

விஜய் நடித்துள்ள 'ஜனநாயகன்' திரைப்படத்திற்கு 'U/A' சான்றிதழ் வழங்குமாறு தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை எதிர்த்து, மத்தியத் தணிக்கை வாரியம் (CBFC) மேல்முறையீடு செய்துள்ளது. இந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதிகள் எம்.எம். ஸ்ரீவஸ்தவா மற்றும் அருள் முருகன் அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது.
ஜனநாயகன் படத்தின் தயாரிப்பு நிறுவனமான கே.வி.என் ப்ரொடக்ஷன் சார்பாக வழக்கறிஞர்கள் சதீஷ் பராசரன் விஜயின் சுப்ரமணியன் வாதிட்டு வருகிறார்கள் அதே போல் மத்திய தணிக்கை வாரியத்தின் சொலிசிஸ்டர் ஏ ஆர் எல் சுந்தரேசன் ஆஜராகி தனது தரப்பு வாதத்தை வைத்து வருகிறார்.
இரு தரப்பினரும் தலா அரை மணி நேரம் தங்கள் வாதங்களை முன்வைக்கலாம் என்ற நீதிபதிகள் உத்தரவு பெயரில் தணிக்கை வாரியம் தனது தரப்பு நியாயங்களை முன் வைத்து வருகிறது.
நீதிமன்றத்தின் சரமாரி கேள்விகள்: விசாரணையின் போது நீதிபதிகள் தணிக்கை வாரியத்திடம் பல்வேறு முக்கியக் கேள்விகளை எழுப்பினர்:
'ஜனநாயகன்' படத்தை் பார்த்து முடிவெடுத்தது யார்?
படத்தை நிறுத்தி வைக்க் சொன்னது மும்பை தலைமை அலுவலகமா அல்லது மண்டல அலுவலகமா?
மண்டல அதிகாரி இந்தப் படத்தைப் பார்த்தாரா?
சட்டப்படி படத்தைப் பார்த்து ஆய்வு செய்ய யாருக்கு அதிகாரம் உள்ளது? போன்ற கேள்விகள் முன்வைக்கப்பட்டன.
தணிக்கை வாரியம் சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஏ.ஆர்.எல். சுந்தரேசன் தனது வாதத்தில், "மண்டல அலுவலகத்தில் புகார் எழுந்தால், மும்பை தலைமை அலுவலகம் இறுதி முடிவெடுக்க அதிகாரம் உண்டு. படத்தை மறுஆய்வுக் குழுவிற்கு (Revising Committee) அனுப்ப ஜனவரி 5-ஆம் தேதியே பட நிறுவனத்திற்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. ஆனால், எங்களுக்குப் பதில் அளிக்கக் கால அவகாசம் தராமல் தனி நீதிபதி அவசரமாக உத்தரவிட்டது ஏன்?" எனக் கேள்வி எழுப்பினார். மேலும், படத்தில் 14 இடங்களில் வெட்டுகள் (Cuts) பரிந்துரைக்கப்பட்டது இறுதி முடிவு அல்ல என்றும் அவர் குறிப்பிட்டார்.
படத்தின் தயாரிப்பு நிறுவனமான கே.வி.என் புரோடக்ஷன்ஸ் (KVN Productions) சார்பாக மூத்த வழக்கறிஞர்கள் சதீஷ் பராசரன் மற்றும் விஜயன் சுப்பிரமணியன் வாதிட்டனர். மத உணர்வுகளைப் புண்படுத்தும் காட்சிகள் இருப்பதாகக் கூறப்படுவதை மறுத்த அவர்கள், படத்தை மீண்டும் ஒருமுறை பார்த்துவிட்டுச் சான்றிதழ் வழங்க வேண்டும் எனத் தயாரிப்பாளர் தரப்பில் வலியுறுத்தினர்.
சுமார் 500 கோடி ரூபாய் முதலீடு செய்யப்பட்டுள்ளது என்பதைக் காரணம்காட்டி, சட்ட நடைமுறைகளில் இருந்து எப்படி விலக்கு அல்லது நிவாரணம் கோர முடியும்?" எனத் தணிக்கை வாரியம் கேள்வி எழுப்பியது.
நீதிமன்றத்தின் குறுக்கீடு மற்றும் கருத்து: விசாரணையின் போது நீதிபதிகள் ஒரு முக்கியக் கருத்தைப் பதிவு செய்தனர். "முறையான தணிக்கைச் சான்றிதழைப் பெறாமல், ஒரு படத்தின் வெளியீட்டுத் தேதியைத் தயாரிப்பு நிறுவனம் தானாகவே முடிவு செய்ய முடியாது" என்று நீதிபதிகள் சுட்டிக்காட்டினர்.
தமிழ் சினிமாவில் தணிக்கை தொடர்பாகப் பல சிக்கல்கள் இதற்கு முன் வந்திருந்தாலும், தணிக்கை வாரியமே ஒரு உத்தரவை எதிர்த்து நீதிமன்றத்திற்குச் சென்றிருப்பது இதுவே முதல்முறை எனக் கூறப்படுகிறது. இந்தப் படத்தில் அரசியல் ரீதியான காட்சிகள் மற்றும் வசனங்கள் அதிகம் இருப்பதாகக் கருதப்படுவதால், இந்த வழக்கின் தீர்ப்பு சினிமா மற்றும் அரசியல் வட்டாரத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
வழக்கு விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருவதால், 'ஜனநாயகன்' திரைப்படம் திட்டமிட்டபடி திரைக்கு வருமா என்பதை அறிய ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.