

அதிமுகவின் தென் மாவட்டங்களின் முக்கிய முகமாக கருதப்படுபவர் சி. விஜய பாஸ்கர். இவர் ஜெயலலிதா ஆட்சி காலத்தில் இருந்து அதிமுக ஆட்சியில் இருக்கும் போதெல்லாம் அமைச்சர் பதவியை சுவைத்தவர். ஜெயலலிதா மறைவிற்குப் பின்னர் அதிமுகவில் தொடர் குழப்பங்கள் ஏற்பட்டு வந்த காலத்தில் கூட எடப்பாடி பழனிச்சாமிக்கு உறுதுணையாக இருந்தவர் விஜயபாஸ்கர்.
கடந்த சட்டமன்றத் தேர்தலில் அதிமுக வரலாறு காணாத அளவில் மிகப்பெரிய தோல்வியை தழுவியது. பல இடங்களில் மூன்றாம் இடத்திற்கும் , ஏராளமான தொகுதிகளில் டெபாசிட்டை இழந்ததும் அதிமுகவினர் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் தேர்தலுக்குப் பின்னர் சி.வி.சண்முகம் மற்றும் வேலுமணி ஆகியோரின் ஒருங்கிணைப்பில் விஜயபாஸ்கர், எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக கொடி பிடித்தார்.
எடப்பாடி அணியை விட இவர்கள் அணியில் அதிக சட்டமன்ற உறுப்பினர்கள் இருந்ததால், ஆட்சியில் உள்ள தவெகவை ஆதரித்து அமைச்சர் பதவிகளை வாங்க திட்டமிட்டு இருந்தனர். அப்போது இந்த அணியில் இருந்த பலரது மாவட்டச் செயலாளர்கள் மற்றும் எதிராக இருந்தவர்களின் பதவிகள் அனைத்தையும் எடப்பாடி பழனிச்சாமி பறித்தார்.
இந்த தருணத்தில் பெரிய ட்விஸ்ட்டாக திமுக கூட்டணியில் உள்ள கட்சிகளின் ஆதரவையே விஜய் முக்கியமாக கருதினார். வாக்கெடுப்பில் இந்த அணியினர் விஜய்க்கு ஆதரவாகவே வாக்களித்தாலும் , அவர்களுக்கு தவெக சார்பில் முக்கியத்துவம் அளிக்கப்படவில்லை. சபாநாயகரும் இவர்களுக்கு ஆதரவாக இல்லாமல் நடுநிலை வகித்தார். இதன் பின்னர் சிவி.சண்முகம் தலைமையில் கூடிய எம்எல்ஏக்களில் பலரும், மீண்டும் எடப்பாடி பழனிச்சாமி அணிக்கு தாவினர்.
இதில் மிகவும் முக்கியமாக அதிமுகவை பிளவு படுத்திய வேலுமணியே, எடப்பாடி பழனிச்சாமிடம் மன்னிப்பு கடிதம் கொடுத்து மீண்டும் கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டார். இந்த சம்பவத்தை தொடர்ந்து சி.வி.சண்முகம் மற்றும் விஜயபாஸ்கர் ஆகியோர் தனித்து செயல்பட்டு வந்தனர். விஜய பாஸ்கர், எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்து வருத்தம் தெரிவித்து இருந்தாலும், அவரிடம் இருந்து பறிக்கப்பட்ட மாவட்ட செயலாளரின் பதவி மீண்டும் வழங்கப்படவில்லை. அதன் பின்னர் கட்சி செயல்பாடுகளில் இருந்து முற்றிலும் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார் விஜய பாஸ்கர்.
திமுக சார்பில் விஜயபாஸ்கரை கட்சியில இணைப்பதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால், இதற்கு உள்ளூர் திமுக முன்னாள் அமைச்சர் ரகுபதி முட்டுக்கட்டை போட்டிருந்தார். திமுகவில் இணைய விஜயபாஸ்கர், மாவட்ட செயலாளர் பதவி மற்றும் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பு இரண்டிற்கும் உறுதி கொடுக்க வேண்டும் என்று பேசியதாக தெரிகிறது.
அதே வேளையில் பாஜகவிலிருந்து விலகிய அண்ணாமலை தனி இயக்கத்தை தொடங்கியதும் அதில் சேருவதற்கு விஜய் பாஸ்கர் அதிக ஆர்வம் காட்டியுள்ளார். சமீப காலமாக மக்களது மனநிலை மாறி உள்ளதால், விஜய்க்கு போட்டியாக அண்ணாமலையை மக்கள் பார்க்கும் வாய்ப்பு உள்ளதாக விஜயபாஸ்கர் கருதினார். மேலும் அங்கு செல்வாக்கு மிக்க நபர்கள் இல்லாததால், தனக்கு அண்ணாமலைக்கு அடுத்த இடம் கிடைக்கும் என்று நம்பினார்.
சூழ்நிலைகள் இவ்வாறு இருக்கையில் , அண்ணாமலை அரசியல் இயக்கம் கட்சியாக மாறுவதற்கு குறிப்பிட்ட காலங்கள் தேவைப்படும், அதுவரைக்கும் அவருடன் இணைந்து இருப்பதைவிட , ஓ பன்னீர்செல்வம் வைத்திலிங்கம் ஆகியோரை பின்பற்றி திமுகவில் இணையும் முடிவில் இருப்பதாக ஊடக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இன்னும் ஒரு சில தினங்களில் விஜயபாஸ்கர் சென்னையில் திமுக தலைவர் ஸ்டாலினை சந்தித்து திமுகவில் இணையுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன.