கூகுள் மேப்ஸ் செயலியில் அவ்வப்போது பயனர்களுக்கு பயனுள்ள புதிய அப்டேட்களை வெளியிட்டுக் கொண்டே இருக்கின்றனர். அந்த வகையில் புதியதாக கிராமப் புறங்களிலும் ஸ்ட்ரீட் வியூவ் பார்த்துக் கொள்ளலாம் என்ற அம்சம் வெளிவந்துள்ளது.
முன்பெல்லாம் ஒரு இடத்திற்குச் செல்ல வேண்டும் என்றால், அதன் வழியைத் தேடிக் கண்டுபிடித்து செல்வது கடினமாக இருந்து வந்தது. யாரிடமாவது அட்ரஸ் கேட்டால் ஆளாளுக்கு ஒவ்வொரு வழியைச் சொல்லி, நம்மைக் குழப்புவார்கள். ஆனால் தற்போது முன்பின் தெரியாத இடத்திற்குச் செல்ல வேண்டும் என்றாலும், வெறும் முகவரியை வைத்துக் கொண்டு கூகுள் மேப் உதவியோடு நம்மால் செல்ல முடியும்.
நாம் செல்ல வேண்டிய இடத்தை அதில் உள்ளீடு செய்தால் போதும், எந்த வழியில் சென்றால் விரைவாகச் செல்லலாம், எங்கே டிராபிக் அதிகமாக இருக்கிறது என அனைத்தையும் விலாவாரியாக தெளிவுபடுத்திவிடும். அந்த அளவுக்கு கூகுள் மேப் செயலியானது துல்லியமாக பிறருக்கு வழிகாட்டுகிறது.
ஸ்ட்ரீட் வியூவ் என்ற அம்சம் ஏற்கனவே கூகுள் மேப் செயலியில் வந்துவிட்டது. இதைப் பயன்படுத்தி பயனர்கள் தாங்கள் பார்க்க விரும்பும் இடத்தை 360 டிகிரி கோணத்திலும் ஆராய்ந்து பார்க்கலாம். கடந்த 2016ம் ஆண்டு பயனர்களின் தனியுரிமைக் கொள்கையை மீறியதாக இந்தியாவில் இதைத் தடை செய்துவிட்டனர். பின்னர் ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு 2022ல் தான் ஸ்ட்ரீட் வியூவ் வசதிக்கான அனுமதி மீண்டும் கிடைத்தது. எனவே பெங்களூருவில் சில நகரங்களில் இதன் முதற்கட்ட சோதனை நடத்தப்பட்டது.
சமீபத்தில் வந்த தகவலின்படி, கூகுள் மேப் செயலியின் ஸ்ட்ரீட் வியூவ் அம்சமானது இந்தியாவிலுள்ள முக்கிய நகரங்கள் மற்றும் கிராமங்களிலுள்ள ஒவ்வொரு தெருவுக்கும் செயல்படும் என சொல்லப்பட்டுள்ளது. இதில் சிறுக சிறுக இந்தியாவில் உள்ள அனைத்து இடங்களின் புகைப்படங்களும் 360 கோணத்தில் படம் எடுக்கப்பட்டு விரைவில் பதிவேற்றப்படும் என்றும் தெரிவிக்கப் பட்டுள்ளது.
இந்த புதிய வசதியை ஆண்ட்ராய்டு மற்றும் ஐபோன் பயனர்கள் எந்த தடையுமின்றி பயன்படுத்தலாம். மேலும் கூகுள் மேப்ஸ் இணையதளத்திலும் இது வேலை செய்யும். இந்த வசதியை பயன்படுத்தி இந்தியாவில் உள்ள பல அடையாளச் சின்னங்கள், அருங்காட்சியகங்கள், அரங்கங்கள், இயற்கை அதிசயங்கள், முக்கிய வீதிகள், உணவகங்கள் போன்றவற்றை 360 டிகிரி கோணத்தில் யார் வேண்டுமானாலும் பார்த்து அனுபவிக்க முடியும்.
இது முற்றிலும் புதுமையான அனுபவத்தை பயனர்களுக்கு வழங்கும் என கூகுள் நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.