற்கு நம்முடைய நாட்டில் பூச்சி மருந்தை குடித்துவிட்டு தற்கொலை செய்துகொள்வார்கள். அதனால் அதிகப்படியான விஷத்தன்மை கொண்ட பூச்சிக்கொல்லிகளை தடைச் செய்வது என்பது பொதுவாக, எல்லோருக்குமான Universal Strategy  ஆகும். சமீபத்தில் கேரளாவில் எண்டோசல்பான் பூச்சி கொல்லியை தடை செய்தார்கள். அந்த எண்டோசல்பானை தடை செய்ததன் விளைவாக அங்கு தற்கொலை எண்ணிக்கை குறைந்துள்ளது. அதேபோல், தமிழ்நாடு அரசு செயற்கை சாணி கரைச்சல் பவுடரை பயன்படுத்தக்கூடாது என தடைவிதித்துள்ளது.

Universal strategy என்பதற்கு மற்றொரு உதாரணம்... பெரும்பாலான தற்கொலைகளுக்கு காரணமாக இருப்பது குடும்ப பிரச்சனைகள். 30 சதவீத தற்கொலைகள் மது மற்றும் போதை பழக்கத்தினால் ஏற்படுகிறது. எங்கெல்லாம் மது மற்றும் போதைகள் கண்காணித்து தடுத்து நிறுத்தப்படுகிறதோ அங்கெல்லாம் தற்கொலை எண்ணிக்கை குறைய வாய்ப்புள்ளது.

மூன்றாவது Universal strategy ஊடகங்கள் தற்கொலை தொடர்பான செய்திகளை கையாளும் விதம் சம்பந்தப்பட்டது. உதாரணத்திற்கு கடந்த சில வருடங்களுக்கு முன்பு பிரபல பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலை செய்துக்கொண்ட செய்தியை பூதாகரமாக்கினார்கள். இது மாபெரும் பாதிப்பை ஏற்படுத்தியது.  சுஷாந்த் சிங் தற்கொலைக்கு பிறகு நாங்கள் ஒரு ஆய்வு மேற்கொண்டோம். அதில், அந்த நடிகரின் தற்கொலையை ஊடகங்கள் கையாண்ட விதத்தினால் நாட்டில் 20 சதவீதமான தற்கொலைகள் அந்த காலகட்டத்தில் அதிகரித்து இருந்ததை கண்டறியமுடிந்தது.

அதேபோல் அந்த சமயத்தில் 28 சதவீதம் இளைஞர்கள் தற்கொலை செய்துகொள்வது எப்படி என இணையத்தில் தேடியிருந்தனர். இதனால், ஊடகங்கள் தற்கொலை தொடர்பான செய்திகளை விறுவிறுப்பாகவோ அல்லது தங்களுடைய TRP ரேட்டிங்கிற்காகவோ  பெரிதுப்படுத்தக்கூடாது. இதுபோன்ற மிகைப்படுத்தப்பட்ட செய்திகளினால் தற்கொலைகள் அதிகரிக்கின்றன. இதன்காரணமாக ஊடகங்கள் தற்கொலை தொடர்பான செய்திகளை மிக கவனமாக கையாளவேண்டியது அவசியமாகிறது. 

தற்கொலை தொடர்பான செய்திகளை ஊடகங்கள் எவ்வாறு கையாள வேண்டும் என்பதற்கான  நெறிமுறைகளை கொண்டுவந்துள்ளோம். நான் உலக சுகாதார அமைப்பின் உறுப்பினராக இருக்கிறேன். 2019ம் ஆண்டில், Press Council of India அமைப்பு, மாணவர்களின் தற்கொலைகள் தொடர்பான செய்திகளை முக்கியச் செய்தியாக (Headlines news) கொண்டு வரக்கூடாது; தற்கொலை தொடர்பான செய்திகள் நாளிதழ் மற்றும் ஊடகங்களில் இடம்பெற்றால் அத்துடன் தற்கொலை தடுப்புக்கான உதவி மையங்களின் தொலைபேசி எண்களை வெளியிடவேண்டும்; தற்கொலை செய்துகொண்ட மாணவர்களின் படங்களை வெளியிடக்கூடாது; அந்த தற்கொலை முயற்சி குறித்து வரிக்கு வரி விரிவாக எழுதக்கூடாது என பல வழிகாட்டு நெறிமுறைகளை அறிவித்தது. ஆனால், அவை கடைப்பிடிக்கப்படுகிறதா என்பதுதான் இன்று பெரும் கேள்வியாக உள்ளது.

இதையும் படியுங்கள்:
“தற்கொலை தடுப்பு நமது பொறுப்பு!”- சிநேஹா தற்கொலை தடுப்பு மைய நிறுவனர் டாக்டர் லக்ஷ்மி விஜயகுமார்!
தற்கொலை செய்திகளை ஊடகங்கள் எவ்வாறு கையாளவேண்டும்?

குறிப்பாக யூடியூப் சேனல்கள்தான் இந்த வழிகாட்டு நெறிமுறைகளை சுத்தமாக கடைப்பிடிப்பது இல்லை. யூடியூபில் ஒருவர் பற்றிய ஆபாசமான தகவல்கள் வெளியிடப்பட்டுவிட்டாலோ, ஒருவர் குறித்த தனிப்பட்ட விவரங்களை யூட்யூபில் வெளியிட்டுவிடுவேன் என்ற மிரட்டல் காரணமாகவோ, பல தற்கொலைகள் நடைபெறுகின்றன. இதனை கட்டுப்படுத்தவோ அல்லது அதனை நெறிமுறைப்படுத்துவதற்கான வழிமுறைகளை அரசுகள் கடுமையாக்கவேண்டிய அவசியம் உள்ளது” என்றார்.

சிநேகா தற்கொலை தடுப்பு மையத்தை தொடர்புக்கொள்ள: இ மெயில் help@snehaindia.org, தொலைபேசி மூலமாக +91 44 2464 0050  +91 44 2464 0060  தொடர்புகொள்ளமுடியும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com