வைரலான விளம்பர நோட்டீஸ்!

மும்பை பரபர!
வைரலான விளம்பர நோட்டீஸ்!

மும்பை சத்ரபதி சிவாஜி டெர்மினஸ் பகுதியிலிருக்கும் மாநகராட்சி ஓட்டலை, சித்தி விநாயக் என்ற கேட்டரிங்  நிறுவனம், ஒப்பந்தத்தின் அடிப்படையில் நடத்தி வருகிறது.

நிர்வாகம் சார்பில் விளம்பர நோட்டீஸ் ஒன்று ஹோட்டலில் ஒட்டப்பட்டுள்ளது. அதில்,

“ஓட்டலில் இருந்து அறுசுவை உணவு சாப்பிட்ட பின் தட்டு அல்லது கரண்டியைத் திருப்பித் தர மறந்திருப்பீர்கள். இல்லையெனில் உங்கள் பையினுள் தற்செயலாக நழுவ விட்டிருக்கலாம். நீங்க வேலைக்குச் செல்கையில், உங்கள் தாயார் கொடுத்த Lunch Dubba மற்றும் பிற பொருட்களை வீட்டிற்குத் திருப்பி கொண்டு செல்வதுபோல, ஹோட்டல் பொருட்களை உபயோகித்த பின் திருப்பி வைக்க வேண்டும் என்பது முக்கியமென்று நினைக்கவில்லையா? இதுவரை சுமார் ஏழாயிரம் கரண்டிகள்; நூற்றுக்கும் மேற்பட்ட தட்டுகள்: கண்ணாடி தம்ளர்களைக் காணவில்லை. எனவே, வாடிக்கையாளர்கள் ஹோட்டலுக்கு வெளியே தட்டு, கரண்டி, தம்ளர்களை எடுத்துச் செல்ல வேண்டாம்” என்று இருந்ததை ஒரு செய்தியாளர் டிவிட்டரில்  பகிர வைரலோ வைரல்!

(விழிப்புணர்வு செய்தி! கொண்டு போகாதீங்கப்பா!)

மோட்டார் பைக் செம சேஸ்!

கிராஃபிக் டிசைனராக பணிபுரியும் பெண் ஒருவர் தனது வேலை முடிந்ததும் மும்பை சாந்தா குரூசில் இருக்கும் தனது வீடு செல்ல, ஜுஹு பஸ் ஸ்டாண்டில் பஸ்சுக்காகக் காத்து நின்றார். அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த ஒருவன் இளம்பெண்ணின் கையிலிருந்த மொபைலை பறித்துக்கொண்டு ஓட, அந்தப் பெண், அந்த வழியாக வந்த ஆட்டோவில் ஏறியமர்ந்து மோட்டார் பைக்கைத் தொடர்ந்தார். நெருங்க முடியவில்லை. உடனே ஆட்டோவின் அருகே வந்த மோட்டார் சைக்கிள் பயணியை மறித்து, விபரம் கூறி தனக்கு உதவுமாறு கேட்க, அந்த இளைஞனும், பின் இருக்கையில் அவளை அமரவைத்து, திருடனை விரட்டிச் சென்றார்.

சின்னச் சந்து வழியே திருடன் தப்பி விட, டி.என். நகர் (அந்தேரி) போலீஸ் நிலையத்துக்குச் செல்லுமாறு இளைஞனை வேண்ட, அவ்வாறே செல்கையில், மோட்டார் சைக்கிள் திருடனைப் பார்த்துவிட்டாள் அந்தப் பெண். இளைஞனிடம் கூற, இருவரும் மெதுவாகச் சென்று, திருடனைப் பிடித்து போலீஸில் ஒப்படைத்து, வழக்கு பதிவு செய்தனர்.

(செம சேஸ்! தேவை துணிச்சல்!)

அநுபவி க்ரேப்ஸை அநுபவி!

வி மும்பை APMC (ஏபிஎம்சி) மார்க்கெட்டில் திராட்சை பழத்தின் (Grapes) வரத்து அதிகமாக இருப்பதால் சில்லறை விற்பனையில் கிலோ 30/-க்கு விற்பனை செய்யப் படுகிறது. மார்க்கெட் நிர்வாகிகள் கூறியதாவது:

“தற்சமயம் சந்தைக்கு 50 – 60 வாகனங்கள் மூலம் 820 டன் திராட்சை வந்துள்ளதால், விலை குறைந்துள்ளது.

திராட்சை சீசன் நவம்பர் முதல் மார்ச் – ஏப்ரல் வரை நீடிக்கும். தரம், அளவு மற்றும் இனத்தைப் பொறுத்து விலை மாறுபடும். கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு தரம் மிகவும் சிறப்பாக உள்ளது. நாசிக், சதாரா, தஸ்காவ், சாங்கிலி, சோலாப்பூர் போன்ற பகுதிகளிலிருந்து திராட்சை வரத்து அதிகம் இருப்பதால், 10 கிலோ எடை கொண்ட வெள்ளை திராட்சை பெட்டி 300 முதல் 500 வரை விற்பனை செய்யப்படுகிறது. திராட்சைப் பழத்திலிருந்து கிஸ்மிஸ் செய்யப்படுவதால், அநேகர் இதை அதிகமாக வாங்குகின்றனர்.

(க்ரேப்ஸ் ஸீஸனை அனுபவி ராஜா அனுபவி!)

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com