
குஜராத் மாநிலம் வதோதராவிற்கு அருகில் உள்ள ஜாஃப்ராபுரா கிராமத்தில் கடந்த திங்கள் அன்று புதிதாக ஈன்ற இரண்டு குட்டிகளுடன் சிறுத்தை ஒன்றைக் கண்டிருக்கிறார்கள் கிராமவாசிகள். அந்தப்பகுதியில் புதிதாக சில கட்டுமானப்பணிகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதால் சிறுத்தை தனது பழைய வாழ்விடத்தில் இருந்து இடம்பெயர்ந்து இங்கே வந்திருக்கக் கூடும் என்று கிராமத்தினர் கருதினர். அதே சமயம் மறுநாள் பார்க்கையில் தாய் சிறுத்தையைக் காணோம். ஒரே ஒரு குட்டி மட்டும் அங்கிருந்த வயல்வெளியில் சுற்றிக் கொண்டிருந்ததை கிராம மக்கள் பார்க்க நேர்ந்தது . ஒருவேளை மனித நடமாட்டத்தின் காரணமாக சிறுத்தை இடம்பெயர்ந்து தனது குட்டிகளையும் இடம்பெயர்க்க முயன்றிருக்கலாம். அப்போது ஏதாவது தடங்கல் காரணமாக ஒருகுட்டியை மட்டும் அது தவறவிட்டிருக்கக் கூடும். தவற விடப்பட்ட குட்டி தன் போக்கில் கிராமத்துக்கு வெளியில் வயலில் சுற்றிக் கொண்டிருப்பதைக் கண்ட கிராமத்தினர் அது குறித்து வன விலங்கு ஆர்வலர் ஹேமந்த் வாத்வானா மற்றும் வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர்.
அவர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தாய் சிறுத்தையை தேடினர். ஆனால் அவர்களால் அதைக் கண்டுபிடிக்க முடியவில்லை. ஆயினும் கிடைத்த ஒற்றை சிறுத்தைக் குட்டியை அவர்கள் கால்நடை மருத்துவரிடம் காட்டில் அதன் உடல்நலனைப் பரிசோதிக்க மறக்கவில்லை. சிறுத்தைக் குட்டி நலமுடனே இருப்பது தெரிந்ததும் அதை மீண்டும் தாயுடன் இணைப்பது என முடிவு செய்தனர்.
அதற்காக குட்டியின் நடமாட்டத்தைக் கண்காணிக்க அதை ஒரு கூடையில் வைத்து கிராமத்தை அடுத்த திறந்த வெளியில் விட்டனர். அதன் அருகில் இருந்த மரத்தில் சிசிடிவி காமிரா பொருத்தினர். வாத்வானாவின் தொலைபேசி காமிராவை சிசிடிவியுடன் இணைத்து தாய் சிறுத்தை வருகிறதா என்று தூரத்தில் இருந்து கவனித்துக் கொண்டிருந்தனர்.
முதல் இரண்டு நாட்களில் கண்காணிப்பில் காத்திருந்து, காத்திருந்து கண் பூத்துப் போனது தான் மிச்சம். தாய் சிறுத்தை, தனது குட்டியைத் தேடி வரவே இல்லை. கிராம மக்களின் ஆர்வக் கோளாறு காரணமாக அவர்கள் அடிக்கடி சிறுத்தைக் குட்டி இருந்த இடத்திற்கு நிமிடத்துக்கு ஒரு தரம் சென்று பார்த்து விட்டு வந்ததால் அவர்களை மோப்பம் பிடித்துக் கொண்டு தான் சிறுத்தை அங்கு வராமலிருக்கிறதோ என்றொரு அச்சம் வனத்துறையினருக்கு எழுந்தது .
அதனால் கிராம மக்களை அருகில் செல்ல விடாமல் வனத்துறையினர் தடுக்க வேண்டியதாயிற்று.
ஒருவழியாக புதன் கிழமை இரவு தாய் சிறுத்தை திரும்பி வந்து தன் குட்டியை முகர்ந்து பார்த்தது. ஆனால், ஏனோ உடனேயே அது திரும்பிச் சென்று விட்டது. இதைக் கண்டு பகல்நேரத்தில் குட்டியைப் பாதுகாத்து வந்த வனத்துறையினர் ஏமாற்றமடைந்தனர். தாய் சிறுத்தையின் செயலால், அது தன் குட்டியைப் புறக்கணித்து விட்டது. இனி அது அந்தக் குட்டியைத் திரும்பியும் பார்க்காது என்று வாத்வானாவும், வனத்துறையினரும் நினைத்தனர்.
ஆனால், அவர்களது நினைப்பைப் பொய்யாக்கி ஒருவழியாக வியாழன் இரவு மீண்டும் வந்த சிறுத்தை குட்டியை நெருங்கிச் சென்று மெதுவாகத் தன் தாடையில் பற்றியபடி மீண்டும் புதர்களுக்குள் சென்றது.
கிராம மக்களுக்கு மகிழ்ச்சி தாங்கவில்லை.அவர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த தருணம் இது தானே!
தாய் சிறுத்தை குட்டியை எடுத்துச் சென்றதுமே கிராமத்தில் ஒரே ஆரவாரமாக இருந்தது. மக்கள் மிகுந்த நெகிழ்ச்சியுடன் இதைப்பற்றிப் பேசிக் கொண்டே கலைந்து சென்றனர்.