கேரளாவில் லஞ்சம் வாங்கிய கிராம அதிகாரி கைது செய்யப்பட்ட விவகாரத்தில் அவரது வீட்டில் சோதனை நடத்திய போது ரூ. 1 கோடிக்கும் அதிகமான ரொக்கம் மற்றும் வங்கி வைப்பு ஆவணங்களைக் கைப்பற்றினர்.
கேரள மாநிலத்தில், நிலத்தின் இருப்பிட சான்றிதழுக்கு லஞ்சம் வாங்கிய வழக்கில் கைதான, கிராம கள உதவியாளரை'சஸ்பெண்ட்' செய்து மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டுள்ளனர்.
கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டத்தின் பாலக்காயம் கிராமத்தின் அதிகாரியான சுரேஷ் குமார், நேற்று முன்தினம் காலை 2,500 ரூபாய் லஞ்சம் வாங்கிய போது லஞ்ச ஒழிப்புத்துறையினரால் கைது செய்யப்பட்டார். லஞ்ச ஒழிப்பு போலீஸ் டி.எஸ்.பி., ஷம்சுதீன் தலைமையிலான போலீசார், சுரேஷ்குமாரை கையும் களவுமாக பிடித்தனர்.
அவர் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, மன்னார்க்காடு நகரில் உள்ள அவரது வாடகை வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் நடத்திய சோதனையில், அவரது சம்பளக் கணக்கில் இருந்து ரூ.35 லட்சத்துக்கும் அதிகமான ரொக்கம், வங்கியில்நிலையான வைப்புத் தொகையான ரூ.45 லட்சம் மற்றும் ரூ.25 லட்சம் மதிப்புள்ள ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. அவரிடமிருந்து மொத்தமாக ரூ.1 கோடி மதிப்புள்ள ரொக்கம் மற்றும் முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப் பட்டன.
மேலும் அவரது அறையில் இருந்து 17 கிலோகிராம் நாணயங்களும் கைப்பற்றப்பட்டதாக தெரிவிக்கப் பட்டுள்ளது. அட்டை பெட்டிகள் மற்றும் பிளாஸ்டிக் பைகளில் பணம் மற்றும் நாணயங்கள் கண்டுபிடிக்கப் பட்டதாகவும், இவை அனைத்தும் லஞ்ச பணம் மூலம் வாங்கி குவிக்கப்பட்டதாக சந்தேகிக்கப் படுவதாகவும் லஞ்ச ஒழிப்பு அதிகாரிகள் தெரிவித்தனர்.