

இன்று சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் விஜய் தலைமையில் , நடைபெற்ற தொழில் வளர்ச்சிக் கூட்டத்தில் திருநெல்வேலி மாவட்டம், கங்கைகொண்டானில் ₹15,037 கோடி மதிப்பிலான முதலீடு செய்வதற்கு விக்ரம் சோலார் நிறுவனம் முன்வந்துள்ளது. இதன் மூலம் தென் மாவட்டங்களில் குறிப்பிடத்தக்க வகையில் வேலை வாய்ப்புகள் உருவாகும் என்று கூறப்படுகிறது.
முதல்வர் விஜய் தலைமையிலான புதிய ஆட்சி அமைந்ததில் இருந்து , தமிழகத்தின் வளர்ச்சிக்காக புதிய திட்டங்களை கொண்டு வருவதற்கு , முனைப்பு காட்டி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே தொழில் வளர்ச்சி மிகுந்த மாநிலமான தமிழ்நாட்டில், மேலும் புதிய திட்டங்களை கொண்டு வருவதற்காக,மாநில அரசு , தொழில் நிறுவனங்களை ஊக்குவித்து வருகிறது.
இன்று நடைபெற்ற தொழில் வளர்ச்சி கூட்டத்தில் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள , கங்கைகொண்டான் சிப்காட் தொழில் பூங்காவில் , மின்கல ஆற்றல் சேமிப்பு அமைப்புகளை (Battery Energy Storage Systems - BESS) உற்பத்தி செய்வதற்கான பெரிய அளவிலான தொழிற்சாலை ஒன்றை உருவாக்க, விக்ரம் சோலார் நிறுவனம் முதலீடு செய்ய முன்வந்துள்ளது. இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தினை , தலைமைச் செயலகத்தில் முதல்வர் விஜய்யின் முன்னிலையில் அந்நிறுவன அதிகாரிகள் கையெழுத்திட்டனர்.
இந்த மெகா திட்டத்தின் மதிப்பு சுமார் ₹15,037 கோடியாகும். இதன் பயனாக அந்த சுற்றுப்புற பகுதிகளைச் சேர்ந்த சுமார் 2670 பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் ,என்று கூறப்படுகிறது. இந்த தொழிற்சாலையின் மூலம் தமிழகத்தின் தமிழகத்தின் பசுமை ஆற்றல் மற்றும் உற்பத்தித் துறையில் புதிய மறுமலர்ச்சி உண்டாகிறது. இதற்கு முன்னர் ,தமிழகத்தில் மின்கல ஆற்றல் சேமிப்பு அமைப்புகளை உருவாக்கும் தொழிற்சாலைகள் இந்த அளவிற்கு பெரியதாக இருந்தது இல்லை.
விக்ரம் சோலார் நிறுவனம் தமிழகத்தில் முதல்முறையாக இப்போது கால் ஊன்றவில்லை. அது முன்பே தமிழகத்தில் ஏராளமான தனது தொழிற்சாலைகளை நடத்தி வருகிறது. இந்த நிறுவனம் ஏற்கனவே சூரிய ஒளியை மின்சாரமாக மாற்றக்கூடிய, சோலார் பிவி (solar PV) அமைப்புகளை தயாரிக்கும் தொழிற்சாலைகளை தமிழகத்தில் ஒரகடம் மற்றும் வல்லத்தில் நிறுவியுள்ளது. நீண்ட காலமாக தமிழகத்தில் இயங்கி வரும் ஒரு நம்பகமான நிறுவனமாகவும் வெற்றிகரமான நிறுவனமாகவும் அது இருக்கிறது.
இந்த ஒப்பந்தம் போடப்படுவதற்கு முன்பே, கங்கைகொண்டானில் அந்த நிறுவனம் ஏற்கனவே ஒரு பேட்டரி உற்பத்தி செய்யும் ஆலையையும் நிறுவியுள்ளது. இந்த தொழிற்சாலையில் சமீபத்தில் தான் முதல் 'சோலார் மாட்யூல்' தயாரிக்கும் மணி தொடங்கியுள்ளது. இதன் அடுத்த நிலைக்காக தான் தற்போதைய பெரிய முதலீடும் செய்யப்படுகிறது. மாறிவரும் சுற்றுச்சூழலுக்கு ஏற்ப பேட்டரி தயாரிப்பு நிறுவனங்களின் தேவை அதிகரித்து வருவதால் , இந்த நிறுவனத்தின் புதிய தொழிற்சாலை எரிசக்தி வளர்ச்சிக்கு பங்களிக்கக்கூடிய வகையில் இதன் உற்பத்தி சாதனங்கள் இருக்கும்.
இந்த தொழிற்சாலை உலக தர தொழில்நுட்பத்துடன் ஏராளமான வசதிகளுடன் கட்டமைக்கப்பட உள்ளது. மேலும் இந்த புதிய தொழிற்சாலையில் சூரிய ஒளியில் இயங்கும் மின் கலங்கள் ( Solar battery) வேஃபர்கள் (Wafers) மற்றும் இங்காட்கள் (Ingots) ஆகியவையும் தயாரிக்கப்பட உள்ளது.
சென்னை தலைமைச் செயலகத்தின் நடைபெற்ற இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் பொழுது, தொழில்துறை அமைச்சர் கீர்த்தனா மற்றும் தலைமைச் செயலாளர் சாய் குமார் ஆகியோருடன் விக்ரம் சோலார் நிறுவன அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.