நிலவின் மேற்பரப்பில் பிளாஸ்மா: கண்டுபிடித்த விக்ரம் லேண்டர்!

நிலவின் மேற்பரப்பில் பிளாஸ்மா: கண்டுபிடித்த விக்ரம் லேண்டர்!
Published on

நிலவின் மேற்பரப்பில் குறைந்த அளவு பிளாஸ்மா இருப்பதை விக்ரம் லேண்டர் கண்டுபிடித்துள்ளதாக இஸ்ரோ அறிவித்துள்ளது. நிலவின் தென் துருவத்தில் ஆய்வு செய்துவரும் விக்ரம் லேண்டர் அடுத்தடுத்து பல்வேறு தகவல்களை வெளியிட்டு வருகிறது. அந்த வகையில், நிலவின் மேற்பரப்பில் குறைந்த அளவில், ‘அயனியம்’ எனப்படும் பிளாஸ்மா இருப்பதை, லேண்டரில் பொருத்தப்பட்டுள்ள ரேம்பா-எல்.பி. (RAMBHA-LP) என்ற கருவி கண்டுபிடித்துள்ளது. நிலவின் மேற்பரப்பில் ஒரு சதுர அடிக்கு சுமார் 5 முதல் 30 மில்லியன் எலக்ட்ரான்ஸ் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

நிலவில் சல்பர் உட்பட, ஒன்பது தனிமங்கள் இருப்பதை ஏற்கெனவே ரோவர் கண்டறிந்துள்ளது. மேலும், ஹைட்ரஜனை தேடும் பணியில் பிரக்யான் இருப்பதாக இஸ்ரோ கூறியுள்ளது. இந்நிலையில், ‘சுமார் 2 ஆயிரம் நானோ மீட்டர் தொலைவுக்கு ரோவர் செல்லும் பட்சத்தில், ஹைட்ரஜன் இருப்பது உறுதி செய்யப்படும்’ என்று இஸ்ரோ விஞ்ஞானி சிவசுப்பிரமணியன் தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியில் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

நிலவின் தென் துருவத்தில் கந்தகம் இருப்பதை சந்திரயான்3 பிரக்யான் ரோவர் மீண்டும் உறுதி செய்துள்ளது. ரோவரில் உள்ள ஸ்பெக்ட்ரோஸ்கோப் கருவி, மேலும் சில தனிமங்கள் நிலவில் இருப்பதையும் கண்டறிந்துள்ளதாக இஸ்ரோ அறிவித்திருந்தது. இந்நிலையில், ரோவரில் உள்ள மற்றொரு கருவியும், நிலவின் மேற்பரப்பில் கந்தகம் இருப்பதை உறுதி செய்துள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது. இது தொடர்பான புகைப்படம் அடங்கிய வீடியோவையும் தற்போது இஸ்ரோ வெளியிட்டுள்ளது.

நிலவின் மேற்பரப்பில் உள்ள கந்தகம் இயற்கையானதா அல்லது எரிமலை மற்றும் எரிகற்களால் உருவானதா என்ற கேள்வி எழுந்துள்ளதாகவும் இஸ்ரோ தெரிவித்திருக்கிறது. நிலவின் மேற்பரப்பிலிருந்து 5 சென்டிமீட்டர் நெருக்கத்தில் இருந்து இந்தக் கருவி இயங்கி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, நிலவின் மேற்பரப்பில் பிரக்யான் ரோவர் சுற்றி வரும் வீடியோவை இஸ்ரோ வெளியிட்டுள்ளது. நிலவின் மேற்பரப்பில் பாதுகாப்பான வழியைத் தேடி ரோவர் வலம் வந்ததை லேண்டர் படம் பிடித்துள்ளதாக இஸ்ரோ தெரிவித்திருக்கிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com